தொடர்ந்து தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் சினிமாத்துறையின் நோக்கம் என்ன? – அருட்தந்தை ஜெகத் கஸ்பர்

118
234 Views

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை சிறுமைப்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் ஒரங்கட்டும் நோக்கத்துடன் தமிழர்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் ஆவணங்களைத் தயாரிக்கும் முயற்சிகளை இந்தியா தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. அதற்கான ஆதரவுகளை வழங்குவதில் இந்திய சினிமாத் துறை முன்னணி வகிக்கின்றது. அதிலும் குறிப்பாக வேற்று மாநில கலைத் துறையினர் தொடர்ந்து இவ்வாறான இழிவான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியே தற்போது அமசோனில் வெளிவரவுள்ள Family man -2 (பமிலி மான்- 2) என்ற தொடர் நாடகம். இது தொடர்பில் ‘இலக்கு’ ஊடகத்திற்கு அருட் தந்தை ஜெகத் கஸ்பார் அவர்கள் வழங்கிய நேர்காணல் வருமாறு:

கேள்வி:  ஏன் இந்தியத் திரை உலகம் தொடர்ச்சியாக தமிழினத்தை சிறுமைப் படுத்துவதில் முனைப்பாக உள்ளது? குறிப்பாக வேற்று மொழிச்   சினிமாத்துறை இதை ஏன் செய்கின்றது?

பதில்: ஆட்சிக்கு வருதல், அதிகாரத்தைப் பிடித்தல் என்பது அரசியல். கருத்துருவாக்கம் என்பது பேரரசியல். ஒரு மக்கள் இனத்தை அல்லது ஒரு மக்கள் குழுமத்தை அல்லது தேசிய இனத்தை நீண்டகால அளவில் சிதைக்கவும், அடிமைப்படுத்தவும் உலகப் பொது வெளியில் அவர்களுக்கு உயரிய இடத்தை மறுக்கவும் திட்டமிடுகிறவர்கள் அந்த இனம் மற்றும் அந்த மக்கள் தொடர்பான பொதுவான கருத்துருவாக்கத்தை நுண்ணியமாகவும், உள் நோக்கத்துடனும், மிக நீண்ட காலத் திட்டத்துடனும் மறுதலித்து வருகின்றார்கள்.

இங்கே தமிழ் பாடப் புத்தகங்களில் பார்த்தீர்கள் என்றால், ஆறாம் வகுப்பிலேயே அது தெரிந்து விடும். ஆரியர் வருகை என்றிருக்கும். முகலாயர் படையெடுப்பு என்று அடுத்த பாடத் தலைப்பிருக்கும். ஆரியர் அமைதியாக நம்மை வாழவைக்க வந்தவர்கள். முகலாயர்கள் ஆயுதம் ஏந்தி படை நடத்த வந்தவர்கள் என்கின்ற விம்பம், நாம் என்ன? ஏது? என்று கேள்வி கேட்கத் தெரியாத அந்த இளவயதிலேயே நமக்குள் விதைக்கப்பட்டு விடுகிறது. இதற்குப் பெயர் தான் பேரரசியல் என்பது. நீண்டகால கருத்துருவாக்கம் அல்லது பொதுப் புத்தி உருவாக்கம் என்பது.

தமிழீழ  விடுதலைப் போராட்டமாக இருக்கட்டும் அல்லது தமிழ்த் தேசிய அடையாளப் படுத்தலாக இருக்கட்டும். தமிழீழ விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் ஒரு பின்னடைவைச் சந்தித் தாலும்கூட தமிழ்த் தேசியம் என்பது பின்னடைவை சந்திக்கவில்லை. அது ஒரு ஆற்றல் மிகு அரசியல் கருத்தியலாகவும், ஆற்றல் மிகு அரசியல் உணர்வெழுச்சித் திரட்சியாகவும் இன்றும் தொடர்கிறது. வல்லாதிக்க சக்திகளுக்கு அது அச்சுறுத்தலாகவே இருக்கிறது. எனவே அதை கொச்சைப் படுத்துவதும், பயங்கரவாதம் என்ற ஒரு சட்டகத்திற்குள் தொடர்ந்தும் புகுத்திக் கொண்டிருப்பதும் அவர்களுக்கு நீண்டகாலத் தேவையாகின்றது. குறிப்பாக இடதுசாரிச் சித்தாந்தம் கம்யூனிசம், மேற்கத்தைய முதலாளித்துவ தாராளமய ஜனநாயகம் இந்த இருமுனைப் போர் சோவியத் ரஸ்யாவின் சிதறல்களோடு முடிவிற்கு வந்தது.

