அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி போராட்டம்

நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் பொறுப்பற்று செயற்படும் அரசாங்கம் பதவியில் இருப்பது, ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்லவென கூறி அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.

குறித்த போராட்டம் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

தொடர் குண்டுத் தாக்குதல் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்தும் மக்களை பாதுகாக்க தவறிய அரசாங்கம், தொடர்ந்து பதவியில் இருப்பது ஜனநாயகத்துக்கு விரோதமான செயற்பாடாகும்.

அதேபோன்று உரிய காலத்தில் நடத்த வேண்டிய தேர்தலையும் பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி பிற்போட்டு வருகின்றது.

மேலும் வாழ்க்கை செலவு, நாளாந்தம் அதிகரித்த வண்ணமே உள்ளது. இவ்வாறு மக்களுக்கு தொடர்ந்து அதிருப்தியை ஏற்படுத்தி வரும் அரசாங்கம் பதவி விலக வேண்டுமென நாடாளுமன்றத்திலும் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்தோம்.

இந்நிலையில் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை மேலும் வலுவடைய செய்வதற்காகவே குறித்த போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளோம்” என  பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.