இந்தியாவில் பதிவாகும் தேசத் துரோக வழக்குகள் -ஒவ்வோர் ஆண்டும் 28% அதிகரிப்பு

கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் இந்தியாவில் இந்த தேசத் துரோகச் சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கை, ஒவ்வோர் ஆண்டும் 28% அதிகரித்திருக்கிறது என ஆர்டிகல் 14 என்கிற வழக்குரைஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்ட குழு கூறுகிறது.

நாட்டின் அரசாங்கத்துக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டுவதோ, தூண்ட முயற்சிப்பதோ தேச துரோக சட்டத்தின்படிக் குற்றமாகும். இந்தச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் ஒரு பிரிவில் இருக்கிறது. இந்த குற்றத்துக்கு அபராதம் அல்லது அதிகபட்சமாக ஆயுள் சிறை தண்டனை அல்லது இரண்டுமே கூட வழங்கப்படலாம்.

இந்நிலையில்,இந்தியாவின் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி), 2014- ஆண்டில் இருந்துதான் தேசத் துரோகச் சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தொடங்கியது.

தேச துரோகச் சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளின் எண்ணிக்கையாக என்.சி.ஆர்.பி சொல்லும் தரவு, ஆர்டிகல்-14 குழுவினர் குறிப்பிடும் எண்ணிக்கைத் தரவை விட குறைவாகவே இருக்கிறது.

“ஆர்டிகல் 14 குழு நீதிமன்ற ஆவணங்கள், காவல் துறையினரின் அறிக்கைகள் என பலவற்றையும் ஆராய்ந்துதான் எந்த குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்கைப் பதிவு செய்திருக்கிறார்கள் எனப் பார்கிறது” என அதன் தரவுதளத்தைக் கவனித்து வரும் லுப்யதி ரங்கராஜன் கூறுகிறார்.

“ஆனால் என்.சி.ஆர்.பி முதன்மைக் குற்றங்கள் அடிப்படையில் தங்களின் தரவுகளைக் கணக்கிடுகின்றன. அதாவது தேச துரோகச் சட்டத்தோடு, பாலியல் வன் கொடுமை, கொலை போன்ற குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தால், அவ்வழக்குகள் அந்தப் பிரிவுகளின் கீழேயே கணக்கு காட்டப்படும்.”

எப்படிப் பார்த்தாலும், இரண்டிலுமே தேச துரோக சட்டத்தின் கீழ் தொடுக்கப்படும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன.

கடந்த 10 ஆண்டுகளில், ஆர்டிகல் 14 தரவுத் தளத்தின் படி, பிகார், கர்நாடகா, ஜார்கண்ட், உத்தரப் பிரதேசம், தமிழகம் ஆகிய ஐந்து மாநிலங்களிலில்தான் மூன்றில் இரண்டு பங்கு தேச துரோக வழக்குகள் பதிவாகியிருக்கின்றன.

மத்திய மற்றும் மாநில அரசுகள் என இரு தரப்பில் இருந்தும் இச்சட்டப் பிரிவின் கீழ் வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன.

சில மாநிலங்களில் பல தசாப்தங்களாக நிலவும் மாவோயிஸ்ட் பிரச்னைகளால் இச்சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடுக்கப்பட்டன.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தேச துரோகச் சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகள், தற்போது நடந்து கொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டம் போன்ற மக்கள் போராட்ட இயக்கங்கள் தொடர்புடையதாக இருக்கின்றன.

இந்நிலையில், தேச துரோகச் சட்டத்தின் நடைமுறை இருப்பை எதிர்க்கும் மூத்த வழக்குரைஞரான காலின் கான்சால்வ்ஸ், இச்சட்டத்தை ஒரு பயமுறுத்தும் தந்திரமாக வைத்திருக்கிறார்கள் என்கிறார்.

“அரசு இளைஞர்களை இந்த தேச துரோகச் சட்டத்தைக் காட்டி பயமுறுத்துகிறது, அவர்களைச் சிறையில் அடைக்கிறது. இந்த சட்டத்தின் கீழ் விசாரிப்பது அல்லது தண்டனை பெறுவதை விட, இந்த சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் நடைமுறையே பெரிய தண்டனைதான்” என்கிறார் கான்சால்வ்ஸ்.

“நாம் அகிம்சையில் நம்பிக்கை வைத்திருக்கும் நாடு. நம் நாட்டு மக்களைத் தூண்டிவிடும் விதத்தில் சிலர் செயல்படுகிறார்கள் என்றால் அது நாட்டின் பிம்பத்தைப் பாதிக்கிறது. எனவே இந்தச் சட்டம் இப்போதும் நடைமுறையில் அவசியமானதாக, எதார்த்தத்தில் தொடர்புடையதாக இருக்கிறது” என்கிறார் பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான டாம் வடக்கன்.

இந்திய நீதிமன்றங்களால் தேச துரோகச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுவது தொடர்பாக சட்ட ரீதியிலான தீர்ப்புகள் மற்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

“தவறான செயல்களில் ஈடுபடுபவர்களை தடுக்கும் பெயரில், தங்கள் விமர்சனங்களை முன் வைப்பவர்களின் குரல்களை நெரிக்கக் கூடாது” என டெல்லி நீதிமன்றம் இந்த பிப்ரவரி மாதத்தில் ஒரு வழக்கு தொடர்பாகக் கூறியது.

“ஒரு குற்றம்சாட்டப்பட்டவர், பொது ஒழுங்கை சீர்குலைக்கும் நோகத்தோடோ அல்லது அரசுக்கு எதிராக வன்முறை செயல்களில் ஈடுபடும் ரீதியில் மக்களைத் தூண்டினாலோதான் அவர் மீது தேச துரோகச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்க வேண்டும்” என உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது.

மறுபுறம் அதிகாரப்பூர்வ தரவுகளைப் பார்த்தால் தேச துரோகச் சட்டத்தின் கீழ் தொடுக்கப்படும் வழக்குகளில் தண்டனை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 2014-ல் 33 சதவீதமாக இருந்த தண்டனை பெறுபவர்களின் எண்ணிக்கை, 2019-ம் ஆண்டு வெறும் 3 சதவீதமாகச் சரிந்திருக்கிறது.

“இது போன்ற தேச துரோக வழக்குகளில் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் தான், தேசத துரோகச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவர்கள் குறைவாக தண்டிக்கப்படுகிறார்கள். சில நேரங்களில் வழக்கின் அடி ஆழம் வரைச் சென்று ஆதாரங்களைத் திரட்டுவது சிக்கலாகிறது” என்கிறார் பாஜகவின் செய்தித் தொடர்பாளர் டாம் வடக்கன்.

கடந்த 2011-ம் ஆண்டு கார்டூனிஸ்ட் அசீம் த்ரிவேதி தேசத் துரோகச் சட்டத்தின் கீழ் காங்கிரஸ் அரசால் கைது செய்யப்பட்டார். அதற்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் அரசு அவரை விடுதலை செய்தது.

“நான் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன், எனக்கு அன்று பெரிய அளவில் ஆதரவு கிடைக்கவில்லை என்றால், நான் என் மீத வாழ்நாள் மற்றும் பணத்தை இந்த வழக்கில் இருந்து மீள்வதற்கு போராடியே செலவழித்திருக்க வேண்டி இருக்கும். நீதிமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் என்னை தற்காத்துக் கொள்ள நான் போராடிக் கொண்டே இருந்திருக்க வேண்டி இருக்கும்” என்கிறார் கார்டூனிஸ்ட் அசீம்.

நன்றி -பிபிசி