அமெரிக்காவின்  பொருளாதாரத் தடைகளை எதிர் கொள்ள தயார்- ரஷ்யா

38
108 Views

அமெரிக்காவின் எந்தவிதமான பொருளாதாரத் தடைகளையும் எதிர் கொள்ள தயாராக இருப்பதாக  ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்ய அதிபர் புதினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி. ரஷ்ய அதிபர் தேர்தலின்போதும் தொடர் பிரச்சாரங்களில் ஈடுபட்ட அலெக்ஸி நவால்னிக்கு இளைஞர்கள் மத்தியில் பரவலான வரவேற்பு இருந்தது.

ஆனால், புதின் அரசு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவரைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இருப்பினும் அலெக்ஸி நவால்னி தொடர்ந்து பொதுவெளியில் புதின் அரசை விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது அலெக்ஸி மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து அவர் ஜெர்மனியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டதை ஜெர்மனி அரசு சமீபத்தில் உறுதிப்படுத்தியது. அவருக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக தங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதாக ஜெர்மனி தெரிவித்தது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை  ரஷ்யா முற்றிலுமாக மறுத்தது

இந்த நிலையில் சிகிச்சைக்குப் பின் ரஷ்யா திரும்பிய அலெக்ஸி நவால்னி கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ரஷ்யா முழுவதும் அலெக்ஸி நவால்னியின் ஆதரவாளர்கள் பேரணி சென்றனர். இதில் 10,000க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர். இதில் 1,000க்கும் அதிகமானவர்களை ரஷ்ய காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அலெக்ஸி நவால்னிக்கு மோசடி வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதிக்க அமெரிக்கா தயாராகி வருகிறது தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைத்தது தொடர்பாக அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்க அமெரிக்கா தயாராகி வருகிறது. அவ்வாறு விதித்தால் ஜோ பைடன் நிர்வாகம்,  ரஷ்யா மீது விதிக்கும் முதல்  பொருளாதாரத் தடை இதுவாகும்” என்று செய்தி வெளியானது.

இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “ அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டது தொடர்பாக எந்த ஆதாரமும் இல்லை. அலெக்ஸிக்கு கடந்த வருடம் உடல் நலம் பாதித்தத்தில் ரஷ்யாவின் பங்கு எதுவும் இல்லை. எங்கள் மீது எந்தவிதமான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தாலும் அதனை எதிர் கொள்ள தயாராக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here