ஆங் சான் சூகி மீது பரிதாபமா? இனவழிப்பை மறந்துவிட்டீர்களா? – தமிழில் ஜெயந்திரன் – பகுதி – 2

உரோகிங்கியா மக்கள் மேல் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள்

சனநாயகத்தின் வடிவமாகப் பார்க்கப்பட்ட ஆங் சான் சூகியின் நிகழ்ச்சி நிரலில் உரோகிங்கியா மக்களின் விடயம் ஒருபோதுமே உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

மேலும் உரோகிங்கியா மக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என விடுக்கப்பட்ட அறைகூவல்கள் என்எல்டிக் கட்சியினால் மீண்டும் மீண்டும் கடுமையான முறையில் மறுக்கப்பட்டன. உண்மையில் மியான்மார் நாட்டை நீங்கள் தரிசிக்கச் செல்கின்ற போது, அங்குள்ள அரசியல்வாதிகளுடனோ அன்றேல் வீதிகளிலுள்ள பொதுமக்களுடனோ உரையாடல்களை மேற்கொள்ளும் போது ‘உரோகிங்கியா’ என்ற சொல் தவிர்க்கப்படும்   (taboo) ஒரு சொல்லாக இருப்பதைக் காணலாம். ‘உரோகிங்கியா’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்கு 2012ம் ஆண்டு அரசினால் தடைவிதிக்கப்பட்டது.

merlin 131498372 db5971f9 cadd 4388 8ae4 63389af10552 ஆங் சான் சூகி மீது பரிதாபமா? இனவழிப்பை மறந்துவிட்டீர்களா? - தமிழில் ஜெயந்திரன் - பகுதி - 2

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் (Pope Francis) 2017ம் ஆண்டு மியான்மார் நாட்டைத் தரிசித்த தனது பயணத்தின் போது, உரோகிங்கியா முஸ்லிம்களை பகிரங்கமாகப் பெயர்சொல்லி அழைப்பதைத் தவிர்த்திருந்தார். ‘உரோகிங்கியா’ என்ற சொல்லை உச்சரிப்பதற்கு அருகிலுள்ள பங்களாதேஷ் நாட்டுக்குச் செல்லும் வரை அவர் காத்திருந்தார்.

அப்படிச் செய்வது ‘அவர்களின் முகத்தில் அடிப்பது போல இருந்திருக்கும்” என்று சொல்லி அவர் தனது முடிவை நியாயப்படுத்தியிருந்தார்.

அரசியல் ரீதியில் கவனமான தனது அணுகுமுறையின் காரணமாக உரோகிங்கியா மக்களுக்கு எதிராகக் குரூரமான பரப்புரைகளை மேற்கொண்டிருந்த அதிபர் ஹிலேங்குடன் ஒரு தனிப்பட்ட சந்திப்பை மேற்கொண்டு ‘கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரங்கள் மீண்டும் தொடரக்கூடாது” என்பதை அவரிடம் நேரில் தெரிவிக்க தனக்கு உதவியதாகத் திருத்தந்தை தெரிவித்திருந்தார்.

உரோகிங்கியா முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகளில் முன்வைக்கப்பட்ட கண்டனங்களிலிருந்து மியான்மாரை எப்போதும் பாதுகாக்கின்ற நாடுகளாகவே சீனாவும் ரஷ்யாவும் இருந்து வந்திருக்கின்றன. ஆனால் தனது நாட்டில் உரோகிங்கியா முஸ்லிம் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளை முற்று முழுதாக மறுத்ததன் காரணத்தினால், மனித உரிமைகளின் பாதுகாவலராகப் போற்றப்பட்ட ஆங் சான் சூகி உலகத்தின் நன்மதிப்பை இழக்க நேரிட்டது.

இதில் கவலை தரும் விடயம் எதுவென்றால், ஏனைய இனக்குழுமங்கள் அனைத்தும் இந்த முஸ்லிம் சிறுபான்மைச் சமூகத்தை எப்போதும் அலட்சியப்படுத்தியே வந்திருக்கின்றன. அப்படிப் பார்க்கும் போது முஸ்லிம் மக்கள் மேல் மியான்மார் நாட்டின் பொதுமக்கள் கொண்டிருந்த அபிப்பிராயத்தைப் பார்க்கும் போது, அரசு அவர்களைப் பற்றிக் கொண்டிருந்த அபிப்பிராயத்திலிருந்து அது பெரிதும் வேறுபடவில்லை என்பதே உண்மையாகும்.

