யாழ். மாநகர காவல்படை விவகாரம் – பாதுகாப்பு அமைச்சு ஆலோசனைக் குழுவில் ஆராய்வு

யாழ். மாநகர காவல் படை விடயம் தொடர்பில் பாராளுமன்றக் கட்டடத்தில் நேற்று நடைபெற்ற பாதூகப்பு அமைச்சின் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பிற்பகல் 2 மணியளவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் யாழ்ப்பாணம் மாநகரைத் தூய்மைப்படுத்தும் வகையில் மாநகர சபையால் நியமிக்கப்பட்டுள்ள காவல் படை தொடர்பிலும், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சீருடை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்தும் விசேடமாக ஆராயப்பட்டது.

இதன்போது தேசிய பாதுகாப்புக் கருதி சில முடிவுகள் எடுக்கப்பட்டன எனவும், அவை விரைவில் வெளியாகும் எனவும் கூட்டத்தில் கலந்துகொண்ட முக்கிய பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார். யாழ். மாநகர சபையால் மாநகரின் சுகாதார நடைமுறைகளைக் கண்காணித்தல், கழிவகற்றல் பொறிமுறையைக் கண்காணித்தல் மற்றும் மாநகரின் ஒழுங்கு உள்ளிட்டவற்றை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்ட காவல்படையின் சீருடைவிவகாரம் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சீருடை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆளுகைப் பகுதிகளுக்குள் காவல்துறையினர் பயன்படுத்திய சீருடையைப் போன்ற வர்ணத்தால் வடிவமைக்கப்பட்டிருந்த நிலையில் மேற்படி சீருடைகள் தொடர்பில் யாழ்.மாநகர சபை ஆணையாளர், பிரதம வருமான வரிப்பரிசோதகர் மற்றும் குறித்த காவல்படையில் பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்டிருந்த மாநகர சபை ஊழியர்கள் ஐவர் உட்பட்ட 7 பேரிடம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்று முன் தினம் இரவு மூன்று மணி நேரத்துக்கும் மேலாக தொடர் விசாரணை நடைபெற்றது.

யாழ். மாநகர மேயரும் நேற்று முன்தினம் இரவு விசாரணைக்காக யாழ். பொலிஸ் நிலையத்தில் பிரசன்னமாகியிருந்தார். கொழும்பிலிருந்து கிடைக்கப்பெற்ற பணிப்புக்கு அமைய குறித்த நடவடிக்கை முன்னெடுக்கபட்டது எனச்சொல்லப்பட்டது. இந்நிலையிலேயே நேற்று பிற்பகல் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின்ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் யாழ். மாநகர சபை விவகாரம் தொடர்பில் விசேடமாக ஆராயப்பட்டுள்ளது.