மாற்று வழிகள் தொடர்பில் ஆராயவேண்டியிருக்கும் – யாழ்ப்பாணத்தில் அமெரிக்கத் தூதுவர்

“பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக நீதியைப் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு இலங்கைக்குள்ளது” எனத் தெரிவித்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி.ரெப்லிட்ஸ், “இதனை அரசாங்கம் செய்யவில்லை என்றால் மாற்று வழிகள் தொடர்பில் ஆராயவேண்டியிருக்கும்” எனவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகங்களின் ஆசிரியர்கள், பிரதிநிதிகளை நேற்றுக் காலை தனியார் விடுதி ஒன்றில் சந்தித்து உரையாடியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“உலகம் முழுவதும் மனித உரிமைகள் பேணப்படுவதிலும், அவை மீறப்பட்டமையால் பாதிக்கப்பட்டோருக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதிலும் அதிக கரிசனை காட்டி வரும் நாடு அமெரிக்கா. அதனால்தான் இந்த விடயத்தில் நாம் அதிக ஈடுபாடுகாட்டி வருகின்றோம். போர்க் காலத்தில் யுத்தக் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானத்துக்கு விரோதமான செயற்பாடுகளால் பாதிக்கப்பட்டோர் கடந்த பன்னிரண்டு ஆண்டுகள் நீதி வேண்டி காத்து நிற்கின்றார்கள். இலங்கை இறைமையுள்ள, ஜனநாயக நாடு. தனது மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்கள் தொடர்பில் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக நீதியைப் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு இலங்கைக்குள்ளது.

இவ்வாறு பெற்றுக்கொடுக்கப்படவில்லை என்றால் மாற்று வழிகள் குறித்து சிந்திக்க வேண்டியிருக்கும். ஜெனீவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இது குறித்துத்தான் ஆராயப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு நீதி கிடைக்கும் என பன்னிரண்டு ஆண்டுகளாக காத்திருக்கின்றார்கள். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதைக்கூட அறியாது பன்னிரண்டு ஆண்டுகளாகத் காத்திருக்கின்றார்கள். அத்தகையோரின் மனநிலை எத்தகையது என்பது புரிகின்றது. நிலைமை இப்படி நீடித்துச் செல்ல முடியாது. இனியும் நீதி தாமதிக்கப்படமுடியாது. மனித உரிமைகள் நிலைநாட்டப்படுவதை உறுதி செய்யும் கடப்பாடு அமெரிக்கா உட்பட ஒவ்வொரு நாட்டுக்கும் உள்ளது.

இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு சர்வதேச நியமங்களுக்கு அமைவாக விசாரணைகளை நடத்தி, உண்மைகளைக் கண்டறிந்து, பொறுப்புக்கூறலை நிலைநாட்டி, இழப்பீடுகளை வழங்கி, மீள நிகழாமையை உறுதிப்படுத்தும் வகையிலான தீர்வுகளை கண்டறிய வழிசெய்யப்பட வேண்டுமென வலியுறுத்துகின்றோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அதற்கான முயற்சிதான் முன்னெடுக்கப்படுகின்றது.

தனது கடப்பாட்டை நிறைவு செய்ய வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்கு உண்டு. அதனைத்தான் நாமும் வலியுறுத்தி நிற்கின்றோம். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையும் அதற்கான முயற்சிகளைத்தான் முன்னெடுக்கின்றது. தமது பொறுப்பை சம்பந்தப்பட்டவர்கள் கவனத்திற்கொள்ளாவிட்டால், மாற்று வழிகளை தேட நிர்ப்பந்தம் சர்வதேசத்துக்கு ஏற்படலாம். அந்தக் கட்டாயம் ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கும் ஏற்படும்.

மனித உரிமைகளை நிலை நிறுத்துவதில் பங்களிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் அமெரிக்க அரசு விரும்புகின்றது. அதனால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா அதிக பங்களிப்பை எதிர்காலத்தில் வழங்குவதற்கு முன்நிற்கும” எனவும் அமெரிக்கத் தூதுவர் தெரிவித்தார்.