இரணைதீவில் ஜனாசா புதைப்பு – தமிழ் முஸ்லிம் மக்களிடையே உருவாகிவரும் ஐக்கியத்தை உடைக்கும் சூழ்ச்சி

இரணைதீவில் ஜனாசா புதைப்பு  முயற்சி தமிழ் முஸ்லிம் மக்களிடையே உருவாகிவரும் ஐக்கியத்தை உடைக்கும் பேரினவாத ஆளும் வர்க்க சூழ்ச்சி என குற்றம் சுமத்தியுள்ளது சி.கா.செந்திவேல்.

மேலும் முஸ்லிம் மக்களைப் பழிவாங்கி இழிவுபடுத்தி ஒடுக்கும் அரசாங்கத்தின் மற்றொரு தீர்மானமே கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைதீவில் கொரோனாவினால் இறந்த முஸ்லிம் ஜனாசாக்களைப் புதைக்கும்  முட்டாள்தனமான முடிவாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மத்திய குழுவின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச்செயலாளர் சி.கா.செந்திவேல்  வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இது போரினால் தொழில்களை இழந்து இடம்பெயர்ந்து கடும் பாதிப்படைந்த சிறிய நிலப்பரப்புடைய இரணைதீவு மக்களின் மீள்குடியேற்றம், வாழ்வாதார தொழில் முயற்சிகள், இயல்பு வாழ்வு என்பனவற்றுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் அச்சுறுத்தலாகும்.

அத்துடன் இஸ்லாமிய மக்கள் எவரும் வசிக்காத இரணைதீவில் கொரோனாவால் இறந்த இஸ்லாமிய மக்களின் ஜனசாக்களைப் புதைக்கும் முயற்சி தமிழ் முஸ்லிம் மக்களிடையே உருவாகிவரும் புரிந்துணர்வு, ஐக்கியத்தை உடைக்கும் பேரினவாத ஆளும் வர்க்கச் சூழ்ச்சியுமாகும்.

எனவே இத்தகைய அடாத்தான செயற்பாடுகளை விடுத்து அரசாங்கம், இஸ்லாமிய மக்களின் விருப்பத்தை மதித்து அவர்களின் மையவாடிகளில் போதிய சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து ஜனாசா அடக்கத்தை மேற்கொள்ளவேண்டும். இரணைதீவு மக்களோடும் தமிழ் முஸ்லிம் மக்களோடும் இணைந்து  ‘இரணைதீவைப் புதைகுழியாக்காதே’ எனும் மக்கள் இயக்கத்திற்கு எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி (NDMLP) முழு ஆதரவையும் வழங்குகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.