இந்தியாவில் காணப்படும் கொரோனா  44 நாடுகளில் கண்டுபிடிப்பு: WHO

இந்தியாவில் பரவலாகக் காணப்படும் உருமாறிய  கொரோனா  வைரஸ் உலகளவில் 44 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று  உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாகப் பரவுவதற்கு முக்கியக் காரணம் பி.1.617 எனும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்தான்.

கடந்த அக்டோபர் மாதம் முதன்முதலில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வைரஸ்தான் தற்போது உலக சுகாதார அமைப்பின் 6 மண்டலங்கள் உள்ள 44 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 4,500 மாதிரிகள் கண்டறியப்பட்டு உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

“ இந்தியாவில் பரவி வரும் பி.1.617 வகை உருமாறிய கரோனா வைரஸ், மற்ற வைரஸ்களைவிட வேகமாக பரவுகிறது, உருமாற்றம் அடைந்துள்ளது என்றும் அதன் குணங்களையும் பட்டியலிட்டு, கவலைத் தெரிவித்திருந்தது” குறிப்பிடத்தக்கது.

இவை தவிர “ஒரிஜனல்”  கொரோனா தவிர்த்து, பிரிட்டன், பிரேசில், தென் ஆப்பிரிக்காவில்தான் உருமாற்றம் அடைந்த   கொரோனா  கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் “ஒரிஜினல்” கொரோனா வைரஸ்களைவிட அதிகமான ஆபத்து நிறைந்ததாகவும், வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாகவும், அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்துவதாகவும் இருக்கின்றன.

அதிலும் இந்தியாவில் கண்டறியப்பட்ட பி.1.617 வகை உருமாறிய வைரஸ்கள் “ஒரிஜனல்” வைரஸைவிட, அதிகமான வேகத்தில் பரவும் தன்மை கொண்டதாக இருப்பதால்தான் உலக நாடுகளுக்கு வேகமாகப் பரவுகின்றன.

முதல்கட்ட ஆய்வுகளில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்கள், அதிகமான சக்தி உள்ளதாகவும், தடுப்பூசிகளையே எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும், உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்திகளால் குறைந்த அளவுதான் உருமாறிய கொரோனா வைரஸ்களிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க முடிகிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

உலகளவில் தடுப்பூசிகள் மூலம் கொரோனா வைரஸ்களிடம் இருந்து பாதுகாப்பு அளிப்பது என்பது குறைந்தளவாகவே இருக்கும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பி.1.617 உருமாறிய வைரஸ்கள் வேகமாகப் பரவுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது மத நிகழ்வுகளை பலவற்றை அரசு அனுமதித்தது, அரசியல் ரீதியான கூட்டங்கள், தேர்தல் பிரச்சாரங்களை அனுமதித்தது ஆகியவை மூலம் மக்கள் கூடுவதற்கு அதிகமான வாய்ப்பளிக்கப்பட்டது, சுகாதார நடைமுறைகளை, பாதுகாப்பு அம்சங்களை முறையாகக் கடைபிடிக்காதது, சமூக விலகல், முகக்கவசம் அணியாமல் இருத்தல் போன்றவைதான்  கொரோனா பரவல் திடீரென அதிகரிக்கக் காரணம்.

இந்தியாவிலிருந்து இதுவரை பி.1.617, பி.1.617.2 வகை வைரஸ்கள்தான் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், மிகப்பெரிய ஆபத்தையும், தீவிரமான பரவலையும் தரக்கூடிய பிரிட்டனில் கண்டறியப்பட்ட பி1.1.7. வைரஸ்களும் இந்தியாவில் பரவ வாய்ப்புள்ளது” என உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது.