ஜமால் கஷோகி படுகொலை- அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுக்கும் சவுதி

45
91 Views

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை,சவுதி இளவரசர்  சல்மான் உத்தரவின் பேரில்தான் நடத்தப்பட்டுள்ளது என்று அமெரிக்க தேசிய புலனாய்வு அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை சவுதி  திட்டவட்டமாக மறுத்துள்ளது.

ஜமால்   கஷோகி சவுதியின் புகழ்பெற்ற பத்திரிகையாளர். 1980களில் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் வளர்ச்சியிலிருந்து தனது எழுத்துப் பணியைத் தொடங்கியவர். அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் இருந்து  சவுதி அரசையும், அதன் மன்னர் மற்றும் இளவரசர்களை விமர்சித்து ஆங்கிலத்திலும், அரபு மொழியிலும் கட்டுரை எழுதி வந்தவர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள  சவுதி தூதரக அலுவலகத்தில் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக, சவுதியைச் சேர்ந்த 15 பேரின் பெயரை துருக்கி வெளியிட்டது. ஜமாலை சவுதிதான் கொலை செய்திருக்கிறது என்று துருக்கி உறுதியாகக் கூறியதுடன், இதற்கான வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரத்தை வெளியிட்டது. ஆனால் சவுதி இதை கடுமையாக மறுத்து வந்தது.

இந்நிலையில், அமெரிக்கப் புலனாய்வுத் துறை பத்திரிகையாளர் ஜமால் கொலை தொடர்பாக அமெரிக்க தேசிய புலனாய்வு அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “பத்திரிகையாளர் ஜமால் கஷோகியைக் கொலை செய்ய சவுதி இளவரசர் சல்மான் உத்தரவிட்டார் என்று நாங்கள் நடத்திய விசாரணையில் மதிப்பிட்டுள்ளோம்.   என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பத்திரிகையாளர்கள், செயற்பாட்டளர்கள் மீது  சவுதி நடத்தும் தாக்குதலை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதனை  அமெரிக்கா பொறுத்துக்கொள்ளாது என்றும் சவுதிக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

ஜமால் கொலை தொடர்பாக  அமெரிக்கா வெளியிட்ட இவ்வறிக்கை சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதையடுத்து சவுதி  அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

இது தொடர்பாக  சவுதி அரசு தரப்பில், “நாங்கள் இந்தக் குற்றசாட்டை முற்றிலுமாக நிராகரிக்கிறோம். இது எதிர்மறையானது, தவறானது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here