“என்ர பிள்ளை எனக்கு கிடைத்து விடுவான்” போராடும் தாய்

“என்ர பிள்ளை எனக்கு கிடைத்து விடுவான்” என்ற நம்பிக்கையில் போராடும் தாய் – பாலநாதன் சதீஸ்

வெளியில் சென்ற, நமக்குப் பிரியமானவர்கள்  சரியான நேரத்தில் வீடு திரும்பா விட்டால், நம் மனம் எவ்வளவு பதறிப் போகும். எப்போது வருவார்கள் என மனம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும். அவர்கள் வீட்டுக்கு வந்து சேரும் வரை அதைப் பற்றியே நாம் யோசித்துக் கொண்டிருப்போம்.

IMG 20210609 081105 "என்ர பிள்ளை எனக்கு கிடைத்து விடுவான்" போராடும் தாய்

இந்தக் காத்திருப்பு நேரம், நிமிடங்களாக பல மணி நேரங்களாக இருந்தால் பரவாயில்லை. பல ஆண்டுகள் என்றால், காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் நிலை என்னவாகும். அவர்களின் குடும்பத்தினர் எவ்வளவு மனவேதனைக்கு உள்ளாகுவார்கள். இப்படி மன வேதனையுடன் தவிக்கும் தாயின் கதைதான் இது.

மகனைத் தொலைத்த வலியுடன் 17 வருடங்களைக் கடந்தும்,  காணாமல் போனவர்களின் போராட்டக் களத்திற்கு ஆறுதல்கூற வரும்  பல்வேறு தரப்பினரிடமும்  தன் மகன் வந்திடுவான் என்ற நம்பிக்கையில் உதவி கேட்டு, நீதிக்காக இன்று வரை போராடும்  அந்த அம்மாவிற்கு நீதி கிடைக்குமா?

வவுனியா மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் நடத்தப்பட்டு வரும் போராட்டக் களத்தில்,  வவுனியா, செக்கட்டிப்புலவு புதிய கோவில்குளத்தில், கணவனைப் பிரிந்த நிலையிலும், காணாமல் போன தன் மகனை மீட்டு விடலாம் என்ற நம்பிக்கையில் வசிப்பவர் தான் சோமசுந்தரம் ஜெயலதா.

கணவனைப் பிரிந்து 23 வருடங்களைக் கடந்த நிலையிலும், கூலி வேலை செய்து, தன் நான்கு பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கி, பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கனவுடன் இருந்த வேளையில், தனது மூத்த மகனைத் தொலைத்து விட்டு, இன்று நடுவீதியிலே பிள்ளை மீண்டும் வந்துவிடானா என  ஏங்கித் தவிக்கும் அந்த  அம்மாவின் தவிப்புக்கு யார்  விடை கொடுப்பார்கள்.

IMG 20210610 140842 "என்ர பிள்ளை எனக்கு கிடைத்து விடுவான்" போராடும் தாய்

 “எனக்கு நான்கு பிள்ளைகள். கணவனை இழந்த நிலையில் நான் கூலி வேலைக்கு (மில்) சென்றே என் பிள்ளைகளை வளர்த்தேன். இங்கு வேலை செய்து பிள்ளைகளை வளர்க்க வருமானம் காணாத நிலையில், பிள்ளைகளை எனது அப்பாவோடு விட்டுவிட்டு  நான் 2004ஆம் ஆண்டு சவூதிக்குச் சென்று விட்டேன்.  2004 ஆம் ஆண்டு ஆனி மாதம் 20 ஆம் திகதி என்ர  மூத்த மகன்  சோ.இதயரூபன், வேலைக்குச் செல்வதாகத் தம்பிமார்களிடம் கூறி விட்டுச் சென்றவன், நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை என  எனது மற்றைய பிள்ளைகள் கூறினார்கள். அப்போது உடனடியாகத் தகவல் வழங்குவதற்கும் வசதிகள் இருக்கவில்லை. ஒலிப்பதிவு செய்து தான் அனுப்புவார்கள். எனக்குத் தகவல் தாமதமாகத்தான் கிடைத்தது. அப்போது எனக்கு இலங்கை வரக் கூடிய வசதிகளும் இருக்கவில்லை. எனக்கு அங்கு வேலை செய்யும் இடத்தில் இவ்வாறு என் மகனைக் காணவில்லை எனக் கூறியும், என்னை அவர்கள் விடவில்லை. அங்கு, நான் வேலை செய்யும் இடத்தில் எனக்கு மொழியும் தெரியாது.

