தமிழகம் தேர்தல் – 2021 – யார் வெல்வார்கள்?

தமிழகத்தில் தேர்தல் திருவிழா நடந்து முடிந்திருக்கிறது. வடை சுடுதல், துணி துவைத்தல் ,பால் கறத்தல் அழும் குழந்தையின் மூக்கை சிந்துதல் ,சின்னஞ் சிறுசு முதல் வயதில் பெருசு வரை ஆள் வித்தியாசம் பார்க்காமல் காலில் விழுந்து கும்பிடுதல் போன்ற “மக்கள் சேவைகளை” சளைக்காமல் செய்த வேட்பாளர்களை கண்டு தமிழகமே திகைத்துப் போனது.

தத்துவங்களையோ கொள்கைகளையோ முன் நிறுத்தாமல் “ஒண்டிக்கு ஒண்டி வர்றியா..!” என்று பகை நாட்டு மன்னனை போருக்கு அழைப்பது போல், தேர்தல் பிரச்சாரத்தில் “வீரவேசம்” காட்டிய கட்சிகளும் வேட்பாளர்களும் உண்டு.

முதியோர்கள், இல்லத்தரசிகள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், மாணவர்கள் என சமூகத்தின் அனைத்து தரப்பிற்கும் கொரோணா நிவராண நிதி, இலவச  சலவை இயந்திரம், எரிவாயு உருளைக்கு மானியம் என ஆயிரமாயிரம் வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் வாரி வழங்கியுள்ளன. ஏற்கனவே ஆறு இலட்சம் கோடி கடனில் தவிக்கிறது தமிழகம். இவை அனைத்தையும் நிறைவேற்ற இன்னொரு ஆறு இலட்சம் கோடி கடன் தேவைப்படும். வழக்கம்போலவே தேர்தல் வாக்குறுதிகளில் தமிழ்மொழி “பாசம்” ததும்பி வழிகிறது.

கல்வி -நீதிமன்றங்கள்- ஆலயங்களில் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் தமிழ்த் தெருவில் எங்கும் தமிழ் இல்லாத போக்கு நீடிக்கும் நிலையில், இன- மொழி மீட்சிக்காக இவர்களிடம் எந்த திட்டமும் இல்லை.  செயலும் இல்லை.

அனைத்து கட்சி தேர்தல் அறிக்கைகளிலும் இம்முறையும் ஈழப் பிரச்சினை இடம்பெற்றிருக்கிறது.  தனி ஈழத்திற்கு பொது வாக்கெடுப்பு, தமிழகத்தில் தங்கியுள்ள அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை ஏழு தமிழர் விடுதலை என அதில் எல்லாமும் இருக்கிறது. ஆனால் எப்போதும் போல இத் திசையில் தீவிரமான முன்நகர்த்தல்களோ திட்டமிட்ட செயல்பாடுகளோ இல்லாமல் இருப்பதைதான் நாம் இதுவரை பார்த்து வந்திருக்கிறோம்.

தேர்தல் திருவிழாவும்  தெருவெல்லாம் பிரச்சாரக் கூத்துகளும் நடந்து முடிந்தாலும் இன்னும் இருபத்தைந்து நாட்களுக்கு எந்த கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் தூக்கம் இருக்காது.

மே 2 தான் இறுதிக்காட்சி. ஆம் அன்றுதான் வாக்கு எண்ணிக்கை. ஜனநாயகம் , பணநாயகம், மதவாதம் என பெரிய பெரிய வார்த்தைகளில் இவர்கள் பேசியதில் எது வெல்லப் போகிறது என்பது அன்று தான் தெரியும்.