அரசின் படுகேவலமான செயலே முள்ளிவாய்க்கால் தூபி உடைப்பு – சம்பந்தன் கொதிப்பு

37
55 Views

இறுதிப் போரில் சாகடிக்கப்பட்ட எமது உறவுகளை நினைவுகூர்ந்தே முள்ளிவாய்க்காலில் நினைவுத் தூபியை அமைத்திருந்தோம். அதை இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஆகியோரின் பாதுகாப்புடன் அரசு அடித்துடைத்துள்ளது. இது அரசின் படுகேவலமான செயலாகும். இதை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

வன்னியில் இறுதிப் போரில் அரச படைகளால் கொன்றழிக்கப்பட்ட தமிழர்களை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்காலில் நினைவு முற்றம் அமைக்கப்பட்டிருந்தது. கடந்த புதன்கிழமை திடீரென இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஆகியோரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த இந்த நினைவு முற்றம் அன்று இரவோடிரவாக சேதமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் நினைவு முற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த சின்னமும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. அதேவேளை, அங்கு மதகுருமார்களால் புதிதாகக் கொண்டுவந்து வைக்கப்பட்டிருந்தநினைவுக் கல்லும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளது.

இந்த அநாகரிகச் செயல்களை வன்மையாகக் கண்டித்துள்ள கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பி., மேலும் தெரிவித்ததாவது:-

இறுதிப் போரில் படையினரால் கொன்றழிக்கப்பட்ட எம் உறவுகளை நிம்மதியாக உறங்க விடுங்கள் என்று அரசிடம் நாம்வேண்டுகோள் விடுக்கின்றோம். இந்த நாட்டில் உண்மையான நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமெனில் ஒவ்வொரு இனத்தவர்களும் போரில் இறந்த தமது உறவுகளை நினைவேந்த அனுமதிவழங்கப்பட வேண்டும். ஆனால், தமிழ் மக்களுக்கு இந்த அனுமதியை தற்போதைய அரசு வழங்க மறுக்கின்றது.

அத்துடன், இறந்த தமிழர்களை நினைவு கூர்ந்து வடக்கு, கிழக்கில் அமைக்கப்பட்டிருக்கும் தூபிகளையும் இடித்தழிப்பதில் இந்த அரசு குறியாக இருக்கின்றது. இது நாட்டின் முன்னேற்றத்துக்கு நல்ல செயல் அல்ல. அரசின் பயணத்துக்கு ஆரோக்கியமான செயல் அல்ல. இலங்கை மீதான சர்வதேச சமூகத்தின் பார்வைக்கு உகந்த செயல் அல்ல. இது மிக மோசமான – படுகேவலமான செயலாகும். எனவே, இந்தப் படுகேவலமான செயலை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையேல் அதன் விபரீதங்களை அரசு விரைவில் சந்திக்க வேண்டி வரும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here