அரச தலைவர் தேர்தல் தொடர்பில் தமிழினம் காத்திரமான முடிவை மேற்கொள்ளவேண்டும் – வேல்ஸ் இல் இருந்து அருஷ்

623
142 Views

சிறீலங்காவில் கடந்த ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்கள், அதன் தொடர்ச்சியாக சிறுபான்மை இனத்திற்கு எதிராக சிங்களப் பேரினவாதிகள் மேற்கொண்ட வன்முறைகள் என்பவற்றுக்கிடையில் தற்போது இந்தியப் பிரதமர் அவசரமாக சிறீலங்கா வந்து சென்றுள்ளது பல அரசியல் கருத்துருவாக்கங்களைத் தோற்றுவித்துள்ளது.

இந்தியப் பிரதமரின் பயணம் பூகோள அரசியல் நலன்சார்ந்தது என்பது ஒருபுறமிருக்க மறுபுறத்தில் அமெரிக்காவுடனான பொருளாதார போரை சமாளிக்கும் வழிகளைத் தேடுகின்றது சீனா. அதன் முதற் கட்டமாக ரஸ்யாவுக்குச் சென்ற சீனா அரச தலைவர் பூட்டினின் ஆதரவைப் பெற்றுள்ளதுடன், சீனாவுக்கும் ரஸ்யாவுக்குமிடையான வர்த்தகத்தையும் 2020 ஆம் ஆண்டு இரு மடங்காக அதிகரிப்பதற்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளார். அதாவது 200 பில்லியன் டொலர் வர்த்தகத்திற்கான ஒப்பந்தம்.

அதேசமயம் இந்தியாவின் ஆதரவையும் தம்முடன் இணைத்துக்கொள்ள சீனா மற்றும் ரஸ்யா முற்படுவதாகவும், இந்த வாரம் இடம்பெறும் சங்காய் கூட்டமைப்பு மாநாட்டில் அதற்கான நிலை எட்டப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேற்குலகத்தின் அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு கூட்டணிக்கு இணையாக சீனாவினால் உருவாக்கப்பட்டதே இந்த கிழக்கு பிராந்திய நாடுகளின் கூட்டணி.

இந்தியாவையும், ரஸ்யாவையும் இணைக்கும் சீனாவின் முயற்சி வெற்றிபெற வாய்ப்புக்கள் உள்ளதாகவே ஹொங் ஹொங்கைத் தளமாகக் கொண்ட லிங்கன் பல்கலைக்கழகத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய கற்கை நெறிகளுக்கான பணிப்பாளர் சாங் போகி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு கடந்த 30 வருடங்களாக வழங்கப்பட்டு வந்த வரிச்சலுகைகளை டொனால் டிறம் அரசு நீக்கியது இந்தியாவின் இந்த மாற்றத்திற்கான காரணமாக கூறப்பட்டாலும், தனது கொல்லைப்புறத்தில் அமெரிக்கா நுளைவதை இந்தியா விரும்பப்போவதில்லை என்பதே உண்மை. அது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் என்பது இந்தியாக் கொள்கைவகுப்பாளர்களின் கருத்து.

ரஸ்யாவின் மிகப்பெரும் வர்த்தக பங்காளியாக சீனா உள்ள அதேசமயம், சீனாவின் பிரதான எரிபொருள் வினியோகஸ்த்தராக ரஸ்யா உள்ளது. எனவே தமது பங்கு முறிகளை சீன நாணயத்தில் மேற்கொள்வதற்கு ரஸ்யாவின் 15 இற்கு மேற்பட்ட வங்கிகளும், நிறுவனங்களும் விரும்பம் தெரிவித்துள்ளதுடன், டொலரின் பாவனையை குறைப்பதற்கு சீனாவும், ரஸ்யாவும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மறுவளமாக சீனாவின் படைத்துறையையும், பொருளாதாரத்தையும் முடக்குவதற்கு அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பொருளாதாரப்போர் ஒருபுறம் உக்கிரம் பெற்றுவரும் அதேசமயம், அதிக வளர்ச்சி கண்டுவரும் சீனாவின் கடற்பலத்தை முடக்குவதற்கு இந்துசமுத்திரப் பிராந்தியத்தை குறிவைத்துள்ளது அமெரிக்கா.

அதுவே மகிந்தாவின் வெளியேற்றத்திற்கும், சிறீலங்காவில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குமான காரணம். ஆனால் ரணில் விக்கிரமசிங்கா தலைமையிலான மேற்குலகத்தின் பொம்மை அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளார் தற்போதைய அரச தலைவர் மைத்திரிபால சிறீசேன. மகிந்தாவுக்கு ஆதரவாக அவர் மாறியதன் பின்னனியில் இந்தியாவே உள்ளதாக நம்பப்படுகின்றது.

ஆனால் இந்தியாவுக்கு படைத்துறை ரீதியாக மேற்கொள்ளும் உதவிகள் மூலம் தனது நகர்வுகளை சுலபமாக்க அமெரிக்கா முற்படுகின்றது. எனவே தான் அப்பாச்சி வகை தாக்குதல் உலங்குவானூர்திகள் மற்றும் ஆளில்லாத விமானங்கள் என்பவற்றை வழங்குவதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளது.

இந்த பூகோள மோதல்களிற்கு இடையே சிறீலங்காவின் அரச தலைவர் தேர்தல் தொடர்பிலும் இந்த நாடுகள் தமது கவனத்தைச் செலுத்த தவறவில்லை. இதனால் சிறீலங்காவின் நிலமை தற்போது மேலும் மோசமாக்கியுள்ளது. சிறீலங்காவில் ஆட்சி மாற்றத்தை தீர்மானிக்கும் முயற்சிகளை அமெரிக்காவும், இந்தியாவும் இந்த வருடத்தின் ஆரம்பத்திலேயே ஆரம்பித்துவிட்டன.

