சூகிக்காக வருந்துகிறீர்களா? இது இனவழிப்பை பற்றி கவலைப்பட வேண்டிய நேரம் – தமிழில் ஜெயந்திரன்

59
147 Views

நூறு வகையான இனக்குழுமங்களைக் கொண்டதும் இந்தியா, பங்களாதேஷ், சீனா, லாவோஸ், தாய்லாந்து போன்ற நாடுகளுடன் எல்லைகளைப் பகிர்ந்துகொள்கின்ற ஒரு தென்கிழக்காசிய நாடுமான மியான்மாரில், அங்குள்ள அரசை இராணுவம் கைப்பற்றி விட்டது என்ற செய்தியோடு கடந்த வாரம் விடிந்தது. அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி (Aung San Suu Kyi) அவரது மிக நெருங்கிய சகாவும் மியான்மாரின் அதிபருமான வின் மியின்ற் (Win Myint) ) அவரது கட்சியின் உறுப்பினர்கள், தேசிய சனநாயக சபை (National League of Democracy – NLD)  போன்றோர் மியான்மார் இராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றனர். ஓராண்டு காலம் நீண்டு செல்லும் அவரசகாலச் சட்டத்தை அந்நாட்டு இராணுவம் உடனடியாகப் பிரகடனம் செய்திருக்கிறது.

மக்களால் தேர்தல் மூலமாகத் தேர்வுசெய்யப்பட்ட அரசுகளைக் கவிழ்க்கும் போது அந்த அரசுகள் ‘ஊழல்கள்” ‘மோசடிகள்” போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகக் கூறியே அனைத்து ஆட்சிக் கவிழ்ப்புகளும் நிகழ்த்தப்படுகின்றன என்பது அனைவரும் அறிந்த அப்பட்டமான உண்மையாகும். ‘ரற்மடோ’ (Talmadaw) என்ற உத்தியோகபூர்வ பெயரைக் கொண்ட மியான்மார் இராணுவம் இதே குற்றச்சாட்டையே தாம் கவிழ்த்த அரசின் மீதும் சுமத்தியிருக்கிறது.

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் 80 வீதமான வாக்குகளைப் பெற்று தேசிய சனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்றிருந்தது. இராணுவம் பெற்ற வாக்குகளுடன் ஒப்பிடும் போது, 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலை விட அதிக வித்தியாசத்தோடு ஆளுங்கட்சி வெற்றி பெற்றது. அவ்வேளையில் ஆங் சான் சூகியின் கட்சி, வாக்கு மோசடி செய்ததாக இராணுவம் குற்றஞ்சாட்டியிருந்தது,

சூகியின் என்எல்டி கட்சி நாடாளுமன்றத்திலுள்ள 476 ஆசனங்களில் 396 ஆசனங்களைப் கைப்பற்றிய அதேவேளை இராணுவத்துக்குச் சார்பான யூனியன் ஒற்றுமை மற்றும் அபிவிருத்திக்கட்சி (Union Solidarity and Development Partu – USDP) தேர்தலில் 33 ஆசனங்களை மட்டுமே பெற்றிருந்தது.

தேர்தல் நிறைவுபெற்று, அடுத்த அரசை அங்கீகரிப்பதன் மூலம் தேர்தல் முடிவுகளை நடைமுறைப்படுத்தும் நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நடைபெற இருந்த நாளுக்கு முன்னைய நாள் அரசைக் கவிழ்க்கும் நிகழ்வு (Coup d’etat) அரங்கேற்றப்பட்டது.

மியான்மார் நாட்டின் அரசியலில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைச் செலுத்தி வருகின்றவரும், அந்நாட்டில் 2011ஆம் ஆண்டில் ஒரு ஆரம்பகட்ட சனநாய மாற்றம் தொடங்கப்பட்ட சூழலிலும் இராணுவத்தின் வலிமையை வெற்றிகரமாகத் தக்கவைத்து வந்தவருமான, பாதுகாப்பு சேவைகளின் உயர் கட்டளை அதிகாரியான (Commander-in-Chief) ) மீன் ஆங் ஹ்லேங் (Min Aung Hlaing) தற்போது நாட்டின் அதிபராக இருக்கிறார்.