முன்னர் ‘அறக்கன்’ (Arakan) என அழைக்கப்பட்டு தற்போது ‘றக்கைன்’ (Rakhine) என அழைக்கப்படும் பிரதேசத்தில் 18ம் நூற்றாண்டிலிருந்து உரோகிங்கியா முஸ்லிம் மக்கள் வசித்து வருகிறார்கள். ஆனால் 1982ம் ஆண்டில் அவர்களுக்குக் குடியுரிமை மறுக்கப்பட்டது. ‘சட்டவிரோதக் குடியேறிகள்’ என்று மியான்மார் அரசு அவர்களை இன்றும் அழைக்கிறது.

ஓர் குறிப்பிட்ட இனத்தையும் ஓர் குறிப்பிட்ட மறையையும் சார்ந்திருப்பதன் காரணத்தினால் கடுமையான துன்புறுத்தல்களையும் கடுமையான இனவாதத்தையும் தொடர்ந்து அதிகரித்துச்செல்கின்ற வன்முறைகளையும் உரோகிங்கியா முஸ்லிம் மக்கள் இன்றுவரை சந்தித்து வந்திருக்கிறார்கள். காரணமின்றிக் கைதுசெய்யப்படல், சித்திரவதைகள், அடிமை வேலை, கிராமங்கள் எரிக்கப்படல், பாலியல் வன்புணர்வுகள் போன்ற அநீதிகளுக்கு அவர்கள் ஆளாகியிருக்கிறார்கள்.

மியான்மாரிலிருந்து ஹொங்கொங் நாட்டுக்கு 2009 இல் வந்த ஒரு தூதுவர், ‘அவலட்சணமான அரக்கர்கள்’ ((ugly ogres) என்று உரோகிங்கியா முஸ்லிம் மக்களை பகிரங்கமாகவே அழைத்திருந்தார். உரோகிங்கியா மக்களை சாதாரண மனிதர்களாவே கருதாத பலரை மியான்மார் நாட்டில் நீங்கள் சந்திக்கலாம்.

இனச்சுத்திகரிப்பு

உலகிலே மிக நீண்ட காலமாகவே அதிக துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வருகின்றவர்கள் என்பதுடன் எவராலும் மதிக்கப்படாதவர்கள் என்று கருதப்படும் உரோகிங்கியா மக்களுக்குப் பௌத்த மறையைப் பெரும்பான்மை மறையாகக் கொண்ட நாட்டில் எந்தவித சட்டபூர்வ உரிமையையும் இல்லை என்பது நோக்கத்தக்கதாகும்.

இராணுவம் இந்த மக்கள் மேல் வன்முறைத் தாக்குதல்களை மேற்கொள்கின்றது என்பதற்கப்பால், உரோகிங்கியா மக்களுக்கு எதிரான உணர்வுகளைக் கிளறி, றக்கைன் பிரதேசத்தில் மேற்குறிப்பிட்ட மக்கள் மீது வன்முறைக்கும்பல்கள் தாக்குதல்களைத் தொடுப்பதற்கு பௌத்த மறை சார்ந்த துறவிகள் காரணமாக இருந்திருக்கின்றனர்.

40279627 101 ஆங் சான் சூகி மீது பரிதாபமா? இனவழிப்பை மறந்துவிட்டீர்களா? - தமிழில் ஜெயந்திரன் - பகுதி - 2

எடுத்துக்காட்டாக, பௌத்த தேசியவாதத்தை முன்னெடுக்கும் 969 இயக்கம், இச்சிறுபான்மை மக்கள் அழித்தொழிக்கப்பட வேண்டும் என மீண்டும் மீண்டும் அறைகூவல் விடுத்திருக்கிறது. முஸ்லிம் மக்களுக்கு எதிரான வெறுப்பூட்டும் பேச்சுகளும் காலத்துக்குக் காலம் மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட பரப்புரைகளும் இம் மக்கள் குழுமத்தின் மீது மிக மோசமான வன்முறைத் தாக்குதல்களைத் தூண்டி, ஆயிரக்கணக்கான உரோகிங்கியா சமூகங்களை அழித்து, 750,000க்கு மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து செல்லக் காரணமாக அமைந்திருக்கின்றன.

மியான்மாரில் முஸ்லிம் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வன்முறைகளை ‘இனச்சுத்திகரிப்பு’ என்று மனித உரிமை ஆர்வலர்கள் பெயரிட்டு அழைக்கிறார்கள்.