பயங்கரவாதம் என்பது ஒரு அரசியல் கருத்தியலாகவும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பின்னோக்கி நாம் மீளாய்வு செய்து பார்த்தோம் என்றால், தமிழீழ விடுதலைப் போராட்டம் தகர்க்கப்பட்டதும், அது பயங்கரவாதம் என்ற இந்த சட்டகத்திற்குள் கொண்டு நிறுத்தப்பட்டு, அதன் பின்னர் தான் படிப்படியாக அதன் கதை முடிக்கப்பட்டது. ஒரு தேசிய இன மக்களின் விடுதலையை சிதறடிப்பதற்கான நியாயங்களை உருவாக்குவதற்கு இந்த பயங்கரவாதம் என்கின்ற அரசியல் கருத்தியல் பயன்படுகிறது. பயன்படுத்தப்படுகிறது.

அதை நோக்கித் தான் முள்ளிவாய்க்கால் முடிந்துவிட்ட பிறகும்கூட தமிழ்த் தேசிய எழுச்சி என்பது ஒரு கருத்தியல், கோட்பாட்டியல், அரசியல் யதார்த்தமாகவும், அது ஆளும் வல்லாதிக்க சக்திகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாலும்  தொடர்ந்தும் தமிழர்களை மற்றும் தமிழ் அடையாளங்களை பயங்கரவாதத்தின் நீட்சியாகவும், தொடர்ச்சியாகவும் உட்படுத்தி வரும் அந்த பொதுப் புத்தி உருவாக்கல் என்பது மேலாதிக்க பேரினவாத தமிழர்களின் பகை சக்தியினுடைய தேவையாக இருக்கிறது. அதைத் தான் இந்தத் தொடர் நாடகத்திலும் பலவேறு ஊடகங்களிலும் ஏனைய கலைப்பண்பாட்டு வெளிப்பாடுகளிலும் நாம் காண முடிகிறது.

கேள்வி:  பல அரசியல் தலைவர்களும் மற்றும் தமிழ் நாட்டு அரசும் குறித்த Family man -2 தொடரைத் தடை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளது. இதை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: ஒரு கலை பண்பாட்டுடன் செயலாற்றுகின்றவனாக, ஊடகவியலில் செயலாற்றுகின்றவனாக ஒரு முழுமையான படம் வெளி வருவதற்கு முன்னரேயே அதை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளோடு கொள்கை அடிப்படையில் உடன்படுகிறவன் அல்ல. அதுவந்த பின்பு அதற்கான எதிர் வினையை நிகழ்த்துவது தான் என்னைப் பொறுத்த வரையில் ஒரு அணுகு முறையாக இருக்கும். ஏற்கனவே எமக்கு அனுபவங்கள் இருக்கின்ற காரணத்தினால், மலையாளப் படம் ஒன்றில் (‘வரனே அவஷ்ய முண்டு’) ஒரு நாய்க்கு தேசியத் தலைவரின் பெயரை சூட்டியதாக இருக்கலாம்.  இன்னும் பல தமிழ், இந்தி திரைப் படங்களாக இருக்கலாம் இந்த போக்கை கடைப் பிடிக்கின்ற காரணத்தினால் இதுவும் நிச்சயமாக தமிழர்களின் பண்பாட்டு இருப்பை, அரசியல் அபிலாசைகளை கொச்சைப்படுத்துவதாக இருக்கும் என்ற அடிப்படையில் வைக்கப்பட்டிருக்கின்ற கோரிக்கைகள் நியாயமானவை. ஆயினும் உண்மையில் என்ன இருக்கிறது என்பதைப் பார்த்து விட்டு எதிர் வினை எடுப்பது என்பது சரியானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

கேள்வி:  Family man -1இல்  இஸ்லாமிய சமூகத்தை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் போது ஏன் பெரியளவில் கண்டனங்கள் தெரிவிக்கப்படவில்லை?

