ஜனாதிபதி வேட்பாளர்களும் புதிய ஜனாதிபதியும் – மு.திருநாவுக்கரசு

சிங்கள மக்களால் பெரிதும் அச்சத்துடன் பார்க்கப்பட்ட வெல்லுதற் அரிய புலிகளை வெற்றி கொண்டவர்கள் என்ற வகையிலான யுத்த வெற்றிவாதத்தின் அடிப்படையில் ராஜபக்சகள் மேலும் கால் நூற்றாண்டு வரை ஆட்சியில் நீடிக்க முடியும் என்ற எடைபோடுதல் ராஜபக்ச குடும்பத்தினரிடம் இருந்த்தது.

இந்நிலையில் நம்பிக்கையான வெற்றியை எதிர்பார்த்து மகிந்த ராஜபக்ச தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்னாக முன்கூட்டியே 2015 ஆம் ஆண்டு  ஜனாதிபதி தேர்தலை அறிவித்தார்.

ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக தன் கட்சிக்குள் இருந்து அவருடன் கூடயிருந்த மைத்திரிபால சிறிசேன அவருக்கெதிராக போர்க்கொடி தூக்கி ஜனாதிபதி வேட்பாளராய் களமிறங்கினார்.

இந்நிலையில் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கிய ராஜபக்ச அதனால் திணறிபோய் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியும் அடைய நேர்ந்தது.

ஆனால் இம்முறை அனைத்தும் முன்கூட்டிய எதிர்பார்க்கையோடும் அதற்க்கு ஏற்ற முன்னேற்பாடுகளோடும் ராஜபக்சகள் ஏப்ரல் மாதத்திலேயே ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கி விட்டனர்.

ஏப்ரல் 21 ஆம் திகதி நிகழ்ந்த உயிர்த்த ஞாயிறுக் குண்டு வெடிப்புகள் ஜனாதிபதி தேர்தலை நோக்கிய மாபெரும் முதலாவது முற்தயாரிப்பாகும்.

இதை தொடர்ந்து தெற்கில் வெடித்த முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம், பொது பல சேன தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறையிலிருந்து ஜனதிபதியால் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டமை, யூன் மாதம் கண்டியில் அஸ்கிரிய பீடாதிபதி வண.வாரகாகொட ஸ்ரீ ஞானரத்ன மகாநாயக்க தேரோ முஸ்லிம்களின் கடைகளை பகிஸ்கரிக்க வேண்டும் என்று விடுத்த கோரிக்கை உட்பட முஸ்லிம்களுக்கு எதிராக வெளியிட்ட கடுமையான அறிக்கை, யூலை முதல் வாரத்தில் 10,000 வரையிலான பௌத்த பிக்குகள் உள்ளடங்கலாக கண்டியில் பொது பல சேன தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரால் கூட்டப்பட்ட மாபெரும் மாநாடும் அதில் சிங்கள இராட்சியம் நிறுவப்பட வேண்டும் என்ற தீர்மானம் உட்பட முஸ்லிம்கள் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்பன எல்லாம் வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான அச்சரங்களாகவே அமைந்துள்ளன.

இவைகள் அனைத்தும் பெரும் பாலும் ராஜபக்ச குடும்பத்தின் பக்கம்  சாய்வுள்ள அச்சாரங்கள் ஆகும். இவற்றில் ஒன்றையேனும் ஜனாதிபதி தேர்தலுக்கான முன்னேற்பாடு என்பதிலிருந்து விலக்கிப் பார்க்க முடியாது.வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர் பற்றிய முடிவு ஓகஸ்ட் 11 ஆம் திகதி நடக்கவுள்ள மேற்படி கட்ட்சியின் மாநாட்டில் எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என அக்கட்சி உத்தியோக பூர்வமாக  அறிவித்துள்ளது.

