காஷ்மீரில் இந்திய படையின் சித்திரவதைகள் – பிபிசி நேரடித் தகவல்

370
206 Views

”என் உடலின் அத்தனை பாகங்களிலும் அவர்கள் அடித்தார்கள். எங்களை உதைத்தார்கள். லத்தியால் அடித்தார்கள். மின்சார அதிர்ச்சி அளித்தார்கள். கேபிள்களால் எங்களை தாக்கினார்கள். எங்கள் பின்னங்கால்களில் அடித்தார்கள். நாங்கள் மயங்கி விழுந்தபோது, எங்களுக்கு மீண்டும் மின்சார அதிர்ச்சி கொடுத்து சுயநினைவுக்கு கொண்டு வந்தார்கள். அவர்கள் எங்களை லத்தியால் அடித்தபோது நாங்கள் க கதறினோம். எங்கள் வாயில் மண்ணை அடைத்து மூடினார்கள்.”

இப்பகுதிகளை நேரில் பயணம் மேற்கொண்ட பிபிசி செய்தியாளர் தான் பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் இங்கு விபரிக்கின்றார் ..

‘கடந்த சில ஆண்டுகளாக இந்திய எதிர்ப்பு தீவிரவாதத்தின் மையமாக உருவாகியுள்ள காஷ்மீரின் தெற்கு பகுதியில் குறைந்தது 6 மாவட்டங்களுக்கு நான் சென்றேன். இங்குள்ள கிராமங்களில் எல்லாம் பலரும் தங்கள் இடங்களில் நடந்த இரவு சோதனைகள், பிரம்படி மற்றும் சித்ரவதை ஆகியவை குறித்து கூறிய ஒரேமாதிரியான சம்பவங்கள் குறித்து நான் கேட்டேன்.

நோயாளிகளின் காயம் எப்படி இருந்தாலும், அதுபற்றி பத்திரிகையாளர்களிடம் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் பேச விரும்புவதில்லை. ஆனால், கிராம மக்கள் பாதுகாப்பு படையினரால் ஏற்பட்டதாக குற்றம்சாட்டி தங்களின் காயத்தை என்னிடம் காட்டினர்.

டெல்லி மற்றும் காஷ்மீர் இடையே பல தசாப்தங்களாக இருந்துவந்த ஓர் ஏற்பாட்டை ரத்து செய்து சர்ச்சைக்குரிய முடிவை இந்திய அரசு அறிவித்த சில மணிநேரங்களில், வீடுவீடாக சென்று ராணுவம் சோதனை நடத்தியதாக ஒரு கிராமத்தில் இருந்த மக்கள் தெரிவித்தனர்.

அந்த கிராமத்தில் இருந்த இரண்டு சகோதரர்கள் கூறுகையில், நாங்கள் காலையில் விழித்தவுடன் எங்களை கிராமத்துக்கு வெளியே ஓரிடத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு ஏற்கனவே எங்கள் கிராமத்தை சேர்ந்த பலர் இருந்தனர்.

நாங்கள் சந்தித்த ஒவ்வொரு நபரும் எதிர்வினையை எண்ணி தங்களின் அடையாளத்தை வெளியிட அஞ்சியதுபோல் இவர்களும் தங்கள் அடையாளத்தை வெளியிட அஞ்சினர்.

”அவர்கள் எங்களை அடித்தனர். நாங்கள் என்ன தவறு செய்தோம் என்று அவர்களை கேட்டோம். எங்களை பற்றி எங்கள் கிராம மக்களிடம் நீங்கள் கேட்கலாம். ஆனால் நாங்கள் கூறிய எதையும் அவர்கள் கேட்கவில்லை. எங்களை தொடர்ந்து அடித்து கொண்டே இருந்தனர்” என்று அதில் ஒருவர் கூறினார்.

”என் உடலின் அத்தனை பாகங்களிலும் அவர்கள் அடித்தார்கள். எங்களை உதைத்தார்கள். லத்தியால் அடித்தார்கள். மின்சார அதிர்ச்சி அளித்தார்கள். கேபிள்களால் எங்களை தாக்கினார்கள். எங்கள் பின்னங்கால்களில் அடித்தார்கள். நாங்கள் மயங்கி விழுந்தபோது, எங்களுக்கு மீண்டும் மின்சார அதிர்ச்சி கொடுத்து சுயநினைவுக்கு கொண்டு வந்தார்கள். அவர்கள் எங்களை லத்தியால் அடித்தபோது நாங்கள் க கதறினோம். எங்கள் வாயில் மண்ணை அடைத்து மூடினார்கள்.”

ஆகஸ்ட் 9-ம் தேதி இந்தப் போராட்டம் நடக்கவே இல்லை என்று தொடக்கத்தில் இந்திய அரசு மறுத்தது.

“எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறினோம். ஏன் இதை செய்கிறார்கள் என்று கோட்டோம். ஆனால் அவர்கள் நாங்கள் சொன்னதை கேட்கவே இல்லை. எங்களை அடிக்காதீர்கள், சுட்டு விடுங்கள் என்று நான் கூறினேன். அவர்களின் சித்ரவதை தாங்க முடியாத அளவிற்கு இருந்தது. என் உயிரை எடுத்துக் கொள்ளும்படி, நான் கடவுளை வேண்டிக் கொண்டேன்.”

மற்றொரு ஒரு இளம் கிராமவாசி, கூறுகையில், “பாதுகாப்புப் படையினர் ‘எங்களை பார்த்து கல்லை எறிந்தவர்கள்’ யார், அவர்கள் பெயரை கூறுமாறு கேட்டுக் கொண்டே இருந்தார்கள். காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற மக்கள் போராட்டங்களின் முகமாக இருந்த இளம் ஆண்களின் பெயர்களை குறித்தே அவர்கள் கேட்டார்கள்.

அப்படி யாரையும் தெரியாது என்று பாதுகாப்பு வீரர்களிடம் கூறியபோது, அவர்கள் தன் முகக்கண்ணாடி, ஆடைகள் மற்றும் காலணிகளை அகற்ற உத்தரவிட்டதாக, அந்நபர் தெரிவித்தார்.

“நான் என் ஆடைகளை களைந்தபோது, கொஞ்சம்கூட இரக்கம் இல்லாமல் லத்தியாலும், கம்பிகளாலும், சுமார் இரண்டு மணி நேரம் என்னை அடித்தார்கள். நான் மயங்கி விழுந்த போதெல்லாம், மின்சார அதிர்ச்சி கொடுத்து என்னை எழுப்பினார்கள்”

“அதனை மீண்டும் எனக்கு செய்தால், நான் என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருந்தேன். நான் துப்பாக்கியை எடுத்திருப்பேன். என்னால் இதை தினமும் தாங்கிக் கொள்ள முடியாது.”

பாதுகாப்புப் படைக்கு எதிரான போராட்டங்களில் யாரேனும் ஈடுபட்டால், இதே மாதிரியான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்று கிராமத்தில் இருக்கும் அனைவரிடமும் தெரிவிக்குமாறு அந்த வீரர்கள் கூறியதாக அந்த இளம் நபர் கூறினார்.

எல்லா கிராமங்களில் இருந்த ஆண்கள் அனைவரிடமும் நாங்கள் பேசியபோது, கிராமவாசிகள் போராடக் கூடாது என்ற அச்சத்தை ஏற்படுத்தவே பாதுகாப்புப்படையினர் இவ்வாறு செய்ததாக அவர்கள் நம்புகின்றனர்.

இந்திய ராணுவம் பிபிசியிடம் பேசுகையில், “பொதுமக்கள் யாரையும் நாங்கள் மோசமாக கையாளவில்லை” என்று கூறுகிறது.

“இதுபோன்ற எந்த குறிப்பான குற்றச்சாட்டுகளும், எங்கள் கவனத்திற்கு கொண்டுவரப்படவில்லை. பகைமை உணர்வுகள் உடையவர்களால் இந்தக் குற்றச்சாட்டுகள் தூண்டப்பட்டிருக்கலாம்” என ராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் அமன் ஆனந்த் தெரிவித்தார்.

பொதுமக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது, “ஆனால் ராணுவம் எடுத்த எதிர்நடவடிக்கைகளால், இதுவரை யாருக்கும் காயமோ அல்லது உயிர் சேதமோ எற்படவில்லை” என்றும் அவர் கூறினார்.

நாங்கள் பல கிராமங்களுக்கு பயணம் செய்தோம். “சுதந்திர போராட்ட வீரர்கள்” என்று வர்ணிக்கப்படும் பிரிவானைவாத, தீவிரவாத அமைப்புகளின் மீது பலரும் அனுதாபம் கொள்கிறார்கள்.

இந்தக் காஷ்மீரின் ஒரு மாவட்டத்தில்தான் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தற்கொலை தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள். இதனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது.

இதே பிராந்தியத்தில்தான் பிரபல காஷ்மீர் தீவிரவாதி புர்ஹான் வானி கடந்த 2016ஆம் ஆண்டு கொல்லப்பட்டார். அதன் பிறகுதான், கோபமுற்ற இளம் காஷ்மீரிகள் பலர் இந்தியாவுக்கு எதிரான கிளர்ச்சியில் இணைந்தார்கள்.

