நாம் சந்தேகப்பட்டவாறே ஃபேமிலி மேன் – 2 காட்சிகள் அமைந்திருந்தன – இயக்குநர் அமீர்

அமேசானில் வெளியாகியிருக்கும் தி ஃபேமிலி மேன் – தொடர் 2இல் தமிழர்களுக்கு எதிரான கருத்துகள் இடம் பெற்றிருப்பதாக சர்ச்சை எழுந்திருக்கிறது.

இதையடுத்து “ஈழத் தமிழர்களை தவறாகவும், மோசமாகவும் மிகவும் ஆட்சேபத்திற்குரிய வகையில் சித்தரிக்கும் கருத்துகள் அடங்கிய Family man 2 என்ற கண்டனத்துக்குரிய இந்தித் தொடர் குறித்து தங்களது கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். இலங்கையில் ஈழத்தமிழர்களின் வரலாற்று சிறப்பு வாய்ந்த போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாகவும், இழிவு படுத்துவதாகவும் அமைந்துள்ளது. எனவே அதை தடை செய்ய வேண்டும்” என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தமிழக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடிதம் எழுதியருந்தார்.

தமிழக அரசியல் கட்சி தலைவர்களில் சிலர், சினிமாத் துறையைச் சேர்ந்த சிலர் இத் தொடர் குறித்து தமது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். திரைப்பட இயக்குநர் அமீர் அவர்கள் இலக்கு ஊடகத்தினரின் கேள்விக்குப் பதிலளிக்கையில்,

கேள்வி – Family man 2 இணையத் தொடர் முன்னோட்டத்தை தொடர்ந்து எழுந்த எதிர்ப்பலைகள், தொடர் வெளிவந்த பின்பு எப்படி இருக்கின்றது?

ஈழப் போராட்டத்தையும், புலிகள் இயக்கத்தையும் தவறாகச் சித்தரிப்பது குறித்து, படத்தின் முன்னோட்டம் வந்த போதே பல சர்ச்சைகள் எழுந்தன. ஆனால் அவ்வாறான காட்சிகள் எல்லாம் இல்லை என்று கூறி அதில் நடித்த நடிகை சமந்தா போன்றவர்கள் கூறினார்கள்.

அதை நம்பி, நமது தமிழ் சமூகம், தொடர் வெளியான பின் பார்த்துக் கொள்ளலாம் என விட்டு விட்டார்கள். ஆனால் தொடர் வந்த பின்பு, நாம் எவ்வாறு சந்தேகப்பட்டோமோ, அதைப் போலவே தான் அத்தொடரின் காட்சி அமைப்புக்கள் இருந்தன. முற்று முழுதாக விடுதலைப் புலிகளை, போராட்டத்தின் நோக்கத்தை தவறாக சித்தரிப்பதாகத்தான் இருக்கின்றது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தையும், விடுதலைப்புலிகள் போராளியையும் தவறாகவே சித்தரித்திருந்தார்கள்.  இந்நிலையில், மிகக் குறைவாக தமிழ்த் தேசிய சிந்தனையாளர்களும் புலிகளின் அரசியலை உற்றுநோக்கியவர்கள் மட்டுதான் Family man 2 எதிரான குரலை எழுப்பி இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் அல்லது ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் இதற்கு எதிராக  பொங்கி எழவில்லை என்று கூற முடியாது, அவ்வாறு நாம் எதிர் பார்க்கவும் முடியாது. ஏனெனில் அவ்வாறானதொரு அரசியல் கட்டமைப்பு தான் நம்மைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் தமிழ்த்தேசிய சிந்தனை உள்ளவர்கள் ஈழப் போராட்டத்தை ஆதரிக்கின்றவர்கள் மட்டும்தான் இத் தொடருக்கு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

ஆனாலும் ஒரு காப்பிரேட் கப்பனியான அமேசானின் தொடரை நிறுத்திவிட முடியாது  என்பது தான் உண்மை.