இக்கட்சியில் தீர்மானம் எடுக்கும் உண்மையான நபர் மகிந்த ராஜபக்ச ஆவார். அவரது நேரடி இளைய சகோதரரான கோத்தாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த அவர் தீர்மானித்துள்ளார் என்ற செய்தியின்படி கோத்தாபய  ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படுவார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் ஏற்படக்கூடிய ஏதாவது சட்டத்தடைகளின் காரணமாக அவரை வேட்பாளராக நிறுத்த முடியாது போனாலும் ராஜபக்ஷ குடும்பத்திலிருந்தே ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவார்.BBVKztD ஜனாதிபதி வேட்பாளர்களும் புதிய ஜனாதிபதியும் - மு.திருநாவுக்கரசுஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் மத்தியிலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மத்தியிலும் மகிந்த ராஜபக்ச பெருந் தலைவர் என்ற ஸ்தானத்தில் வைத்து பார்க்கப்படுகிறார் என்பதுடன் இவரே சிங்கள பௌத்த பெரும் தேசிய வாதத்தின் ஒட்டுமொத்த பெரும் தலைவராகவும் பொதுவாக சிங்கள மக்கள் மத்தியில் பார்க்கப்படுகிறார் ஆதலால் ராஜபக்ச குடும்பத்திலிருந்து யார் தேர்தலில் போட்டியிட்டாலும் சிங்கள மக்கள் அவரை ராஜபக்சவுடன் இணைத்து அடையாளம்  கண்டு அவருக்கு வாக்களிப்பர்.

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் நிறுத்தப்படவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் பற்றிய சந்தேகங்கள் இருந்தாலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு பெரிதாக உள்ளது.கோத்தாபய  ராஜபக்ச 1949 ஆம் ஆண்டு யூன் மாதம் பிறந்தவர். ரணில் விக்ரமசிங்க அதே ஆண்டு மார்ச் மாதம் பிறந்தவர். இருவரும் இவ்வாண்டில் தமது எழுபதாவது பிறந்த தினத்தை தாண்டி இருப்பவர்கள்.

இவர்கள் இருவருமே பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களாக களம் இறங்குவர் என்று பெரிதும் எதிர்பாக்கலாம்.ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்டு ஜனதிபதியாக வேண்டும் என்ற அபிலாசையை ரணில் விக்ரமசிங்க கொண்டுள்ள போதிலும் கடந்த காலங்களில் அம்முயற்சிகளில் அவர் தோல்வியடைந்து “இராசி இல்லா ராஜாவாக” உள்ளார் என்ற கணிப்பீடு அவரது கட்சியினர் மத்தியிலும், பொது மக்கள் மத்தியிலும் உண்டு.முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்  ஜெயவர்த்தனவின் நெருங்கிய உறவினரான ரணில் விக்கிரமசிங்க இளம் வயதிலேயே அமைச்சர் ஆகிய “ராஜா வீட்டு கன்றுக்குட்டி” ஆவார் என்ற ஒரு கணிப்பீடும் சிங்கள மக்கள் மத்தியில் உண்டு.

மிக இளம் வயதிலேயே அமைச்சரான ரணில் விக்கிரமசிங்கவிற்கு கட்சியில் இறுக்கமான பிடி இருப்பதுடன் கட்சியில் உயர் குழாத்தினரின் பலமான ஆதரவும் இவருக்கு உண்டு .அத்துடன் மேற்குலக ஆட்சியாளர்கள் மத்தியில் நீண்டகாலமாக அறியப்பட்டவரும், அவர்களின் நம்பிக்கைக்கும் பெரிதும் பாத்திரமாக காணப்படும் நிலையில் இவருக்கு மேற்குலகின் தெளிவான ஆதரவும் உண்டு.ஆனாலும் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறைவானது என்றும் அடிமட்ட மக்களின் ஆதரவை உடைய பிரேமதாசவின் பாரம்பரியத்தை கொண்ட இளம் தலைவரான 52 வயது நிரம்பிய சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற குரல்கள் பலமாக எழுந்துள்ளன.