உரோகிங்கியா மக்களுக்கு எதிராக மனித குலத்துக்கெதிரான குற்றங்கள் இழைக்கப்பட்டிருக்கின்றன என ‘ஐக்கிய நாடுகள்’ ஏற்றுக்கொண்டிருக்கிறது. உரோகிங்கியா முஸ்லிம் மக்களுக்கு எதிராக மியான்மாரில் மேற்கொள்ளப்பட்டவை, ‘இனவழிப்பு’ என்ற வரைவிலக்கணத்துக்குள் உள்ளடக்கப்படக்கூடியவை என்றும் உரோகிங்கியா மக்கள் நடத்தப்பட்ட முறை இனவழிப்பைச் சுட்டிநிற்கிறது என்றும் அமெரிக்காவிலுள்ள யூத மக்களுக்கு எதிரான இனவழிப்பு தொடர்பான அருங்காட்சியகம் சார்ந்த ஆய்வாளர்கள் அண்மையில் தெரிவித்திருந்தார்கள்.

பன்னாட்டுச் சமூகத்தின் அழுத்தம் கணிசமாக அதிகரித்ததன் காரணமாக, 2017ம் ஆண்டில் பல்லாயிரக்கணக்கான உரோகிங்கியா ஏதிலிகளை, கொக்ஸ் பஸார் (Cox Bazaar) என்னும் இடத்தில் அமைந்துள்ள அகதி முகாம்களில் வைத்துப் பராமரிக்கின்ற அண்டைய நாடான பங்களாதேசுடன் மேற்படி ஏதிலிகள் மீண்டும் மியான்மாரில் குடியமர்த்தப்படுவார்கள் என்று பெருவிருப்பின்றியே ஒப்பமிட்ட இருதரப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த தாம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக என்எல்டிக் கட்சி கடந்த வருடம் தெரிவித்திருந்தது.

ஒரு ஊடகவியலாளர் என்ற வகையில் பல போர்கள் தொடர்பான செய்திகளை நான் சேகரித்திருக்கிறேன். மோதல்கள் நடைபெறும் இடங்களிலிருந்து போர்க்குற்றங்கள் தொடர்பாக நேரடியாகவே தகவல்களைத் திரட்டியிருக்கிறேன். பாலியல் வன்புணர்வுகள், வன்முறைகள், சித்திரவதைகள் போன்ற பல்வேறு விதமான துஷ்பிரயோகங்களுக்கு முகம் கொடுத்தவர்களையும் சந்தித்திருக்கிறேன். ஆனால் உரோகிங்கியா முஸ்லிம் மக்கள் பட்ட துன்பங்களை மட்டும் வேறு எவரது துன்பங்களுடனும் ஒப்பிட முடியாது.

இந்த மக்களுக்கு நாடு என்று எதுவும் இல்லை. அண்டைய நாடுகளில் ஏதிலிகளாக இவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் இவர்களைப் வைத்துப் பராமரிப்பதற்கு இந்த நாடுகள் விரும்பவில்லை. அவர்களுக்கு உறைவிடங்கள் இல்லை. உணவையும் தூய குடிநீரையும் பெறுவதற்கே இவர்கள் நாளாந்தம் போராட வேண்டியிருக்கிறது.

இவர்களிடம் ஆடைகளோ காலணிகளோ இல்லை, இவர்கள் வாழ்ந்த இல்லங்களும் கிராமங்களும் அழிக்கப்பட்டுவிட்டன. இம்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் காரணமாக இவர்களில் பெரும்பாலானோர் தமது குடும்ப உறவுகளையும் இழந்திருக்கிறார்கள். அரிவாட்களால் தாம் படுகொலை செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக இவர்கள் தப்பியோடுகிறார்கள். அவர்களுக்கு மிஞ்சியது எல்லாம் வறுமையும் துன்பமும் வேதனையும் அதிர்ச்சியான நிகழ்வுகளின் நினைவுகளும் கண்ணீரும் தான்.

மியான்மார் இராணுவம் அண்மையில் மேற்கொண்ட ஆட்சிக்கவிழ்ப்பின் காரணமாக அந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களும் ஆழமாகப் பாதிக்ப்படப்போகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். இருப்பினும் இவ்வாட்சிக் கவிழ்ப்பின் காரணமாக வார்த்தைகளால் விபரிக்க முடியாத மிகப்பயங்கரமான சூழலைச் சந்திக்கப் போவது உரோகிங்கியா முஸ்லிம் மக்களே என்பது மறுக்கப்படமுடியாத உண்மையாகும். இந்த மக்களுக்கு ஆண்டவனின் துணை கிடைக்கட்டும்!

நன்றி: டெய்லிசபா.கொம் (dailysabah.com)

முற்றும்.