பதில்: இதை எப்படி நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால், மிக நீண்ட காலமாக இஸ்லாமிய மக்கள் மீதான பகை, வெறுப்பு, வன்மம்  RSS என்கின்ற சங்கப் பரிவார அமைப்பால் விதைக்கப்பட்டு, பரவப்பட்டு, ஆழப்படுத்தப்பட்டு, வேரோட்டம் செய்யப்பட்டு அந்த சமூகத்தின் மீதான வெறுப்பு என்பது இன்று ஒரு இயல்பு மன நிலையாக்கப்பட்டிருக்கிறது. பொதுப் புத்தியில் ஒரு இஸ்லாமியர் என்றால், அவரையும் நீங்கள் அந்நியராகத் தான் பார்க்க வேண்டும். ஐயத்தோடு தான் பார்க்க வேண்டும். அவர்களை வெறுப்பதிலும், அவர்களை ஐயத்திற்கு உள்ளாக்குவதிலும் எந்தப் பிழையும் இல்லை என்பதாக மிக நீண்ட காலமாக செய்யப்பட்டு விட்ட காரணத்தினால் ஒரு வகையில் அந்தச் சமூகமே மிகத் தீவிரமாக அந்தச் சமூகத்திற்கு அச்சுறுத்தல் வராத வரை அந்த எதிர்ப்பு நிலை வராதபடி மரத்துப் போயிருக்கிறது. பொதுச் சமூகத்தின் நல் மனச்சாட்சியும் மரத்துப் போயிருக்கிறது. ஒரு  வகையில் மரணித்துப் போயிருக்கிறது. அது எமது பொது மனதினுடைய, பொது சமுதாயத்தினுடைய தோல்வி என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இன்னொரு புறம் தமிழ்த் தேசிய உணர்வுகள் இன்னும் உயிர்த் துடிப்போடு தான் இருக்கின்றன. அந்த தமிழ்த் தேசியத்தை எதிர்கொள்வதற்கு இந்த சங்கப் பிரவார RSS சக்திகளும் தடுமாறுகின்றன. இஸ்லாமிய சமூகத்தின் மீது ஒரு பகை விம்பத்தை எளிதாக கட்டிவைக்க முடிந்த அவர்களால், எப்படி தமிழ்த் தேசியத்தைக் கையாள்வது என்று தெரியாமல், அவர்கள் தவிக்கிறார்கள். தடுமாறுகிறார்கள் என்பதை நான் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்.

எனவே தமிழ்த் தேசியத்திற்கு எதிராக அவர்கள் கதையாட முடியாது. விம்பங்கள் காட்ட முடியாது என்பதால்தான் நாம் நடத்திய வரலாற்றுச் சிறப்புமிகு மாபெரும் போராட்டத்தை பயங்கரவாதம் என்று மீண்டும் மீண்டும் நினைவூட்டி தமிழர்கள் என்றால் பயங்கரவாதிகள் என்கின்ற ஒரு கட்டமைப்பை இந்திய அளவிலும், உலக அளவிலும் உருவாக்கப் பார்க்கின்றார்கள்.

என்னைப் பொறுத்தவரையில் நான் என்ன சொல்வேன் என்றால், இதை வெறும் எதிர்வினையோடு மட்டும் நிறுத்திக் கொள்ளக்கூடாது. தமிழர்கள் எதிர்வினை நிகழ்த்துவதோடு  நிறுத்துவதைப் பார்க்கின்றேன். மாறாக எப்படி யூத சமூகம் தமக்கு நேர்ந்து விட்ட, நேர்ந்த அவலங்களை வலிகளையெல்லாம் மிகப் பெரிய சினிமா ஆவணமாக, ஒளி ஆவணமாக ஹொலிவுட் திரைப்படங்களாக, கதைகளாக, வரை ஓவியங்களாக கொண்டு வந்தார்களோ அது போன்று நமது வரலாற்றை பதிவு செய்ய வேண்டும் என்று தான் விரும்புகின்றேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here