எப்படியாயினும் கட்சியின் மீது ரணில் விக்கிரமசிங்கவிக்கு இருக்கக்கூடிய பலமான பிடி, கட்சிக்குள் உள்ள உயர் குழாத்தினரின்  ஆதரவு, மேற்குலக ஆதரவு என்பனவற்றின் பின்னணியிலும் ரணிலுக்கும் சஜித்துக்கும் இடையே ஏற்ப்படக்கூடிய சமரசத்திக்கான வாய்புகளின் பின்னணியிலும் ரணில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் பிரகாசம் ஆனது.“யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே” என்பதற்க்கு ஏற்ப ரணிலின் வருகைக்காக அமெரிக்கா பச்சை கொடி காட்டியுள்ளதான செய்திகள் வெளியாகியுள்ளன.“ரணிலின் தலைமையை எதிர்பார்க்கும் அமெரிக்கா” என்ற தலைப்பில் கொழும்பிலிருந்து வெளியாகும் வீரகேசரி நாளிதழில் வெளியான பின்வரும் செய்தி குறிப்பிடத்தக்கது.

“மிலேனியம் சவால் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக பணிப்பாளர், சீன் கெய்ன் குரோஸ் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் பகிரப்பட்ட இலக்குகளை நோக்கி முன்னேறுவதற்கு ரணில் விக்கிரமசிங்கவின் தொடர்ச்சியான தலைமைத்துவத்தை எதிர் பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்” என்று செய்தி நீள்கிறது.

எப்படியோ மேற்குலகின் ஆதரவு திட்டவட்டமாக ரணில் விக்கிரமசிங்கவிற்கு இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.ராஜபக்ச குடும்பமானது நாடாளுமன்றமுறை அரசியலிலும் அதற்கு அப்பால் நாடாளுமன்றமுறை அரசியலுக்கு புறம்பான(Extra Parliamentary Politics) வெகுசன அரசியல், பலப்பிரயோக அரசியல், பௌத்த மதநிறுவன அரசியல், இராணுவ பல அரசியல் என்பனவற்றிலும் வல்லமை போருந்தியவர்கள்.

ஆனால் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற மற்றும் தேர்தல்முறை அரசியலில் மட்டுந்தான் பலமுள்ளவராக உள்ளார்.சஜித் பிரேமதாசாவிடந்தான் பாராளுமன்ற முறைக்கு வெளியேயான மக்கள் திரள் அரசியலில் பலம் உண்டு இறுதியில் ரணிலும், சஜித்தும் ஒரு குடையின் கீழ் நிற்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆயினும் வெற்றி வாய்ப்பு எப்படி அமையக்கூடும் என்பதை சிறிது ஆராயலாம்.z p01 Ranil ஜனாதிபதி வேட்பாளர்களும் புதிய ஜனாதிபதியும் - மு.திருநாவுக்கரசு

ரணிலை விடவும் நான்கு வயதுகளால் மூத்தவரான மகிந்த ராஜபக்ச(1945) அரசியலில் இளமைத்துடிப்புடன் காணப்படுகிறார் இவர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தொல்வியுற்றிருந்தாலும் முடிசூடா மன்னரான இவரே சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் பெருந் தலைவராய் காட்சியளிக்கிறார்.

தம்பி கோத்தாபயவை அண்ணன் ராஜபக்சவுக்கு ஊடாகவே சிங்கள மக்கள் கணித்து வாக்களிப்பார்கள் சிங்கள மக்களால் பிரமிப்புடனும் அச்சத்துடனும் பார்க்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை வெற்றிகொண்டு சிங்கள பௌத்த ஆதிக்கத்தை நிலைநிறுத்திய இரட்டை வெற்றி வீரர்களாக மகிந்த ராஜபக்சவையும், கோத்தாபய  ராஜபக்சவையும் சிங்கள மக்கள் பார்க்கின்றனர்.

