ஓகஸ்ற் 30 – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளில் நீதிக்காய் அணிதிரள்வோம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

ஓகஸ்ற் 30 – வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளையொட்டி தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளில் பல்வேறு நீதிகோரும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெற இருக்கின்றன.

தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களால் கவனயீர்ப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட இருக்கின்றது. அமெரிக்கா,கனடா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, சுவிஸ் என பல்வேறு புலம்பெயர் தேசங்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் கவனயீர்ப்பு நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

உலகிலேயே மிக அதிகமானவர்கள் காணாமற்போனவர்களின் நாடுகளில் சிறிலங்கா இரண்டாம் இடத்தில் உள்ளது என ஐ.நாவின் புள்ளிவிபரம் ஒன்று கூறுகின்றது. அதாவது இலங்கைத்தீவில் காணாமலாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு என்ன நிலை என்பது கேள்விக்குறியாக உள்ளது.

வெள்ளை வான்களிலும், சுற்றிவளைப்புக்களிலும், காவலரண்களிலும், விசாரணைக் கைதுகளிலும் என பலரும் காணமலாக்கப்பட்டுள்ளனர் என்பது மட்டுமல்லாது, போரின் இறுதி நாட்களில் சிறிலங்கா படையினரிடம் தங்களை ஒப்படைத்தவர்கள், உறவினர்களால் ஒப்படைக்கப்பட்டவர்கள் என தமிழர்கள் யாவருமே காணாமலாக்கப்பட்டவர்களாக உள்ளனர். இதற்கான நீதியைத் வேண்டியே காணமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் ஒயாது போராடி வருகின்றனர்.

இந்நிலையில் ஓகஸ்ற் 30 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளையொட்டில் தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெற இருக்கின்றன.
 காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான இணையத்தளம் :  http://youarenotforgotten.org/