ஈஸ்டர் தாக்குதல் நாளை ‘கருப்பு ஞாயிறு’ தினமாக அறிவிக்க தீர்மானம்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் திருப்தி கொள்ள முடியாது என தெரிவித்து கருப்பு ஞாயிறு தினத்தை அறிவிக்க கொழும்பு மறைமாவட்ட பேராயர்கள் தீர்மானித்துள்ளனர்.

அதன்படி, எதிர்வரும் 07ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் ´கருப்பு ஞாயிறு´ தினமாக அறிவிக்க கொழும்பு மறைமாவட்டத்தின் பேராயர்கள் தீர்மானித்துள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்காமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு ஞாயிறு தினம் பிரகடனப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அன்றைய தினம் கிறிஸ்தவ மக்கள் கருப்பு ஆடைகளை அணிந்து பூஜையில் கலந்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் திகதி இலங்கையில்  தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இதில், 8 தற்கொலை குண்டுத்தாரிகள் உள்ளடங்களாக சுமார் 277 பேர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.