மட்டு- ஈரளக்குளம் பகுதியில் பௌத்த பீடம் அமைக்க திட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம் என்னும் பகுதியில் பௌத்தபீடம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம் பகுதியானது நூறு வீதம் தமிழர்கள் வாழும் பகுதியாக காணப்படும் நிலையில், சுமார் 400 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த பௌத்தபீடம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயற்கை வனப்பும் வயல் நிலங்களும் நிரம்பிய ஈரளக்குளம் பகுதியானது தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்துவரும் பகுதியாகும். இப்பகுதியில் கிழக்கில் தொல்பொருள் திணைக்களம் என்ற போர்வையில் பல இடங்களில் பௌத்த அடையாளங்களை தேடி அலைந்து திரியும் நிலையில் ஈரளக்குளம் பகுதியில் அமைக்கப்படவுள்ள பௌத்தபீடம் தொடர்பில் தமிழ் மக்களினால் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரளக்குளம் பகுதியில் வயல்வெளி அதிகளவில் காணப்படுவதுடன், குளங்கள் மற்றும் காடுகள் சார்ந்த பகுதிகளும் காணப்படுகின்றன. இங்கு பௌத்த தேரர்களுக்கான பயிற்சி நிலையமும் பௌத்தபீடமும் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் விசேட கூட்டம் நடாத்தப்பட்டதுடன் சில தினங்களில் அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தமிழ் உணர்வாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

 கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தினை இலக்கு வைத்து மேய்ச்சல் தரை அபகரிப்பு என்னும் திட்டத்தின் கீழ் சிங்கள குடியேற்றங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், தற்போது பௌத்தபீடத்தினையும் அமைக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராமுகமாக இருந்துவருவதாகவும் தமிழ் உணர்வாளர் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.