வடக்கில் சிவில் நிர்வாகம் இராணுவப் பிடிக்குளா? முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் கேள்வி

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மண்டலாய் பிரதேசத்தில் பொது மக்களின் காணிகளை சிவில் நிர்வாக அதிகாரிகள் இன்றி காணிகளுக்கு உரித்தான பொது மக்களுக்கு முன் அறிவித்தல் செய்யாது அடாவடித்தனமாக இராணுவம் தாங்களே நில அளவைத் திணைக்களம் இல்லாமல் அளவீடு செய்து எல்லைக் கட்டைகள் அடித்துள்ளனர்.

இந்த செயற்பாடு வடக்கு மாகாணத்தில் சிவில் நிர்வாகம் இராணுவப் பிடிக்குள் அகப்பட்டுள்ளதா? என பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

மண்டலாய் பகுதியில் 700 ஏக்கர் காணியை இராணுவ முகாமிக்கு சுபிகரிக்க திட்டமிட்ட இராணுவம் தற்போது 300 ஏக்கர்களை அபகரித்துள்ளதாக அப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ் விடையம் தொடர்பில் மருதங்கேணி பிரதேச செயலாளர் எவ்வித பதில்களையும் வழங்கவில்லை. அரச அதிகாரிகளும் இவ் விடையங்களுக்கு உடந்தையாக உள்ளனரா? இல்லை இராணுவ மிரட்டல் உள்ளதா? என மக்கள் சந்தேகிக்கின்றனர்.

நில அளவைத் திணைக்களம் இல்லாது இராணுவம் அளவிட்ட நிலப்பகுதி கடந்த காலங்களில் பல தடவை அளவீடு செய்ய முயன்ற போது மக்களின் எதிர்ப்பால் தடுக்கப்பட்டது தற்போது பயணத் தடையை பணயமாக வைத்து மக்களுக்கும் அறிவிக்காது அபகரித்தமை மிகவும் அப்பட்டமான மனிதவுரிமை மீறல்.

வடமராட்சி கிழக்கில் வளமான பகுதியாக உள்ள மண்டலாய்ப் பகுதியில் திராட்சைத் தோட்டங்கள் ஏனைய பயிர்கள் காணப்படுவதுடன் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை நிர்ணயிப்பதாகும்.