2006 ஆம் ஆண்டு நான் சவூதியில் இருந்து  இலங்கைக்குத் திரும்பினேன். அப்போது எனது மகன் இங்கு இல்லை. பின்னர் எனது உறவினர்கள் வீடுகளில் எல்லாம் விசாரித்து, பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்து விட்டு, எல்லா இடமும் விசாரித்து வந்தேன். அப்போது கடை ஒன்றில் விசாரித்த போது, என்னுடைய மகன் கடைக்கு வந்து பிஸ்கட் வாங்கிச் சென்றதாகக் கூறினார்கள். அந்த நேரம் சமாதான நேரம்.  ஆகையால் யார் கொண்டு போனது என்று தெரியவில்லை. அவன் காணாமல் போகும் போது  வயது 18. பின்னர் மனித உரிமைகள் ஆணைக் குழுவிலும் எனது மகனைக் காணவில்லை என முறைப்பாடொன்றைப் பதிவு செய்தேன். காவல் துறையினரும், மனித உரிமைகள் ஆணைக் குழுவினரும் எமது வீட்டுக்கு வந்திருந்தார்கள். தாங்களும் என் மகனைத்  தேடிக் கொண்டிருப்பதாக கூறினார்கள்.

IMG 20210609 073456 "என்ர பிள்ளை எனக்கு கிடைத்து விடுவான்" போராடும் தாய்

பின்னர் வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளைத் தேடிப் போராட்டம் இடம் பெறுவதாகச் சொன்னார்கள். போராட்டப் பந்தலுக்கு வந்து, போராட்டம் மேற்கொள்ளும் போது, நானும் எனது பிள்ளையைத் தேடி, என்ர பிள்ளை எனக்குக் கிடைத்து விடுவான் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு போராட்டத்திலும் கலந்து கொள்ளுவன்.” என்றார்.

கணவனைப் பிரிந்த வலியை ஒருபுறமாகத் தள்ளி வைத்து விட்டுத் தன்  மற்றைய பிள்ளைகளின் எதிர்கால கனவினையும்  மற்றொரு புறம் தள்ளிவிட்டு, காணாமல் போன மூத்த மகன் கிடைத்து விடுவான் என்ற  நம்பிக்கையில் பல எதிர்பார்ப்புகளோடும், பரிதவிப்போடும்  காத்திருக்கும் அந்த அம்மாவின் காத்திருப்புக்கான ரணங்களை யாரறிவார்?

பேரம் பேசும் தமிழ் அரசியல்  தலைவர்களே! இன்றைக்கு ஒன்றுபட்ட இலங்கையை பேசிக் கொண்டு, ஈழ விடுதலைப் போராட்டத்தைக் காணாமல் ஆக்கிக் கொண்டிருக்கிறீர்கள். இந் நிலைமை தொடர்ந்தால், எதிர் வரும் காலத்தில் காணாமல் போனோர் என்ற ஒரு இனமாக ஈழத் தமிழரையும், ஈழம் என்ற ஒரு நிலத்தையும் நினைவு கூர வேண்டிய நிலை வரும். காணாமல் போன ஒவ்வொரு தாயின் வலியையும் நீங்கள் உணர வேண்டும். அவர்களுக்கான நீதி வேண்டி செயற்படுங்கள். அப்போது தான் முற்றுப் புள்ளியாய் இருக்கும். இல்லையேல், காணாமலாக்கப் படும் நிலை தொடரும்.

தாய் சோமசுந்தரம் ஜெயலதா

4 பிள்ளைகள்

செக்கட்டிபுலவு புதியகோவில்குளம்

கா. போனவர் : சோ.இதயரூபன்

கா.போன திகதி : 2004.06.20