இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று – ஒரு நாளைக்கு 40ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு

இந்தியாவில் கடந்த சில நாட்களாக மிக வேகமாக கொரோனா தொற்று பரவ ஆரம்பித்துள்ளது.

மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், சத்தீஸ்கர், தமிழ்நாடு ஆகிய ஆறு மாநிலங்களில்  தற்போது கொரோனா புதிய பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை மட்டும்  40,715. இதில், இந்த 6 மாநிலங்களில் மட்டும் 80.90% பதிவாகியுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 24,645 பேரும், பஞ்சாபில் 2,299 பேரும், குஜராத்தில் 1,640 பேரும், தமிழகத்தில் 1,385 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவில் தற்போது 3,45,377 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதே நேரம் கடந்த 24 மணி நேரத்தில் 199 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, பல்வேறு நகரங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் மத்திய  உள்துறை அமைச்சகம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, புதிய வழிகாட்டி நெறிமுறைகளை மாநில அரசுகளுக்கு வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

1-கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, பாதிக்கப்பட்டவருக்கு ஆழ்ந்த பரிசோதனை செய்ய வேண்டும். அவரைத் தனிமைப்படுத்துதல் அல்லது சரியான நேரத்தில் விரைவாக உரிய சிகிச்சையை அளிக்க வேண்டும்.

2-பரிசோதனையை அதிகப்படுத்துதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்தல், அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் கண்டுபிடித்து அவர்களையும் தனிமைப்படுத்துதல் மற்றும்கொரோனா தடுப்பு மருந்து   செலுத்த வேண்டிய பிரிவினருக்கு அதை வேகப்படுத்த வேண்டும்.

3-கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்களை விரைவாகக் கண்டறிய வேண்டும். அவர்களைத் தனிமைப்படுத்திக் கண்காணிக்க வேண்டும்.

4-கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களைக் கண்காணித்து, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியைக் கவனமாக மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்.

5-கொரோனா திரட்சி இருக்கும் பகுதிகளில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனையைத் தீவிரப்படுத்தி, 70 சதவீதம் அளவுக்கு உயர்த்த வேண்டும்.

6-உள்ளூர் சூழலைக் கண்காணித்து,  கொரோனா பரவல் நிலைக்கு ஏற்ப உள்ளாட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதிக்கலாம். நகர அளவில் கட்டுப்பாடுகள், வார்டுகள் அளவில் கட்டுப்பாடுகள் தேவைக்கு ஏற்ப விதிக்கலாம்.

7-மாநிலங்களுக்கு இடையேயும், மாநிலத்துக்குள்ளேயும் போக்குவரத்தில் தடை ஏதும் இல்லை. தனிநபர்கள் மாவட்டங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கு இடையேயும் பயணிக்கத் தடையில்லை. சரக்கு வாகனப் போக்குவரத்துக்கும் தடையில்லை.

8-கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மக்கள் கொரோனா விதிகளைக் கட்டுப்பாட்டுடன் பின்பற்ற மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர், நகராட்சி நிர்வாகம் பொறுப்பாக இருந்து நடவடிக்கை எடுத்து, அதைக் கண்காணிக்க வேண்டும்.

9-கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியே இருக்கும் பள்ளிகள்,  தங்கும் ,உணவு விடுதிகள், உயர்கல்வி நிறுவனங்கள்,  தொடரூந்து போக்குவரத்து, பல்பொருள்வாணிபங்கள், திரையரங்குகள், பூங்காக்கள், யோகா மையம், உணவகங்கள், கண்காட்சிகள், கூட்டங்கள் நடத்தத் தடை ஏதும் இல்லை என்று  அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.