எனவே தான் கோத்தபாய ராஜபக்சா மீதான வழக்கு அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, ரணில் அரசின் பொருளாதரத்தின் மீது மேற்குலகம் அதிக கவனம் செலுத்தி வருகின்றது. சிறீலங்காவுக்கான ஜி.எஸ்.பி வரிச்சலுகைகளை மீண்டும் வழங்கிய ஜரோப்பிய ஒன்றியம், தற்போது பயண எச்சரிக்கைகளையும் அவசரமாக நீக்கியுள்ளது. சிறீலங்காவின் மொத்த ஏற்றுமதியில் 29 விகிதமானவை ஐரோப்பிய நாடுகளுக்கானவை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

அதாவது ஏப்பிரல் 21 ஆம் நாள் இடம்பெற்ற குண்டு வெடிப்பும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளும், முஸ்லீம் அமைச்சர்களின் ஒட்டுமொத்த பதவி விலகலும் சிறீலங்காவில் ஏற்படவுள்ள அரசியல் மாற்றத்திற்கானதும் அதற்கு எதிரானதுமான போராட்டங்களின் விளைவுகள் ஆகும்.

2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரச தலைவருக்கான தேர்தலின்போதும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதாகவும், தற்போது முஸ்லீம் மக்களின் வாக்குகள் ஒரு அணியில் சேர்ந்துள்ளதாகவும், அதனை கைப்பற்ற தற்போதைய ரணில் அரசு முற்படுவதாகவும் சிறீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சா கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

அவரின் இந்த கூற்றை உறுதிப்படுத்துவது போலவே அவர் கருத்து வெளியிட்ட நாளுக்கு மறுநாள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் முஸ்லீம் மக்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டிருந்தது. ரணில் விக்கிரமசிங்காவை சந்தித்த பின்னரே ஜரோப்பிய ஒன்றிய துர்துவர்கள் இணைந்து இந்த அறிக்கையை வெளியிட்டிருந்தனர்.

அதாவது மேற்குலகம் தனக்கு சார்பான அரசு ஒன்றை உருவாக்கும் பணிகளை ஆரம்பித்துவிட்டது. இந்தியாவும் தனக்கு சார்ப்பான அரசு ஒன்றை தெரிவு செய்வதற்கான பணியை ஆரம்பித்துவிட்டது, அதற்காகவே மோடி அவசரமாக சிறீலங்கா வந்திருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புதுடில்லிக்கு வருமாறு அழைத்ததன் பின்னனியும் அதுவே.

ஆனால் சிறீலங்காவின் அரசியல் நகர்வுகளை துல்லியமாக எடைபோட்டு தமக்கான ஒரு பாதையை உருவாக்க வேண்டிய தமிழ் இனம் அமைதியாக இருப்பது என்பது தமிழ் மக்களிடம் உருவாக்கியுள்ள ஒரு அரசியல் வெற்றிடமாகவே பார்க்க முடியும்.

சிறீலங்காவில் இடம்பெறவுள்ள அரசியல் மாற்றம் என்பது ஐக்கிய நாடுகள் சபைவரை எதிரொலிக்கும் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். இந்த ஆண்டின் இறுதியில் இடம்பெறவுள்ள அரச தலைவருக்கான தேர்தலின் முடிவில் தான் ஐ.நா மனித உரிமை அமைப்பின் முன் நாம் மேற்கொண்டுவரும் நீதிக்கான போராட்டத்தின் நீட்சியும், திருப்பமும் தங்கியுள்ளது.

எனவே புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும், தாயகத்து தமிழ் அமைப்புக்களும் ஒருங்கிணைந்து ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கவேண்டிதுடன் அதற்கான தயார்படுத்தல்களை தமிழ் மக்களிடம் தற்போதே ஆரம்பிக்கவும் வேண்டும்.

மகிந்த ராஜபக்சா அரசோ அல்லது ரணில் அரசோ தமிழ் மக்களுக்கு எந்தவித நம்மைகளையும் வழங்கப்போவதில்லை என்பதுடன், மாறி மாறி ஆட்சி அமைக்கும் எல்லா அரசுகளும் தமிழ் மக்கள் மீது தொடர்ந்து கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பை மேற்கொண்டே வருகின்றன.

எனவே அரச தலைவர் தேர்தலில் தமிழ் மக்கள் பங்கெடுப்பதை நிறுத்துவதா? அல்லது தமிழர் ஒருவரை தேர்தலில் நிறுத்தி அவருக்கு வாக்களிப்பதன் மூலம் வாக்களிக்கும் உரிமைகளை தக்கவைக்கும் அதேசயம் சிறீலங்காவின் தேர்தலை முற்றாக புறக்கணிக்கும் நிலையை நாம் உருவாக்குவதா? என்பது தொடர்பில் தீர்க்கமான முடிவை நாம் மேற்கொள்ள வேண்டும்.

இதன் மூலம் எம்மை தொடர்ந்து ஏமாற்றும் மேற்குலகத்திற்கும், பிராந்திய வல்லரசுகளுக்கும் நாம் ஒரு காத்திரமான செய்தியை பதிவுசெய்ய முடியும், ஏனெனில் கடும்போட்டியாக மாறப்போகும் தென்னிலங்கை தேர்தலில் அரச தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வாக்குகள் சிறுபான்மை மக்களுடையதாகவே இருக்கும் எனக் கருதப்படுகின்றது.

எனவே தான் இந்தியா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புதுடில்லிக்கு அழைக்க, ஐரோப்பிய ஒன்றியம் முஸ்லீம் மக்கள் மீது பாசத்தை காட்டுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here