இந்தப் பிராந்தியத்தில் ஒரு ராணுவ முகாம் உள்ளது. ராணுவ வீரர்கள் அவ்வப்போது இந்தப்பகுதியில் தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் அனுதாபிகளை தேடுவது உண்டு. ஆனால், இதில் தாங்கள் சிக்கிக் கொள்வதாக கிராமவாசிகள் கூறுகின்றனர்.

ஒரு கிராமத்தில் தன்னுடைய 20 வயதுகளில் இருக்கும் ஒர் இளைஞரை சந்தித்தேன். தீவிரவாதிகளுக்கு எதிராக தகவல் தெரிவிக்கவில்லை என்றால், தன் மீது வழக்கு தொடுக்கப்படும் என்று ராணுவம் தன்னை மிரட்டியதாக கூறுகிறார். அதனை தாம் மறுத்ததால், அவர்கள் அந்த நபர் படுக்க முடியாத அளவிற்கு அவரை மோசமாக அடித்ததாக இந்த இளைஞர் குற்றஞ்சாட்டுகிறார்.

“இது இப்படியே தொடர்ந்தால், என் வீட்டைவிட்டு போவதை தவிர எனக்கு வேறு வழியில்லை. மிருகங்களை போல எங்களை அடிக்கிறார்கள். எங்களை ஒரு மனிதராகவே அவர்கள் கருதுவதில்லை.”

தன் உடம்பில் இருந்த காயங்களை காண்பித்த மற்றொரு நபர் கூறுகையில், தன்னை 15-16 வீரர்கள், தரையில் போட்டு, கேபிள்கள், துப்பாக்கிகள், குச்சிகள், இரும்புக் கம்பிகளால் கூட தன்னை தாக்கியதாக கூறுகிறார்.

“நான் பாதி மயங்கிவிட்டேன். என் தாடியை அவர்கள் இழுத்த வேகத்தில், என் பற்கள் விழுந்துவிடுவது போன்று உணர்ந்தேன்.”

ஒரு ராணுவ வீரர் இவரின் தாடியை எரிக்க முயன்றதாகவும், மற்றொரு ராணுவ வீரர் அவ்வாறு செய்வதை தடுத்தாகவும் இந்த தாக்குதலை பார்த்த ஒரு சிறுவன் இவரிடம் பின்னர் தெரிவித்துள்ளான்.

மற்றொரு கிராமத்தில், நான் சந்தித்த ஓர் இளைஞர் அவரின் சகோதரர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரில் இந்திய நிர்வாகத்தின் ஆட்சியை எதிர்த்து வரும் ஹிஸ்புல் முஜாகிதீன் குழுவில் இருந்து ஆண்டுகளுக்கு முன்பு சேர்ந்து விட்டதாக கூறினார்.

அண்மையில் ஒரு ராணுவ முகாமில் தான் விசாரணை செய்யப்பட்டதாக கூறிய இவர், அங்கு தான் சித்ரவதை செய்யப்பட்டதாகவும், அதனால் தனக்கு கால் முறிவு ஏற்பட்டதாகவும் கூறினார்.

”எனது இரண்டு கைகள் மற்றும் கால்களை கட்டிய அவர்கள், தலைகீழாக என்னை தொங்கவிட்டனர். இரண்டு மணி நேரத்துக்கு மேலாக என்னை மிக மோசமாக அவர்கள் அடித்தனர்” என்று அவர் கூறினார்.

ஆனால் இது போன்ற எந்த தவறும் நடக்கவில்லையென ராணுவம் மறுத்துள்ளது.

பிபிசிக்கு அளித்த அவர்களின் அறிக்கையில், ”மனித உரிமைகளை புரிந்து, மதிக்கும் ஓர் அமைப்பு” தங்களுடையது என்றும், அனைத்து குற்றச்சாட்டுகளும் துரிதமாக விசாரிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், கடந்த 3 தசாப்தங்களுக்கு மேலாக காஷ்மீரில் நடந்ததாக குற்றம்சாட்டி, நூற்றுக்கணக்கான மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தி இரண்டு முக்கிய காஷ்மீர் மனித உரிமை நிறுவனங்கள் தயாரித்த ஓர் அறிக்கை வெளியானது.

காஷ்மீரில் நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க, முழுமையான, சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்திட விசாரணை ஆணையம் (சிஓஐ) ஒன்றை அமைக்க ஐநாவின் மனித உரிமைகள் ஆணையம் அறிக்கூவல் விடுத்தது. இந்த பிராந்தியத்தில் பாதுகாப்பு படைகளால் நடந்த அத்துமீறல்கள் தொடர்பாக 49 பக்க அறிக்கையொன்றை அது வெளியிட்டது.

இந்த குற்றச்சாட்டுக்களையும், அறிக்கையையும் இந்தியா நிராகரித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here