சிறிலங்காவில் குழந்தை பிறக்கும் போதே அடையாள அட்டை

குழந்தை பிறக்கும் போதே தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக உள்ளுராட்சி சபைகள், மாகாண சபைகள் மற்றும்  உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

மாத்தளை நகரசபையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் போதே அவருக்கான தேசிய அடையாள அட்டை இலக்கத்தை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த இலக்கம் பிறப்புச் சான்றிதழுடன் இணைக்கப்படும். இதற்கான வேலைத் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும்.

புதிய தொழில்நுட்பத்தின் பிரகாரம் அனைவருக்கும் ஒரு தனித்துவமான அடையாள அட்டை இலக்கத்தைப் பெற்றுக் கொடுக்க 40 பில்லியன் செலவாகும்.

இதை ஒழுங்கு செய்து தரும்படி பிரதமரிடம் கோரப்பட்டுள்ளது. செலவாகும் தொகை ஒரு வருடத்திற்குள் மீண்டும் ஈட்டிக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.