சிலவேளை சட்டத்தடைகளினால் கோத்தாபய வேட்பாளராக நிறுத்தப்படாதுவிட்டலும் மேற்படி பின்னணியில் ராஜபக்ச கும்பத்தினர் எவர் நின்றாலும் அவருக்கு வாக்களிக்கும் மனநிலையே சிங்கள மக்கள் மத்தியில் உண்டு.

அத்துடன் கோத்தாபயவுக்கு  தடை ஏற்பட்டாலும் அது மக்கள் மத்தியில் ஒருவகை கோபமாக உருவெடுத்து பெருமளவிலான வாக்கு வேட்டைக்கு ஏதுவாகவும் அமந்துவிடவும் கூடும்.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மூலம் முஸ்லிம்கள்  ஒரு சவாலாக காணப்படுகின்றார்கள் என்ற தோற்றம் பெரிதாக ஸ்தாபிதம் அடைந்திருக்கும் இன்றைய சூழலில் பாதுகாப்பான, பலமான, ஸ்திரமான ஆட்சியை ராஜபக்சக் களால்தான் தரமுடியும் என்ற கருத்தாக்கம் தற்போது சிங்கள மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

“முஸ்லிம்கள் ஆகிய நாங்கள் இலங்கையில் சிறுபான்மையினர்.  ஆனாலும் உலகில் பலம் வாய்ந்த பெரும்பான்மையினர்” என்று கிழக்கு மாகாண ஆளுநராய் இருந்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின் முஸ்லிம் மக்கள் மத்தியில் பேசிய பேச்சானது சிங்கள மக்கள் மத்தியில் கோபத்தை உருவக்கியுள்ளதுடன் சிங்கள மக்களை அதிகம் சிங்கள கடும்போக்காளர் பக்கம் ஒருங்கிணைத்தும் உள்ளது.

ஏற்கனவே காணப்படும் வேகமான முஸ்லிம் சனத்தொகை வெடிப்பு(Population Explosion) என்ற அச்சத்தின் பின்னணியில் மேலும் சிங்கள பெரும்பான்மை பலத்தை ஒருங்கு திரட்ட மேற்படி பேச்சு ஏதுமாய் அமைந்தது.இம்மாதம் 7 ஆம் திகதி கண்டியில் பொது பலசேன கூட்டிய மாநாட்டில் சிறுபான்மையினரின் வாக்குகளில் தங்கியிருக்காமல் முற்றிலும் சிங்கள பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் ஆட்சி அமைக்கப்பட வேண்டும் என்ற கோசம் முதன்மை பெற்றிருந்தது.IMG 3756 man 600 11 ஜனாதிபதி வேட்பாளர்களும் புதிய ஜனாதிபதியும் - மு.திருநாவுக்கரசு

இலங்கையிலுள்ள 10,000 பௌத்த விகாரைகளில் 7,000விகாரைகளை ஒருங்கி ணைத்தால் அதன்மூலம் சிங்கள வாக்குகளால் மட்டுமான அறுதிப் பெரும்பான்மை ஆட்சியை அமைக்க முடியுமென கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

அப்படி ஒரு திட்டத்துடன்தான் ராஜபக்சகள் ஜனாதிபதி தேர்தலை அணுகுகிறார்கள். இத்திசை வழி நோக்கி அவர்களின் கை ஓங்கியிருக்கின்றது என்பதில் சந்தேகமில்லை.

மேலும் அரசியல், சமூக, இராணுவ ரீதியில் பலம் பொருந்திய ராஜபக்ச குடும்பத்திற்கு எதிராக வாக்களித்தால் சிங்கள மக்களுடன் ஒட்டி வாழும் தமக்கும் தமது வர்த்தகத்திற்கும் பெரும் கேடு ஏற்படும் என்ற அச்சம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்த சம்பவங்களால் முஸ்லிம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

ஆதலால் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முஸ்லிம் தலைவர்கள் கேட்டுகொண்டதற்கு இணங்க ராஜபக்சவுக்கு எதிராக முஸ்லிம்கள் வாக்களித்தது போல் இம்முறை வாக்களிக்க மாட்டார்கள்.

