ஈழத்தமிழ் உழைப்பாளர்கள் ஒருமைப்பாடும் செயற்பாடுமே உரிமை மீட்புக்கு உடன்தேவை

மே 1ஆம் திகதி என்றாலே உழைப்பாளர் தினம் என்பது உலகறிந்த விடயம். இந்தியாவில் மேதினம், முதன்முதலில் தமிழகத்தின் சென்னை ரிப்ளிக்கன் கடற் கரையில் தான், அக்காலத்து இந்துஸ்தான் தொழிலாளர் கிசான் கட்சியைச் சேர்ந்த மலயபுரம் சிங்காரவேலுச் செட்டியார் அவர்களாலே 1923ஆம் ஆண்டு தொடங்கப் பெற்றது. சுதந்திர வாழ்வைக் கட்டமைக்க உலக உழைப்பாளர்கள் சத்தியை ஒருங்கிணைத்தல் என்கிற தந்திரோபாயமாகவே மேதினத்தைத் தமிழர்கள் முன்னெடுத்தனர்.

இலங்கையில் 1926 இல் மேதினத்தை முன்னெடுத்த ஏ.ஈ.குணசிங்க என்ற வங்கி ஊழியரான தொழிற்சங்கவாதி அதனைச் சிங்கள பௌத்தர்களின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான தந்திரோபாயமாக்கிச் சிங்களத்திற்கும், பௌத்தத்திற்கும் முன்னுரிமை கொடுத்துத் தமிழர்களின் தொழில் உரிமைகளை மறுக்கும் இனவாத சக்தியாகச் சிங்கள உழைப்பாளர் சக்தியை  உருமாற்றினார்.

இந்த இனவெறியூட்டப்பட்ட சிங்கள உழைப்பாளர்களையே, சிங்கள அரசு, கல்லோயாக் குடியேற்றத்திட்டமென்ற பெயரில் தென்தமிழீழத்தில் குடியமர்த்தியது. இதன் விளைவாகத் தமிழர் தாயகத்தின் விவசாயப் பெருநிலப்பரப்பில் பெரியதான அம்பாறை மாவட்டத்தை முற்றுமுழுதாக சிங்களமயப்படுத்தினர். திருகோணமலை மாவட்டத்தின் ஒருபகுதியைச் சேருவில எனச் சிங்களத் தேர்தல் தொகுதியாக்கினர்.

இவ்வாறு தமிழர்களின் நிலத்தையும், கடல்வளத்தையும் அபகரித்துத் தமிழ் உழைப்பாளர்களைச் சுரண்டுவதன் மூலமே இலங்கைத் தமிழர் பிரச்சினையை உருவாக்கினர். இதன் தொடர்ச்சியாகவே நிலவள, கடல்வள, காட்டுவள அபகரிப்புக்களால் தங்கள் ஆதார வாழ்வியலை இழந்த தமிழர்களின் நடுத்தர வர்க்க உழைப்பாளர்கள் பெருமளவில் அரச வேலையாட்களாகப் பணிபுரிந்த நிலையில், சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டு வந்து தமிழ் நடுத்தரவர்க்கத்தின் உழைப்பிழப்பையும் உருவாக்கினர்.

தமிழர் தாயகப் பகுதிகளில் ஆலைகள் அமைக்கவும், பெருமுதலீடுகள் செய்யவும் தேவையான சட்ட அனுமதியும், மூலவள வழங்கலுக்கான அனுமதிகளும் மறுக்கப்பட்டுத் தமிழர்களின் தொழிற்சாலை உற்பத்திகளும், வர்த்தக வளர்ச்சிகளும் திட்டமிட்ட முறையில் தடுக்கப்பட்டு அவர்களின் அனைத்துலகத் தொடர்புகளும் முடக்கப்பட்டு அவர்களை தனிமைப்பட வைத்தனர். இதுவே இனஅழிப்பை அனைத்துலகின் கவனத்தில் இருந்து மூடிமறைக்கும் இராஜதந்திரமாகியது.

ஈழத்தமிழர்களின் கல்வி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் வழியான தொழில்பேறு ஆற்றல்களும், உயர் கல்விக்கான தரப்படுத்தல்கள் மூலம் குறைக்கப்பட்டன. இது தமிழர்களை அறியாமைக்குள்ளும், வறுமைக்குள்ளும் தள்ளும் கல்விக் கொள்கையாகவே வளர்க்கப்பட்டது.

