சீனப் பெருஞ்சுவருக்கு சவாலாக கட்டப்பட்ட “மால்டா பெருஞ்சுவர்“

266
105 Views

உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் பற்றி நாம் எல்லோரும் அறிந்திருக்கின்றோம். ஆனால் யாரும் அறியாத “மால்டா பெருஞ்சுவர்“ பற்றி இப்போது பார்ப்போம்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் மால்டா (தீவு நாடு), மக்கள் கூட்டம் அதிகம் நிறைந்த பகுதிகளில் ஒன்று. அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு சதுர கிலோமீற்றருக்கு 6,700 பேர் வாழும் நாடாக இது மாறும் என மதிப்பிடப்பட்டுள்ளது.,

மத்தியதரைக் கடல் பகுதி தீவு நாட்டை பார்வையிடும் சுற்றுலா பயணிகள் அதிகரித்து வரும் நிலையில், “மால்டா பெருஞ்சுவர்“ பற்றி பல ஆண்டுகள் தெரியாமலேயே இருந்தது.

மால்டா தீவின் வடக்குப் பகுதி முழுவதும் பல தசாப்தங்களாக கைவிடப்பட்ட நிலையில் ஓர் அற்புதமான எல்லை இருந்துள்ளதை நம்ப முடியவில்லை. அப்படிப்பட்ட  “மால்டா பெருஞ்சுவர்“ பற்றிய சில முக்கிய தகவல்களை இங்கு தருகின்றோம்.

12 கிலோமீற்றர் நீளத்தில் பல கோட்டை அரண்களின் வலையமைப்போடு மால்டா தீவின் வடக்குப் பகுதி முழுவதும் இந்த  “மால்டா பெருஞ்சுவர்“ அமைந்துள்ளது. ஆனால், பல தசாப்தங்களாக இது பற்றி பலருக்கும் தெரியாமலே இருந்து வந்திருப்பது வியப்பை ஏற்படுத்துகின்றது.

விக்டோரியா லைன்ஸ் என்று அழைக்கப்படும் இந்த  “மால்டா பெருஞ்சுவர்“ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக, மேற்கில் ஃபோம் இர்-ரிக் (Fomm ir-Rih) தொடங்கி கிழக்கில் மெட்லீனா (Medliena) வரை சுமார் 12 கிலோமீற்றர் மால்டாவின் பாதுகாப்பு சுவர் தொடராக இது விரிகின்றது. ஆனால், வாலெட்டாவின் கிராண்ட் துறைமுகம் அல்லது இடைக்கால நகரமான மெதீனாவைப் போலல்லாமல் விக்டோரியா லைன்ஸ் பற்றி சிலரே கேள்விப்பட்டிருக்கின்றார்கள்.

சீனப் பெருஞ்சுவருக்கு மால்டாவின் பதிலடியாக 19ஆம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் பிரிட்டன் படையால் கட்டப்பட்டது தான் விக்டோரியா லைன்ஸ் இந்த வலையமைப்பில் கோட்டைகள் பீரங்கித் தொகுதிகள், நுழைவாயில்கள், உயரத்தில் இருந்து ஷெல் தாக்குதல் நடத்தும் நிலைகள் மற்றும் இவை அனைத்தையும் ஒன்றாக இணைக்கும் தொடர்ச்சியான  காலாட்படை தங்குமிடங்கள் ஆகியவை உள்ளன.

1800களில் றோயல் பொறியியலாளர்களால் கட்டப்படத் தொடங்கிய விக்டோரியா லைன்ஸ், மகாராணி விக்டோரியாவின் பொன்விழா ஆண்டான 1987இல் திறக்கப்பட்டது. தனித்தனியாக கட்டப்பட்ட கோட்டை அரண்களை இணைத்து பிரிட்டன் இராணுவம் ரோந்து செல்வதற்கு தொடர் பாதையை வழங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.  பிரான்ஸ் மற்றும் அப்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இத்தாலி ஆகிய பிற நாடுகள், பிரிட்டனின் முக்கிய தளங்களை முற்றுகையிடலாம் என்பதால் பிரிட்டன் அப்போது மிகவும் எச்சரிக்கையோடு செயற்பட்டு வந்தது.

ஆபிரிக்காவை சுற்றி செல்லாமல் தங்களின் ஆதிக்கத்தில் வைத்திருந்த இந்தியா மற்றும் ஆசிய நாடுகளுக்கு செல்ல ஐரோப்பிய நாடுகளை அனுமதிக்கும் சூயஸ் கால்வாயை 1869ஆம் ஆண்டு பிரிட்டன் திறந்தது.  இதுதான், விக்டோரியா லைன்ஸை கட்டுவதற்குப் பின்னால் இருந்த முக்கிய காரணமாகும். அதிக கப்பல்கள் மத்தியதரைக் கடலில் பயணம் மேற்கொள்வது, மால்டாவின் மீது பிரிட்டனின் வலிமை அதிகரிக்க முக்கியமாக அமைந்தது.

மேற்கில் இயற்கையான பாறைகளும், தெற்கில் கோட்டை அரண்களும் தீவின் பிற பகுதிகளைப் பாதுகாத்தன. ஆனால், கிழக்கிலுள்ள வாலெட்டா கிராண்ட் துறைமுகத்தின் பின்னால் இருந்து தொடுக்கப்படும் தரை தாக்குதல்களும், கடற்படை நிலைகளும், பிரிட்டன் கடற்படைக்கு பேரழிவை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் இருந்தது. மால்டாவின் வடக்கு பகுதியோரம் மட்டுமே தாக்குதலுக்கு உள்ளாகும் ஆபத்து நிறைந்த பகுதியாக இருந்தது.

பிரிட்டன் அச்சம் கொண்டிருந்தாலும், விக்டோரியா லைன்ஸ் வழியாக எதிரிகள் யாரும் நுழைய முற்படவில்லை. 1907ஆம் ஆண்டு இது கைவிடப்பட்டதோடு, அங்கிருந்த படை துருப்புகள் தீவின் கடலோர பகுதிகளுக்கு மாற்றப்பட்டன. இரண்டாம் உலகப்போரின் போது நாஜிகள் ஆக்கிரமிப்பின் போது, விக்டோரியா லைன்ஸ் புதுப்பிக்கப்பட்டது. இரண்டாவது பாதுகாப்புக் கோடாக புதிய பாதுகாப்பு நிலைகள் அமைக்கப்பட்டன. ஆனால், இந்தப் போரிலிருந்தும் இந்தக் கோட்டை அரண்கள் தப்பின.

பெரிதாக வெளியே தெரியாமல் இருந்த விக்டோரியா லைன்ஸின் நிலைமை இனிமேல் மாறப்போகின்றது. இது பற்றி வெளியே தெரியவந்து மாபெரும் பிரபலம் ஏற்படத் தொடங்கிய பின்னர்தான், தங்கள் நாட்டில் மகத்தான, கண்டுகொள்ளப்படாத பொக்கிஷம் உள்ளது என மால்டா விழிப்படையத் தொடங்கியுள்ளது.. இந்த ஆண்டு இறுதியில் இந்த இடத்தை சுற்றுலா பயணிகளுக்கு அறிமுகம் செய்ய மால்டா சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here