முஸ்லிம் தலைவர்கள் எவ்வாறு கேட்டுக்கொண்டலும் அதற்கும் அப்பால் வரப்போகும் ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகள் இரு பெரும் பலம் பொருந்திய கட்சிகளுக்கிடையே ஏறக்குறைய சமபங்காக பிரியும். அதுதான் முஸ்லிம்களின் முன்னுள்ள தவிர்க்க முடியாத தெரிவாகவும் அமையும்.அவ்வாறு கடந்த தேர்தலில் அளிக்கப்பட்டது போல் முஸ்லிம்களின் வாக்குகள் ஒருபக்கம் செல்லாமல் இரண்டாக பிரிந்தாலே அது ராஜபக்சாக்களுக்கு பெரும் சாதகமாக அமையும்.

இப்பின்னணியில் ராஜபக்சகள் போதிய முற்தயாரிப்புடன் வெற்றிக்கான நம்பிக்கையோடு களமிறங்கியுள்ளனர். பாராளுமன்ற அரசியல் முறைக்கு வெளியேயான அரசியலிலும் கைதேர்ந்தவர்களான ராஜபக்சாக்களுக்கு உயிர்த்த ஞாயிறுக் குண்டுத் தாக்குதலை தொடர்ந்து உருவான அரசியற் குழப்ப நிலையானது அனைத்து வகையிலும் வாய்ப்பான சூழலை தோற்றுவித்துள்ளது.

ஒருவேளை, இலங்கையில் 2020 ஆம் ஆண்டு தம்பி (அல்லது ராஜபக்ச குடும்பத்தில் ஒருவர்) சிங்காசனத்தில் முடி தரித்து அமர்ந்திருக்க அருகே அண்ணன் (பெருந்தலைவர்)முதல் மந்திரியாய் வீற்றிருக்கக்கூடிய வரலாற்றுக் காட்சியை காண்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் தெரிகிறது .அதேவேளை. ஈரான் ஒருநாள் அணுகுண்டை தயாரித்துவிடும் என்பது இஸ்ரேலினதும், அமெரிக்காவினதும் கணிப் பீடாகும்.

ஈரான் அணுகுண்டு தயாரித்தால் அது இஸ்ரேலுக்கு பேரழிவாய் அமைந்துவிடும் என்ற பின்னணியில் அத்தகைய அணு ஆற்றலை ஈரான் பெற்றிடாமல் தடுத்திட வேண்டும் என்பது இஸ்ரேலினதும் அமெரிக்காவினதும் தீர்க்கமான முடிவாகும்.

ஈரான் படிமுறை வளர்ச்சியடைந்து அணுகுண்டு தயாரிக்கும் வரை காத்திருக்காமல் தற்போது காணப்படக்கூடிய ஒரு சாதகமான சூழலில் ஈரானின் மீது யுத்த மேகத்தை கவிழ்ப்பதன் வாயிலாக ஈரானை விரைவான அணுகுண்டு தயாரிப்பை நோக்கி தூண்டமுடியும்.

அவ்வாறாக அணுகுண்டு தயாரிப்பதற்கான முதிர்ச்சி நிலையை ஈரான்  எட்டும் போது அணுகுண்டு தயாரிப்பின் பெயரால் அதன்மீது  தொடுக்கும் நேரடி யுத்தத்தின் வாயிலாக அதன் அணுவாயுத ஆற்றலை முற்றாக அழித்து அதில் ஈரானை குறைந்தது இரண்டு தசாப்தங்களுக்கு பின்தள்ளிவிடலாம்.

