ரமலான் நாளில் மட்டும் நாங்கள் உண்ணாது இருப்பதில்லை – இந்தோனேசியாவில் அகதிகள்

ரமலான் நோன்பு போது மட்டும் நாங்கள் உண்ணா நோன்பு இருப்பதில்லை, ஆண்டு முழுதும் உண்ணாமல் இருக்கின்றோம் என இந்தோனேசியாவில் உள்ள அகதிகள் தெரிவித்திருக்கின்றனர்.

மேற்கு ஜகார்த்தாவில் உள்ள தற்காலிக முகாமில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அகதிகள்/தஞ்சக்கோரிக்கையாளர்கள் 210 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் அங்கு சுமார் 8 ஆண்டுகளுக்கு மேலாக வைக்கப்பட்டிருக்கின்றனர்.

இவர்களுக்கு உதவக்கூடிய ஐ.நா. அகதிகள் ஆணையம் இந்த அகதிகளை கைவிட்ட நிலையில், இவர்கள் உள்ளூர் சமூகத்தை நம்பியே இருக்க வேண்டிய சூழல் நிலவுகின்றது.

இந்த அகதிகளுக்கு வேலை செய்வதற்கான உரிமை இந்தோனேசியாவில் இல்லை என்பதால் அவர்கள் பிறரின் உதவியையே நம்பி இருக்க வேண்டிய நிலை நீடிக்கின்றது.