அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனற்ற செயலாகும் – ஈரான்

அணு ஆயுத ஒப்பந்த விவகாரங்களில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனற்ற செயலாகும் என ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார்.

பாவர் 373 என்ற நீண்டதூர ஏவுகணை அமைப்பை ஈரான் இராணுவம் 22.08 இன்று அறிமுகப்படுத்தியது. இதில் ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி கலந்து கொண்டு உரையாற்றுகையில்,

“அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனற்றது. நமது எதிரிகள் நமது அணுகுமுறைகளை ஏற்கவில்லை. நாமும் அவர்களது அணுகுமுறைக்கு தக்கபடி பதிலளிக்க வேண்டும்.

ஏவுகணைகளைக் கொண்டு அவர்கள் தாக்கும் போது, அந்த ரொக்கெட்டைப் பார்த்து, நாங்கள் அப்பாவிகள் எங்களைக் கொல்ல வேண்டாம் என நாம் கூறிக்கொண்டிருக்க முடியாது.” என்றார்.

இந்த பாவர்-373 வகை ஏவுகணை ரஷ்யாவின் எஸ்-300 ரக ஏவுகணைகளை விட சக்தி வாய்ந்ததாகும்.

ஒரே சமயத்தில் 100 இலக்குகளை தாக்கக்கூடியது. அதே நேரத்தில் 6 விதமான ஆயுதங்களோடு போரிடக்கூடியது என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.