1981 ஆம் ஆண்டு  ஓபரேசன் ஒபேரா அல்லது ஒபரேசன் பாபிலோன் (Operation Opera or Operation Babylon)என்ற பெயரில் ஈராக்கிய அணு உலைகள் மீது இஸ்ரேல் திடீர் விமான தாக்குதலை நடாத்தி அதனை முற்றிலும் அழித்தொழித்த உதாரணம் இங்கு கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் அணுகுண்டு தயாரிக்கும் விளிம்பை ஈரான் அடைய இன்னும் சற்று காலம் எடுக்கும்.

எனவே தற்போது ஈரான் மீது சூழ்ந்துள்ள யுத்த மேகங்கள் முதிர்ச்சியடைந்து கருமேகங்களாக்கூடிய காலத்தையும் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க ஜனதிபத்தித் தேர்தலுக்கு முன்னான காலத்தையும் ஒட்டிய கால இடைவெளியை யுத்தத்திற்கான இலக்காக கொண்டு இன்றைய அமெரிக்க நிர்வாகம் ஈரான் தொடர்பான நடவடிக்கைகளை முன்னேடுக்கிறது.

அத்தகைய யுத்த சூழலில் “அமைவிடம்” என்ற இலங்கைக்குரிய அமைவிட அடுக்கு முக்கியத்துவத்தால் இலங்கை தவிர்க்க முடியாதவாறு யுத்தப் பிராந்திய புயலின் மையமாகிவிடும்.இந்நிலையிற்தான் இலங்கையுடன் அமெரிக்கா மேற்கொள்ள முனையும் ஒப்பந்தங்களின் முக்கியத்துவம் விசாலமடைகிறத இலங்கையின் முப்படைகளையும் சேர்ந்த பாதுகாப்பு உயர் அதிகாரிகள் மேற்படி அமெரிக் காவுடனான ஒப்பந்தம் தொடர்பான தமது ஒவ்வாமையை இறுக்கமாக வெளியிட்டு வருகின்றனர்.

சிங்கள கடும்போக்கு அரசியல்வாதிகள் இத்தகைய ஒப்பந்தங்களுக்கு எதிராக அபாயச் சங்கு ஊதுகின்றனர்.

ராஜபக்சக்களின் முகங்கள் இத்தகைய ஒப்பந்தங்கள் தொடர்பாக கறுத்துப் போயுள்ளன. ரணில் மட்டுமே பச்சைக்கொடி காட்டும் நிலையில் உள்ளார்.

இத்தகைய பின்னணியில் வாளேந்திய சிங்கத்தின் முதுகில் கோத்தாபயக்கள் அமரும் போது வாளேந்திய சிங்கத்தின் முற்றத்தை ஆடுகளமாக கொண்டு வெளிநாட்டு சக்திகள் பலவும் களமாடக்கூடிய காட்சிகள் அரங்கேற முடியும்.

இந்த ஆடுகளத்தை ராஜபக்சக்களோ அல்லது வேறெந்த சிங்கள ஆட்சியாளர்களோ எப்படி கையாளப் போகிறார்கள் என்பதற்கு அப்பால் தமிழ் தரப்பானது இதில்  பங்காளர்களாகவா அல்லது பார்வையாளர்களாகவா அல்லது பந்தாடப்படுப வர்களாகவா இருக்கப் போகின்றது என்ற கேள்விக்கு விடைகாண வேண்டியது அவசியம்.

இவ்வாறு அடுத்த ஆண்டில் உருவாகக்கூடிய இலங்கையின் உள்நாட்டு மற்றும் சர்வதேச சூழலை எவ்வாறு தமிழ் தரப்பு தமக்கு சாதகமாக பயன்படுத்தப் போகிறது? கற்பனைகளுக்கு அப்பால் நடைமுறைச் சாத்தியமான வகையில் இவை பற்றிய முன்கூட்டிய சிந்தனைகளும் அணுகுமுறைகளும் எழவேண்டியது அவசியம்.

இத்தகைய உள்நாட்டு – வெளிநாட்டு சூழலை தமிழ் தரப்பு எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றது என்பதிலிருந்தே தமிழ் மக்களின் எதிர்காலம் தங்கியுள்ளது.