கொழும்பு துறைமுகநகர் தனிநாடாகும் ஆபத்து – அரசை எச்சரிக்கின்றார் விஜயதாச

அரசாங்கம் தயாரித்துள்ள சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் கொழும்பு துறைமுக நகரம் ஒரு தனி நாடாகக்கூடிய ஆபத்து உருவாகியிருக்கின்றது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்‌ஷ நேற்று கடுமையாக எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்.

கொழும்பு நாராஹென்பிட்டி, அபயராமய விஹாரையில் உத்தேச சட்ட மூலம் தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்த எச்சரிக்கையைவிடுத்தார்.

கொழும்பு துறைமுகநகர் ஆணைக்குழுவை உருவாக்குவதற்கான உத்தேச சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் கொழும்பு துறைமுகநகரம் நாட்டின் நிர்வாகவிதிமுறைகளில் இருந்து முற்றாக விடுபடும் என அவர் இங்கு தெரிவித்துள்ளார்.

உத்தேச சட்ட மூலத்தின் அடிப்படையில் கொழும்பு துறைமுகநகரம் இலங்கைக்குரியதாக இருக்காது. கொழும்பு மாநகரசபையின் ஆளுகைக்குள்ளும் துறைமுக நகரம் வராது என விஜயதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

கொழும்பு துறைமுக நகருக்குக் கொடுக்கப்படும் 1100 ஏக்கரையும், சீன முதலீட்டாளரின் விருப்பத்தின்படி உத்தேச ஆணைக்குழு கட்டுப்படுத்துவதை உத்தேச சட்டமூலம் உறுதி செய்கின்றது என விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“இந்தப் பகுதி மேல் மாகாண சபைக்கோ, கொழும்பு மாவட்டத்துக்கோ உட்பட்டதாக இருக்காது. சீன முதலீட்டாளர்களின் விருப்பப்படியே அது செயற்படும். உத்தேச சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், அந்தப் பகுதியைக் கட்டுப்படுத்துவதற்கான அதிகாரத்தை நகர அபிவிருத்தி அதிகார சபையும் முற்றாக இழந்துவிடும். நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டதாக அந்தப் பகுதி இருக்காது. அங்கு வரிகளையும் அறவிட முடியாது” எனவும் வழஜயதாச ராஜபக்‌ஷ சுட்டிக்காட்டினார்.

“குறிப்பிட்ட பகுதி சீனாவின் காலணித்துவப் பகுதியாகிவிடும். அத்துடன், துறைமுக நகருக்குள் வரும் காணித்துண்டுகளை வேறு நாடுகளுக்கு விற்பனை செய்யவும் முடியும். இது ஒரு தனியான வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பைக் கொண்டதாகவும், ஆட்சி முறையையும், வெளிநாட்டவர்களுடன் பேச்சுக்களை நடத்தக்கூடிய அதிகாரத்தையும் கொண்டதாக இருக்கும் என்பதால், இந்தப் பகுதி தனியான ஒரு நாடாகவே கருதப்படும்” எனவும் விஜயதாச ராஜபக்‌ஷ எச்சரித்தார்.

இதேவேளையில், உத்தேச துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினர் நேற்று உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். ஐக்கியதேசிய கட்சி ஜேவிபி உட்பட பல தொழிற்சங்கங்கள், மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஆகிய அமைப்புகளும் மனுதாக்கல் செய்துள்ளன.