‘பயங்கரவாதத்தை எந்த நிலையிலும் நியாயப்படுத்த முடியாது’ – ஜெனிவாவில் இந்தியா

“பயங்கரவாதத்தை எந்த நிலையிலும் நியாயப்படுத்த முடியாது என்பதை, மனித உரிமை அமைப்புகள் உணர வேண்டும், எனத் தெரிவித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்,  ”மனித குலத்தின் மிகப் பெரும் அச்சுறுத்தலாக, பயங்கரவாதம் உள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின், 46வது கூட்டம், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில், நடந்தது. இதில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையில் பங்கேற்ற, ஜெய்சங்கர்  உரையாற்றுகையில்,

”பயங்கரவாதம் என்பது மனித குலத்தின் மிகப் பெறும் அச்சுறுத்தலாக தொடர்ந்து செயல்படுகிறது. பயங்கரவாதத்தால் நீண்ட காலம் பாதிக்கப்பட்ட நாடு என்ற அடிப்படையில், பயங்கரவாதத்துக்கு எதிராக, சர்வதேச ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என்பதை, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

பயங்கரவாதம் என்பது, உயிர் வாழும், அடிப்படை உரிமையை பறிக்கிறது என்பதை, மனித உரிமை அமைப்புகள் உணர்ந்தால் தான், அது சாத்தியமாகும்.

பயங்கரவாதத்தை எந்த நிலையிலும் நியாயப்படுத்த முடியாது. அதில் ஈடுபடும் குற்றவாளிகள், தங்களை பாதிக்கப்பட்டவர்களாக கூற முடியாது; இதை, மனித உரிமை அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும். பயங்கரவாதத்தை ஒடுக்குவது தொடர்பாக, ஐ.நா.,வில், எட்டு அம்ச திட்டத்தை, இந்தியா தாக்கல் செய்துள்ளது. மற்ற நாடுகளுடன் இணைந்து, அதை செயல்படுத்த நடவடிக்கை எடுப்போம்.

கொரோனா வைரஸ் பரவல் காலத்திலும், இந்திய மக்களுக்கு அனைத்து அடிப்படை உரிமைகளும், வசதிகளும் கிடைப்பதை உறுதி செய்துஉள்ளோம். அனைவருக்கும் தடுப்பூசி உள்ளிட்ட, மருத்துவ வசதிகள் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம். அத்துடன் உலகெங்கும், 70க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் தடுப்பூசி வழங்கி வருகிறோம்” என்றார்.