சீனாவுக்கும் ரஸ்யாவுக்கும் இடையிலான நெருக்கம் அதிகரித்துள்ளது: பூட்டின்

சீனாவுக்கும் ரஸ்யாவுக்கும் இடையிலான நெருக்கம் முன்னர் இருந்ததை விட தற்போது மிகவும் அதிகரித்துள்ளதாக ரஸ்யாவின் அதிபர் விளாமிடீர் பூட்டின் தெரிவித்துள்ளார்.

சீனா அரச தலைவரின் ரஸ்யாவுக்கான பயணத்தைத் தொடர்ந்தே பூட்டின் நேற்று (05) இவ்வாறு தெரிவித்துள்ளதாக சி.என்.பி.சி ஊடகம் தெரிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் அமெரிக்காவுடன் உள்ள முறுகல் நிலையைத் தொடர்ந்தே இந்த இரு நாடுகளும் தமது உறவுகளைப் பலப்படுத்த தீர்மானித்துள்ளன.

வெனிசுலா நெருக்கடி தொடர்பிலும் ரஸ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் தோன்றியிருந்தன. அதேசமயம் சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான பொருளாதாரப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

மூன்று நாள் பயணமாக ரஸ்யா சென்றுள்ள சீன அரச தலைவர் பூட்டினின் கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளதுடன் அவரின் இந்த பயணம் இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளில் ஒரு பெரிய முன்னேற்றம் என கருதப்படுகின்றது.

இரு நாடுகளுக்குமிடையில் மிகவும் பலமாக அரசியல் நம்பிக்கைகள் உண்டு என இந்த பயணம் தொடர்பில் கருத்து தெரிவித்த சீனாவின் உதவி வெளிவிவகார அமைச்சர் சாங் காங்கு தெரிவித்துள்ளார்.

சீனாவுக்கும் ரஸ்யாவுக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகள் 27.1 விகிதத்தால் அதிகரித்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் இருந்து 2018 ஆம் ஆண்டு வரையிலும் அது 107 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக ரஸ்யாவின் ஏற்றுமதி மையத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இது எதிர்வரும் வருடத்தில் 100 விகிதமாக அதிகரிக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளர்.