முன்னாள் அமைச்சர் கதிர்காமர் கொலை சந்தேக நபர் மரணம்

சிறிலங்கா அரசில் வெளியுறவு அமைச்சராக இருந்த லக்ஸ்மன் கதிர்காமர் கொலை தொடர்பாக கைதாகிய சந்தேக நபர், கைதாகி 15 ஆண்டுகளின் பின்னர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளை உயிரிழந்துள்ளார். இந்தத் தகவலை அரசியல் கைதிகள் நலன் செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் அடிகளார் வெளியிட்டுள்ளார்.

மேலும், உயிரிழந்தவரின் சடலத்தைப் பொறுப்பேற்க அவரது உறவினர்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சுகவீனமுற்றிருந்த நிலையில் குறித்த சந்தேக நபர் உயிரிழந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

லக்ஸ்மன் கதிர்காமர் 12 ஓகஸ்ட் 2005ஆம் ஆண்டு கறுவாத் தோட்டம் பகுதியிலுள்ள அவரின் இல்லத்திலுள்ள நீச்சல் குளம் அருகில் வைத்து சினைப்பர் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இவர் பதவியிலிருந்த காலப்பகுதியில் எப்போதுமே தமிழருக்கு எதிராகவும் தமிழ் இனத்தின் தேசியத்திற்கு எதிராகவும் செயற்பட்டதுடன், சிறிலங்கா அரசாங்கத்தின் விசுவாசியாகவே இருந்திருக்கின்றார். வெளிநாடுகளில் விடுதலைப் புலிகளை தடை செய்ய முயற்சி எடுத்தவர்களில் இவர் முதன்மையானவர்.

2009 முள்ளிவாய்க்கால் இடப்பெயர்வில் வந்த மக்களை தடுத்து வைத்திருந்த முகாம்களில் ஒன்றிற்கு கதிர்காமரின் பெயரை அரசாங்கம் இட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.