மும்முனைப் போட்டியில் ஐ.தே.க.விட்டுக்கொடுக்க மறுக்கும் ரணில் – பூமிகன்

379
130 Views

சனாதிபதித் தேர்தலுக்கான அறிவித்தல் வர முன்னரே இரு அணிகளுக்குள்ளும் தமது வேட்பாளர் யார் என்ற சர்ச்சை சூடுபிடித்துள்ளது. மகிந்த ராஜபக்‌சவின் மொட்டு அணி எடுக்கப்போகும் தீர்மானம்தான் ஐ.தே.க.விலும் தாக்கத்தை ஏற்படுத்தும். மொட்டு அணியில் கோத்தாவின் பெயர்தான் முன்னணியில் உள்ளது. ஆனால், ஐ.தே.க.வில் மூன்று பெயர்களும் சமபலத்துடன் இருக்கிறது.

கோத்தாவை இறக்குவதென மொட்டு முடிவெடுத்தால், சஜித்தைப் போட்டிக்கு இறக்கினால்தான் வெல்ல முடியும் என்ற கருத்து ஐ.தே.க.வில் உள்ளது. அதேவேளையில், புதிய குழப்பம் ஒன்றும் ஐதே.க.வில்  ஆரம்பமாகியிருக் கின்றது. மொட்டு அணி தமது வேட்பாளரை அறிவிக்கும் வரையில் பார்த்துக்கொண்டிருக்காமல் தமது வேட்பாளரை உடனடியாக அறிவிக்க வேண்டும் என ஐ.தே.க. உறுப்பினர்கள் தலைமைக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளார்கள்.

ஐ.தே.க. மற்றும் அதனுடன் இணைந்து செயற்படும் கட்சிகள் இணைந்த புதிய முன்னணி ஒன்றை எதிர்வரும் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்போகின்றார்கள். சனாதிபதித் தேர்தலை இலக்காகக்கொண்டு தமது கூட்டணிக்கு புதிய பெயர், புதிய சின்னம் என புதிய தோற்றம் ஒன்றைக்கொடுப்பதற்கு ஐ.தே.க. தலைமை திட்டமிடுகின்றது. அதனுடன் சனாதிபதி வேட்பாளர் யார் என்ற விபரமும் அறிவிக்கப்பட்டு, தேர்தலை நோக்கிய செயற்பாடுகள் முடுக்கிவிடப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால், ஐ.தே.க. வேட்பாளர் யார் என்பதற்குத்தான் இன்னமும் பதில் கிடைக்கவில்லை.

ஐ.தே.க. சார்பாக களமிறங்குபவர் சிறுபான்மையினருடைய ஆதரவைப் பெறக் கூடியவராக இருக்கவேண்டும் என்ற கருத்து உள்ளது. சிறுபான்மையினருடைய ஆதரவைப் பெறக் கூடியவரென்றால் ரணில் அல்லது கருதான் இறங்கவேண்டும் என்றும் சொல்லப்படுகின்றது.

இதில் கருவுக்குள்ள ஒரேயரு மைனஸ் என்னவென்றால், அவர் சில காலம் மகிந்தவுடன் இணைந்து அமைச்சர் பதவியையும் அனுபவித்தவர். ஐ.தே.க.வில் களத்தில் உள்ள மூவரில் கூட்டமைப்பு யாரை ஆதரிக்கும் என்ற ஒரு கேள்வியும் இப்போது எழுப்பப்படுகின்றது. கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் அதன் தலைமை ரணிலைத்தான் விரும்புவதாகத் தெரிகின்றது. ஆனால், ஐ.தே.க.வுடன் இணைந்து செயற்படும் மனோ – திகா- ராதா அணிகளும், ஹக்கீம்- ரிஷாத் ஆகியோரும் சஜித்தை விரும்புகிறார்கள்.

சனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அறிவிக்குமாறு கட்சி ஐ.தே.க. எம்.பி.க்கள் தலைமைக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்கத் தொடங்கியிருப்பதாக உள்ளகத் தகவல்கள் சொல்கின்றன. கட்சியின் செயற்குழுவை அவசரமாகக்கூட்டி, இது குறித்த தமது முடிவை அறிவிக்குமாறு அவர்கள் கேட்டுள்ளார்கள். தமது ஊர்களுக்குச் செல்லும் போது, வாக்காளர்கள் இந்தக் கேள்வியைத்தான் தம்மிடம் எழுப்புவதாகத் தெரிவிக்கும் எம்.பி.க்கள், சனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அறிவித்தால்தான் தமது பணிகளை தமது தொகுதிகளில் செய்யக் கூடியதாக இருக்கும் எனவும் தலைமைக்கு கூறியிருக்கின்றார்கள்.

கட்சி எம்.பி.க்களில் ஒரு பகுதியினர் சஜித்தை சனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கான செயற்பாடுகளைத் தீவிரப்படுத்தியிருக்கின்றார்கள். சஜித் தன்னுடைய விருப்பத்தை கட்சித் தலைமைக்கு இதுவரையில் உத்தியோகபூர் வமாகத் தெரிவிக்கவில்லை. ஆனால், மாத்தறையில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்து முதல் தடவையாக தனது விருப்பத்தை சஜித் வெளியிட்டார். அமைச்சர் மங்கள அரசியலில் பிரவேசித்து 30 ஆண்டுகளைப் பூர்த்தி செய்வதை முன்னிட்டே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனைவிட சஜித்தின் மனைவி, ஜலனியும் தன்னை எதிர்கால “முதற் பெண்மணி” என குறிப்பிட்டமையும் சஜித் ஜனாதிபதித் தேர்தலில் இறங்குவதற்கான காய் நகர்த்தலை ஆரம்பித்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்தியது.

ஜனாதிபதி வேட்பாளராக தன்னைப் போட வேண்டும் என்பதற்கான பரப்புரைகளை சஜித் தீவிரமாக முன்னெடுக்கவில்லை என்பது உண்மைதான். அவருக்கு ஆதரவான எம்.பி.க்களே சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி இந்தப் பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றார்கள். சஜித்தும் இதற்கு இசைவான வகையிலேயே தனது பிரதிபலிப்புக்களை வெளிப்படுத்துகின்றார். ரணிலுடன் நெருக்கமானவர்களாக இருந்த சிலரும் இப்போது சஜித்தை ஆதரிக்கத் தொடங்கியிருப்பது ரணில் முகாமைப் பலவீனப்படுத்தியிருக்கின்றது. மங்கள பகிரங்கமாகவே தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கின்றார். மலிக்கும் சஜித்தையே ஆதரிப்பதாக உள்ளகத் தகவல்கள் சொல்கின்றன.

சஜித்தும் கட்சியின் நிலைப்பாட்டுக்கு முரணாக சில விடயங்களில் செல்ல முற்படுகின்றார். குறிப்பாக, மரண தண்டனைக்கு எதிரான நிலைப்பாட்டை கட்சி எடுத்திருக்கும் நிலையில், அதற்கு முரணாக மரண தண்டனைக்கு ஆதரவான நிலைப்பாட்டை அவர் எடுத்திருக்கின்றார். இதன் மூலம், கட்சியில் தனித்துவத்தை வெளிப்படுத்த சஜித் முற்படுகின்றார். மைத்திரிக்கு ஆதரவான நிலைப்பாடு இது எனவும் கட்சிக்குள் சொல்லப்படுகின்றது. சஜித் போட்டியிட்டால், மைத்திரியின் ஆதரவை பெறக் கூடியதாக இருக்கும் எனவும் சொல்லப்படுகின்றது. இதன் மூலம் 5 முதல் 7 வீதம் வரையிலான வாக்குகளை அவர் அதிகமாகப் பெறலாம். . அதனைவிட, மைத்திரி பதவியிலிருக்கும் நிலையிலேயே தேர்தல் நடைபெறும் என்பதால், சட்டம் ஒழுங்கு கூட சஜித்துக்கு ஆதரவாக கொஞ்சம் வளைந்துகொடுக்கும்.

ஐ.தே.க.வில் மற்றொரு குழுவினர் கரு ஜயசூரியவைக் களமிறக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றார்கள். தானும் தயாராக இருப்பதாக  கருவும் அறிவித்துவிட்டார். தான் போட்டியிட முடியாது என்ற ஒரு நிலை வரும்போது கருவைக் களத்தில் இறக்கும் முடிவுக்கு ரணிலும் வரலாம் எனவும் உள்ளகத் தகவல்கள் சொல்கின்றன.

சமூக ஊடகங்களில் இந்த மூவரையும் மையப்படுத்திய பரப்புரைகள் தீவிரமடைந்திருக்கும் நிலையில், தாக்குதல்களும் ஆரம்பமாகியிருக்கின்றன. சஜித்தை களமிறக்கும் முடிவு எதனையும் கட்சி ஒருபோதும் எடுக்காது என ரவி கருணாநாயக்க பகிரங்கமாகவே தெரிவிக்க மற்றொரு மோதலுக்கான மற்றொரு களம் திறக்கப்பட்டது. இந்த மோதல்களைப் பார்த்துக்கொண்டு வழமைபோல கூலாக இருக்கிறார் ரணில். அவருக்கு ஆதரவாகவும் ஒரு குழுவினர் களத்தில் இறங்கியிருக்கின்றார்கள். கள நிலவரங்களை அவதானிக்கும் சிலருடைய கருத்தின்படி ரணிலுக்கான ஆதரவு குறைவடைந்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது. ஆனால், சனாதிபதிக் கனவை அவர் கைவிட்டுவிடவில்லை. அடுத்த வாரம் கர்னபடகவிலுள்ள மூலாம்பிகை கோவிலுக்குச் செல்லவிருக்கும் ரணில், அங்கு தரிசனத்தை முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பிய உடனடியாகவே சனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்ட தமது செயற்பாடுகளைத் துரிதப்படுத்துவார். ஆக, மற்றொருவருக்கு விட்டுக்கொடுக்கும் நிலையில் ரணில் இல்லை.

மொட்டு அணி எப்படியும் சிங்கள வாக்குகளை நம்பித்தான் தமது வேட்பாளரைக் களத்தில் இறக்கும். அந்த வாக்குகளை அவர்களால் பெருமளவுக்கு அறுவடை செய்யக் கூடியதாக இருக்கும் என்பதும் உண்மை. அதனால், சிறுபான்மையினருடைய வாக்குகளை முழுமையாகப் பெற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை களத்தில் இறக்க வேண்டும் என்ற கருத்து ஐ.தே.க.வில் உள்ளது. இந்தத் தேர்தலிலும் கோட்டைவிட்டுவிட்டால், மொட்டுவில் களம் இறங்குபவர்- அவர் கோத்தாவாக இருந்தாலும் மற்றொருவராக இருந்தாலும்,  அடுத்து வரும் இரண்டு பதவிக் காலத்துக்கு இருந்துவிடலாம் என்பதால், இம்முறை எப்படியும் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் ஐ.தே.க. உள்ளது. அதனால், ஐ.தே.க.வின் வேட்பாளர் யார் என்ற கேள்வி கொழும்பு அரசியலில் பலமாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here