சஹ்ரானின் நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ச்சியாக அறிவித்துவந்தேன் – நாலக்க டி சில்வா

ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரிக்கும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று மீண்டும் கூடியது.

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்னவின் தலைமையில் தெரிவுக்குழு பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடியது.

பொலிஸ் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா இன்று சாட்சியமளித்தார்.

பிரமுகர் கொலைச்சதி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாலக்க டி சில்வா பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், சக்கர நாற்காலியிலேயே இன்று அவர் சாட்சியமளிக்க வந்திருந்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பில் முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்படுவதனால் பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் விடயங்களை ஒளிப்பதிவு செய்வதற்கு ஊடகங்களுக்கு அனுமதியில்லை என சாட்சி விசாரணை ஆரம்பமாவதற்கு முன்னர் தெரிவுக்குழு அறிவித்தது.

சாட்சியாளர்கள் அல்லது தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் அது தொடர்பில் முன்வைத்த கோரிக்கைக்கமைய, ஊடகங்களுக்கு இந்த வரையறை விதிக்கப்படுவதாக குழுவின் தலைவர் அறிவித்தார்.

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் வருண ஜயசுந்தர ஆகியோர் இன்று அழைக்கப்படுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரிடம் சாட்சி விசாரணை முன்னெடுக்கப்பட்டதன் பின்னர் மேற்குறிப்பிட்ட நபர்களை அழைப்பதற்கு எதிர்பார்ப்பதாக தெரிவுக்குழு இன்று அறிவித்தது.

இன்றைய விசாரணையின் போது, ஏப்ரல் 21 தாக்குதல்தாரியான சஹ்ரான் தொடர்பில் தாம் 2013 ஆம் ஆண்டு முதல் அறிந்திருந்ததாக பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.

சஹ்ரானின் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரிக்கும்போது, அவரின் இணையத்தளம், முகப்புத்தகப் பக்கம் என்பவற்றை கண்காணித்து வந்ததாகவும் அவர் வன்முறை கடும்போக்குவாதம் நோக்கிப் பயணிப்பது தெரியவந்ததாகவும் நாலக்க டி சில்வா சாட்சியமளித்துள்ளார்.

இவை தொடர்பாக தொடர்ச்சியாக காவல்த்துறை அதிபருக்கு தான் கைதுசெய்யப்படுவரை அறிவித்து வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.