எல்லையில் அமைதியை நிலை நாட்ட இந்தியாவும் சீனாவும் உறுதி

33
111 Views

இந்திய, சீன வெளியுறவுத்துறை  அமைச்சர்கள் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தையின் போது எல்லையில் அமைதியை நிலைநாட்ட உறுதி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

கடந்த மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக்கின் பல்வேறு முனைகளில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றதாக இந்திய தரப்பில் குற்றம்சுமத்தப்பட்டது.

அதே போல் கடந்த ஜூன் 15-ம் திகதி  கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்களிடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்தனர். சீன தரப்பில் 45 முதல் 60 வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அமெரிக்க, ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் 4 பேர் மட்டுமே உயிரிழந்ததாக சீன இராணுவம்  அறிவித்துள்ளது.

கடந்த செப்டம்பரில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இந்திய, சீன வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்தித்துப் பேசினார். அப்போது 5 அம்ச திட்டத்தின்படி எல்லை பிரச்சினைக்கு தீர்வு காண உடன்பாடு எட்டப்பட்டது.

இதன்பின் இந்திய, சீன இராணுவ உயரதிகாரிகளின் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கப்பட்டது. இதில் இரு நாடுகளின் வெளியுறவுத் துறையை சேர்ந்த மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர். 9-வது சுற்று பேச்சுவார்த்தையில் எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டது. இதன்படி கடந்த 10-ம் திகதி முதல் லடாக்கின் பான்காங் ஏரிப் பகுதியில் இருந்து இந்திய, சீன படைகள் வாபஸ் பெறப்பட்டன. சீன இராணுவ வீரர்கள் பிங்கர் 8 நிலைக்கு திரும்பிச் சென்றனர். இந்திய வீரர்கள் பிங்கர் 3 நிலைக்கு திரும்பினர்.

இதைத் தொடர்ந்து   இந்திய, சீன இராணுவ உயரதிகாரிகளின் 10-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பின்னணியில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீவும்   தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பதற்றம் நீடிக்கும் எல்லைப் பகுதிகளில் இருந்து இந்திய, சீன ராணுவ வீரர்களை வாபஸ் பெற வேண்டும். எல்லையில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இருநாட்டு அமைச்சர்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதில் சீன பிரதமர் ஜி ஜின்பிங் உட்பட பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். அதற்கு முன்பாக இந்தியா, சீனா இடையே சுமுக உறவை ஏற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here