மட்டக்களப்பில் ஒரே நாளில் கொரோனாவால் 68 பேர் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 68 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 04மரணங்களும் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

இன்று  மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 68 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 04மரணங்களும் ஏற்பட்டுள்ளது. இவர்களில் மட்டக்களப்பு சுகாதார பிரிவில் 20பேரும் கோறளைப்பற்று மத்தி,செங்கலடி,ஏறாவூர் சுகாதார பிரிவுகளில் தலா ஏழு பேரும் ஓட்டமாவடி,வவுணதீவு பகுதிகளில் தலா நான்கு பேரும் கிரான்,பட்டிப்பளை சுகாதார பிரிவில் தலா மூன்று பேரும் வாழைச்சேனையில் இரண்டு பேரும் களுவாஞ்சிகுடி,ஆரையம்பதி சுகாதார பிரிவில் தலா ஒருவரும் மூன்று காவல்துறை உத்தியோகத்தர்களும் ஆறு பேர் சிறைச்சாலையிலிருந்தும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்று மரணமடைந்தவர்களில் மூன்று பேர் காத்தான்குடி சுகாதார பிரிவினையும் ஒருவர் ஆரையம்பதி சுகாதார பிரிவினையும் சேர்ந்தவர்களாவர். மூன்றாவது அலை காரணமாக 1807பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 23மரணங்கள் ஏற்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 2790 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் இதுவரையில் 32பேர் மரணமடைந்துள்ளனர். 1808பேர் சுகமடைந்து வீடுசென்றுள்ளதுடன் 951பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்றுவருகின்றனர். கடந்த ஏழு தினங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 786 கொரோனா  தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இரண்டு கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஊறணி கிராம உத்தியோகத்தர் பிரிவு இன்று முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவதற்கான பரிந்துரைசெய்யப்பட்டுள்ளது.

தனியார் ஆடைத்தொழிற்சாலையில் இதுவரையில் 218பேர் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது என்றார்.