கொரோனா ஊரடங்கு: வர்த்தகர்களுக்கு உதவித்தொகை வழங்கும் விக்டோரியா மாநிலம்

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் விமான நிலையத்தில் உள்ள Holiday Inn தங்கும் விடுதியில் கொரோனா பரவல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 12 முதல் 5 நாட்கள் முழு அடைப்பை அறிவித்தது விக்டோரியா மாநிலம்.
காதலர்கள் தினம் மற்றும் லூனார் புத்தாண்டு நாள் வந்த காலத்தில் அறிவிக்கப்பட்ட இந்த முழு அடைப்பினால் உணவகங்கள், பூச்செண்டு தயாரிப்பவர்கள், கலைஞர்கள், தங்குமிட வசதிகளை வழங்குபவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடுமையான பொருளாதார இழப்பை சந்தித்ததாகக் கூறப்படுகின்றது.
இதனையடுத்து, Circuit Breaker Support Package என 143 மில்லியன் டொலர்கள் மதிப்பிலான உதவித்திட்டத்தை விக்டோரியா மாநிலத்தில் உள்ள சுமார் 50,000 வர்த்தகர்களுக்கு உதவும் விதமாக அம்மாநில அரசாங்கம் அறிவித்திருக்கிறது.
இதன் மூலம் ஒவ்வொரு வர்த்தகரும் சுமார் 2000 டொலர்களை அரசின் உதவியாக பெற முடியும் என அவுஸ்திரேலிய ஊடகமான ஏபிசி செய்தி வெளியிட்டிருக்கிறது.