கிளர்ச்சி கூட்டணி ஜோன்சனை தோற்கடித்தது

பிரெக்ஸிட் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜொன்சன், பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த யோசனைத் திட்டம் ஆளும் கன்சவேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், ஒப்பந்தமின்றி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கான சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட முதலாவது நடவடிக்கை தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் 301 வாக்குகள் ஆதரவாகவும் 328 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் யோசனைத் திட்டத்தை தோற்கடிப்பதற்காக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் 21 பேர் எதிர்க்கட்சியினருக்கு ஆதரவளித்துள்ளனர்.

இதனடிப்படையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கான தினத்தை எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதி வரை தாமதப்படுத்துவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.

பொதுத் தேர்தலுக்கு முன்னர் இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் அவசியம் என தொழிற்கட்சி தலைவர் ஜெரம் கொபின் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த செயற்பாடுகளால் பிரெக்ஸிட் நடவடிக்கைகளின் நிர்வாகம் ஐரோப்பிய சங்கத்திற்கே கிடைக்கும் என பிரதமர் போரிஸ் ஜொன்சன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா, ஒப்பந்தமின்றியோ அல்லது ஒப்பந்தத்துடனோ ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான கால அவகாசம் எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.