எல்லை தாண்டிய பயங்கரவாதம்- ஐ.நாவில் பாகிஸ்தான் மீது இந்தியா குற்றச்சாட்டு

அரசு ஆதரவுடன் நடக்கும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என ஐ.நா. கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமை  கூட்டத்தொடரில், இந்தியா மீது பாகிஸ்தான் குற்றம் சாட்டியிருந்தது.

இதுகுறித்து ஜெனீவாவில் உள்ள இந்தியாவின் நிரந்தர தூதரகத்தின் முதன்மை செயலாளர் பவன்குமார் பதே, மனித உரிமை  கூட்டத்தில்  உரையாற்றுகையில்,

“இந்தியாவுக்கு எதிராக பொய் பிரசாரம் மேற்கொள்ளும் நோக்கத்தில், ஐ.நா. மனித உரிமை  கூட்டத்தொடரை பாகிஸ்தான் திட்டமிட்டு தவறாக பயன்படுத்தி வருகிறது. மோசமான பொருளாதார நிலையில் இருக்கும் பாகிஸ்தான், இந்த கூட்டத் தொடரின் நேரத்தை வீணடிக்கக்கூடாது.

அரசு ஆதரவுடன் நடக்கும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தையும், சிறுபான்மையினரின் மனித உரிமைகளை நசுக்குவதையும் நிறுத்துமாறு பாகிஸ்தானை   வற்புறுத்த வேண்டும்.

ஐ.நா.வால் தடை விதிக்கப்பட்ட எத்தனையோ பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆக்கமும், ஊக்கமும் அளித்து வருகிறது. அரசு நிதியில் இருந்து அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கி வருவதையும் இந்தமனித உரிமை கூட்டத்தொடர்  அறியும். பயங்கரவாதிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக பாகிஸ்தான் ஆகியிருப்பதாக அந்நாட்டு தலைவர்கள் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளனர்.

மனித உரிமை மீறலின் மோசமான வடிவம்தான் பயங்கரவாதம். சுதந்திரம் பெற்றதற்கு பிறகு, இந்து, கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் ஆகிய சிறுபான்மையினரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது எப்படி என்று பாகிஸ்தானிடம் விளக்கம் கேட்க வேண்டும்.

பாகிஸ்தானில், அரசுக்கு எதிராக பேசுபவர்கள் தன்னிச்சையாக சிறைவைக்கப்படுகிறார்கள், காணாமல் போகிறார்கள், கொலை செய்யப்படுகிறார்கள். இந்த அராஜகங்களில் ஈடுபடும் பாதுகாப்பு படையினர், எந்த தண்டனையும் இன்றி தப்பி விடுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.