இவ்வாறு தமிழ் உழைப்பாளிகளின் வாழ்வுக்கான அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்ட பொழுது, சனநாயக முறையில் வன்முறையற்ற வழிகளில் தமிழர்கள் தங்களுடைய வாழ்வினைப் பாதுகாக்க எடுத்த முயற்சிகளை ஆயுதப்படைபலம் கொண்டு ஒடுக்கி இனங்காணக்கூடிய அச்சத்தையே நாளாந்த வாழ்வாக்கியதன் விளைவாகவே ஈழத்தமிழ் மக்கள் தங்களின் சனநாயகப் போராட்டத்தைத் தேசிய விடுதலைப் போராட்டமாக, ஆயுத எதிர்ப்பாக வெளிப்படுத்தி 1976 மே மாதம் 5ஆம் திகதி ‘தமிழீழ விடுதலைப்புலிகள்’ என்னும் மக்கள் போராட்ட அமைப்பைத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் தோற்றுவித்தனர்.

தங்களின் இத்தேசியத்தலைமையின் கீழ் ஈழத்தமிழர்கள் மூன்று தசாப்தகால நடைமுறை அரசை அளப்பரிய தியாகங்கள் வழி நடைமுறைப்படுத்தி, இலங்கைத் தீவில் ஒருநாட்டுள் இருதேசங்கள் என்ற வரலாற்று எதார்த்தத்தை மீள நிறுவினர்.

இக்காலத்தில் மேதினம் ஈழத்தமிழ் உழைப்பாளிகளின் அனைத்து உரிமைகளையும் வென்றெடுப்பதற்கான அனைத்து செயற்பாடுகளையும் கட்டமைக்க மக்களை ஊக்குவித்து உற்சாகப்படுத்தும் நாளாகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

மேதினம் சிங்கள பௌத்த பேரினவாத சிறீலங்கா அரசால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் உழைப்பாளர்களை ஒருங்கிணைத்து, ஈழத்தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்கும் மக்கள் சக்தியாக அவர்களை வளர்ச்சிபெற வைத்தது.

இந்த முயற்சிகளை எல்லாம், 2009 மே 18இல் முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பு மூலம் சிறீலங்கா பின்னடையச் செய்துள்ளது.

இன்றைய இந்நிலையில் உலகெங்கும் உள்ள ஈழத்தமிழ் உழைப்பாளர்களை ஒருங்கமைத்துச் செயற்பட வைப்பதே, தேசியத்தலைமை காட்டிய பாதுகாப்பான அமைதியான வாழ்வை ஈழத்தமிழர்கள் பெற்றிட அவர்களின் உரிமைகளை மீள்விக்கும் ஒரேவழியாக அமையும்.

இதனை நிறைவேற்றிட இம்மேதினத்தில் எந்தப் புலம்பெயர்ந்த மக்களிடம் இந்த ஈழத்தமிழர் விடுதலையை முன்னெடுக்கும் பொறுப்பைத் தேசியத் தலைவர் 2008 மாவீரர் நாளில் ஒப்புவித்தாரோ, அந்த மக்கள் இன்று புலம்பதிந்த மக்களாக அவரவர்கள் வாழும் நாட்டின் குடிகளாக உள்ள உரிமையைப் பயன்படுத்தி அந்த அந்த நாட்டு அரசுக்களின் உதவியுடன், முயன்றிட வேண்டும். இதுவே தேசியத் தலைமைக்கான தங்களின் அரசியல் பணிவை வெளிப்படுத்தும் சான்றாக உலகை உணரப்பண்ணி, ஈழத்தமிழர்களின் தாயக தேசிய தன்னாட்சி உரிமைகளை உலகு அங்கீகரிக்க வைக்கும் பணியாகவும் சிறக்கும்.

அத்துடன் 1972மே மாதம் 22 ஆம் திகதி ஈழத்தமிழர்களை ஆளும் உரிமையற்ற சிறீலங்காச் சிங்கள பௌத்த குடியரசை நிறுவியது முதல் அரைநூற்றாண்டு காலமாக ஈழத்தமிழர்களுக்கு இருந்து வரும் நாடற்ற தேச இனத்தவர் என்ற நிலை மாறி, இழந்த ஈழத்தமிழர்கள் உரிமைகள் எல்லாம் மீளவும் செய்யும்.