எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து -ஐ.நா. சூழலியல் நிபுணர்கள் இன்று இலங்கை வருகை  

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தினால் கடற் சூழலுக்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் ஏற்பட்டுள்ள  பாதிப்பினை மதிப்பீடு செய்யவும், கடல்வளத்தை புத்தாக்கம் செய்யும்  ஆலோசனைகளை வழங்கவும் ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் நிறுவனத்தின் மூன்று விசேட சூழலியல் நிபுணர்கள் இன்று புதன்கிழமை நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக கரையோரப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்  நாலக கொடஹேவா தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர்  மேலும் குறிப்பிடுகையில்,

”தீ விபத்துக்குள்ளான கப்பலை ஆழ்கடல் பகுதிக்கு இழுத்துச் செல்லும் நடவடிக்கை கடந்த மாதத்தின்  இறுதி வாரத்தின் போது முன்னெடுக்கப்பட்டது. கப்பலின் பிற்பகுதி கடலுக்குள் மூழ்கியதால் ஆழ்கடல் பகுதிக்கு இழுத்துச் செல்லும் நடவடிக்கை இடை நிறுத்தப்பட்டது. கடலுக்குள் மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலை எமது நாட்டின் கடற்பரப்பில் இருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையினை கப்பலின் உரிமை நிறுவனம் முன்னெடுத்துள்ளது.

கடல் பாதுகாப்பு மற்றும் சர்வதேச கப்பல் போக்குவரத்து சட்ட விதிமுறைக்கு அமைய இப்பிரச்சினை ஆராயப்படுகிறது. 6 அமைச்சுக்கள் ஒன்றிணைந்து தேசிய மட்டத்தில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தற்போது முன்னெடுத்துள்ளது. ஆகவே இவ்விடயத்தில் தான்தோன்றித்தனமாக செயற்பட முடியாது. தீ விபத்துக்குள்ளான கப்பலினால்  கடற்தொழிலிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு ஒப்பீட்டளவில் மதிப்பீடு  செய்யப்பட்டுள்ளன.

கடல் வளத்திற்கும் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கும்  ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தேசியமட்டத்தில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இறுதி தீர்வை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை மதிப்பிடவும்,   கப்பலில் இருந்து வெளியாகியுள்ள கழிவுகளினால் கடல் வளத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை மதிப்பீடு செய்வதுடன், கடல் வளத்தை புத்தாக்கம் செய்யவும் சர்வதேச அமைப்புக்களிடம் ஆலோசனை கோரியிருந்தோம். இதற்கமைய ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் நிறுவனத்தின்  மூன்று விசேட நிபுணர்கள் இவ்விடயம் குறித்து ஆராய நாட்டுக்கு வருகை தரவுள்ளார்கள். கப்பலின் தீ விபத்தினால் கடலுக்குள் மூழ்கியுள்ள கழிவுகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் துறைசார் மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடல் சூழலை பாதுகாக்க அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளன. இதற்கு கடற்கரையோரங்களில் வாழும் மக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும். தீ  விபத்தினால் கடல் வளத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு நட்டஈடு கோரும்சட்ட நடவடிக்கைகள்  நீதியமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக 40 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு கோரப்பட்டுள்ளது. கடல் வளத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை குறுகிய காலத்திற்குள் மதிப்பிட முடியாது. கப்பலின்  கப்டன் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிடும் கருத்துக்களுக்கு பொறுப்பேற்க வேண்டிய அவசியம் கிடையாது. பேர்ள் கப்பல் தீ விபத்து குறித்து பொய்யான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. போலியான பிரசாரங்கள் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை பாதிப்புக்குள்ளாக்கும், ஆகவே அனைத்து நெருக்கடிகளுக்கும் விரைவில் தீர்வு காண எதிர்பார்த்துள்ளோம்” என்றார்.