இராணுவ ஆட்சிக்காலத்தில்

ஜெனரல் ஆங் சானின் (Aung San) மகளே சூகி (Suu Kyi) ஆவார். பிரித்தானிய காலனீய ஆட்சியிலிருந்து 1948ஆம் ஆண்டில் மியான்மாரின் விடுதலையை வென்றெடுத்தவராக அவர் போற்றப்படுகிறார். அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, சூகி 2010ஆம் ஆண்டு வரையும் ஏற்கனவே 15 ஆண்டுகளாக வீட்டுக்காவலில் தடுத்து வைக்கப்பட்டு உலகில் அதிகம் அறிமுகமான அரசியல் கைதி என அறியப்படுகிறார்.

வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த போது 1991ஆம் ஆண்டு சூகிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதுடன் ‘வலிமையற்றவர்களின் வலிமைக்கு எடுத்துக்காட்டானவர்” என்ற புகழாரமும் அவருக்குச் சூட்டப்பட்டது.

கடந்த முதலாம் திகதி திங்கட்கிழமை ஆட்சி கவிழ்க்கப்பட்ட நேரத்தில், மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த முன்வர வேண்டுமென்று சூகி அறைகூவல் விடுத்திருந்த போதிலும், வீதிகள் அனைத்தும் அங்கு அமைதியாகவே காட்சியளிக்கின்றன. அத்துடன் நகரங்கள் எல்லாவற்றிலும் இராணுவம் தமது ரோந்து நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதுடன் இரவுநேர ஊரடங்குச் சட்டமும் அங்கு அமுல் நடத்தப்படுகிறது.

ஒரு சில பொதுமக்கள் மட்டும் கறுப்புப் பட்டியைத் தங்கள் ஆடைகளில் அணிந்திருக்கும் அதே வேளை, சில மருத்துவப் பணியாளர்கள் அமைதிப் போராட்டம் என்பதைக் குறித்துக்காட்டும் சிவப்புப்பட்டிகளை அணிந்திருக்கிறார்கள். முன்னர் இராணுவ ஆட்சி நடைபெற்ற காலங்களில் இராணுவமயமாக்கலுக்குத் அமைதியான தமது எதிர்ப்பைப் பதிவு செய்வதற்காக வெவ்வேறு நிறப்பட்டிகளை அணியும் போராட்டம் முன்னர் கைக்கொள்ளப்பட்டிருந்தது.

கடந்த காலங்களில் நாட்டில் நிகழ்த்தப்பட்ட குருதி தோய்ந்த ஆட்சிக்கவிழ்ப்பு நிகழ்வுகளும் அவற்றைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுகளின் நினைவுகளும் மக்கள் மனங்களில் இன்னும் பலமாக இருப்பதால் இன்றைய சூழ்நிலையில் பொதுமக்கள் தமது எதிர்ப்பைக் காட்டத் துணிந்து முன்வரமாட்டார்கள்.

முன்னர் பர்மா என்று அழைக்கப்பட்ட மியான்மாரில் 1962ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பின் பின்னர் தொடர்ந்து 12 வருடங்களாக நாட்டில் இராணுவ ஆட்சி நடைபெற்றது. இக்காலப் பகுதியில் தேசிய பொருண்மியம், அரசியல், அரச அதிகார நடைமுறை (state bureaucracy) போன்ற விடயங்களில் இராணுவத்தின் பங்கு மிகவும் பரவலாக்கப்பட்டது.

மீண்டும் ‘8888″ என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட நாடளாவிய மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் பின்னர், 1988ம் ஆண்டில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதோடு, 2013ஆம் ஆண்டு வரையும் அதாவது, 2011இல் தமக்குச் சார்பான கட்சியான யுஎஸ்டிபியிடம் ஆட்சியைக் கையளிக்கும் வரையும் 23 வருடங்களுக்கு இராணுவம் தமது ஆட்சியைத் தக்கவைத்திருந்தது.

