ரஷ்ய எதிர்க் கட்சித் தலைவர் ஓரிரு நாளில் இறக்க நேரும்: மருத்துவர்கள் எச்சரிக்கை

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கடுமையாக விமர்சிக்கும், ரஷ்ய எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸே நவால்னிக்கு மருத்துவ சிகிச்சை வழங்கவில்லை எனில், அவர் ஓரிரு நாளில் இறக்கக் கூடும் என, அவரது மருத்துவக் குழுவினர் எச்சரித்துள்ளனர்.

ரஷ்ய அதிபர் புதினை கடுமையாக விமர்சிக்கும் இவர், ஒரு பழைய கையாடல் வழக்கின் கீழ் கடந்த பிப்ரவரி மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், சிறையில் இருக்கும் தனக்கு, கடுமையான முதுகு வலி மற்றும் காலில் உணர்வின்மை போன்ற பிரச்சனைகளுக்கு, தனக்கு முறையான மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என கடந்த 18 நாட்களாக உண்ணா விரதத்தில் இருக்கிறார் அலெக்ஸே நவால்னி.

அலெக்ஸே நவால்னியின் மருத்துவரான அனஸ்டாசியா வசில்யெவா உட்பட நான்கு மருத்துவர்கள், அலெக்ஸே நவால்னியை உடனடியாகக் காண சிறை அதிகாரிகளிடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதி இருக்கிறார்கள்.

அக்கடிதத்தை, மருத்துவர் அனஸ்டாசியா வசில்யெவா தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அக்கடிதத்தில் அலெக்ஸே நவால்னியின் இரத்தத்தில் இருக்கும் பொட்டாசியம் அளவு மிகவும் மோசமான நிலையை அடைந்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அதாவது அவரது சிறுநீரகமும், இதயமும் எப்போது வேண்டுமானாலும் பாதிக்கப்படலாம் என அதில் விளக்கப்பட்டுள்ளது.

மேலும் “அலெக்ஸே நவால்னியின் இரத்தப் பரிசோதனை முடிவுகளை கருத்தில் கொண்டும், இதற்கு முன் அவரைக் கொல்ல விஷ ஊசி போடப்பட்டதை கருத்தில் கொண்டும்” அவரை உடனடியாக பரிசோதிக்க அனுமதிக்குமாறு மருத்துவர்கள், சிறை அதிகாரிகளிடம் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

44 வயதாகும் அலெக்ஸே நவால்னிக்கு, கடந்த 2020ம் ஆண்டு  ‘நோவிசோக்’ என்கிற நரம்பு மண்டலத்தை பாதிக்கும் இரசாயனம் செலுத்தப்பட்டதையடுத்து  அவர்  ஜெர்மனிக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு காப்பாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நவால்னி அடைக்கப்பட்டிருக்கும் சிறை, அதன் மோசமான மற்றும் கடினமான சூழல்களுக்கு பெயர் போனது என்கிறார்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள். நவால்னி அடைக்கப்பட்டிருக்கும் சிறையில் நிலவும் சூழல்கள், அவரை துன்புறுத்தும் விதத்தில் இருக்கும், அது அவரை மெல்ல கொல்லும் விதத்தில் இருக்கலாம் என அம்னெஸ்டி இண்டநேஷனல் கூறியுள்ளது.