அதிக எண்ணிக்கையிலான கொரோனா தடுப்பு மருந்துகள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி -ஐ.நாவில் இந்தியா தகவல்

இந்திய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்தைவிட அதிக எண்ணிக்கையிலான ஊசிகளை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளோம் என ஐ.நா பொதுச் சபையில் இந்தியா தெரிவித்துள்ளது.

மேலும் தடுப்பு மருந்துகள் கிடைப்பதில் உள்ள ஏற்றத்தாழ்வு, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நாடுகளை மிகவும் பாதிக்கும். இதனால், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சி தோற்கடிக்கப்படும் என்றும் இந்தியா எச்சரித்துள்ளது.

கொரோனா தடுப்பு மருந்துகளுக்கான உலகளாவிய அணுகல் (ACCESS) குறித்த இந்தியாவின் அரசியல் பிரகடனத்திற்கு 180 ஐ.நா உறுப்பு நாடுகள் ஆதரவளித்துள்ளன.

இந்நிலையில், ஐ.நாவிற்கான இந்தியாவின் நிரந்தர துணை பிரதிநிதி கே. நாகராஜ் நாயுடு, ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில், உலகெங்கும் கொரோனா தொற்று நீடித்து வரும் சூழலில், தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்கான பல தடுப்பு மருந்துகளை அறிவியல் உலகம் அளித்திருப்பதன் மூலம் 2021ஆம் ஆண்டு ஒரு நேர்மையான தொடக்கத்துடன் அமைந்துள்ளது என்றார்.

மேலும் இன்று வரை  எங்கள் சொந்த மக்களுக்கு அளித்த தடுப்பு மருந்துகளைவிட, உலக நாடுகளுக்கு அதிக தடுப்பு மருந்துகளை  இந்தியா வழங்கியுள்ளது. ஐ.நா அமைதிப்படைக்கு 2,00,000 கோவிட் 19 தடுப்பு மருந்துகளை இந்தியா பரிசாக வழங்கியுள்ளது” என்றார்.