இனமோதல்கள்

இராணுவ ஆட்சி மட்டுமன்றி, அங்கு நிகழ்கின்ற உள்நாட்டுப் பிரச்சினைகளும் அந்த நாட்டின் இன்னொரு முக்கிய பிரச்சினையாகும். பர்மாவின் தேசியவாதத்தையும் தேரவாத புத்த மறையையும் ஒருங்கிணைத்து, அரை நூற்றாண்டு காலமாக மியான்மாரை ஆட்சி செய்த இராணுவ அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ ஆட்சி, கிட்டத்தட்ட 100 இனக்குழுமங்கள் வாழ்கின்ற அந்த நாட்டில் சிறுபான்மை மக்களை அடக்கியாளும் ஒரு ஆட்சியாகவே இருந்திருக்கிறது.

அந்த நாட்டில் நடைபெற்றுவருகின்ற இன அடிப்படையிலான மோதல்களை நோக்கும் போது, அது ஏழு தசாப்தங்களுக்கு மேலாக நீண்டு செல்கின்ற, உலகில் மிக நீண்ட காலம் நீடிக்கின்ற இனமோதல் என்று சொல்வது மிகையாகாது.

மியான்மார் அரசும் அந்நாட்டு இராணுவமும் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கும் 16 இனக்குழுமங்களுக்கு எதிராகப் போராடி வருகின்றன. இவற்றில் சில குழுக்கள் தமது சுயநிர்ணய உரிமைக்காகப் போராடிவருகின்ற அதே வேளை வேறு சில குழுக்கள் தமது சுதந்திரத்துக்காகவும் அதிகரிக்கப்பட்ட தன்னாட்சிக்காகவும் அல்லது அந்நாடு மாநில சுயாட்சிமுறையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துக்காகவும் போராடிவருகின்றன.

நிலைத்து நிற்கும் மோதல் தவிர்ப்பையும் நீடித்த அமைதியையும் ஏற்படுத்த பல முயற்சிகள் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அவை எதுவுமே வெற்றிபெறவில்லை. 2015ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலைத் தொடர்ந்து, சூகியின் என்எல்டி கட்சி ஆட்சியைக் கைப்பற்றிய போது, இந்த மோதல்களை ஒரு முடிவுக்குக் கொண்டுவருகின்ற அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதையே தனது ஆட்சியின் முக்கிய இலக்காக அவர் கொண்டிருந்தார்.

பன்னாட்டுச் சமூகத்தால் வரவேற்கப்பட்ட இந்த நகர்வே, சனநாயகத்தை நோக்கிய மியான்மாரின் பயணத்தின் ஒரு முக்கிய இலக்காக இருந்தது. அரசுக்கும் பல்வேறுபபட்ட ஆயுதப் போராட்ட குழுக்களுக்கும் முக்கியமாக கச்சின் மக்களுக்கான கச்சின் சுதந்திர அமைப்பு (Kachin Independence Organization – KIO)  காயா மாநிலத்தின் கரென்னி இராணுவம் (Karenni Army) ஷான் மக்களின் ஷான் மாநில இராணுவம் (Shan State Army) போன்ற குழுக்களுக்கிடையே பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.

அது ஒரு இலகுவான பாதையாக இருக்கவில்லை என்பது மட்டுமன்றி அமைதியை நோக்கிய மியான்மார் நாட்டின் பயணமும் பலர் ஏற்கனவே அறிந்திருப்பது போன்று, தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் அதிகமாக இருப்பதன் காரணமாக, மென்மையான ஒன்றாகவும் இருக்கப் போவதில்லை. இப்போது இராணுவம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கின்ற காரணத்தினால் இந்த உள்நாட்டு மோதல்கள் மீண்டும் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.

ஹிலேங்கின் தலைமையில் இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பின் உண்மையான நோக்கம் எதுவென்று இன்னும் தெரியவில்லை. ஆனால் நாட்டின் அரசியல் செயற்பாடுகள் அனைத்திலும் இராணுவத்தின் முக்கிய பங்கைப் பேணிப்பாதுகாப்பதே அதன் முக்கிய நோக்கமாக இருக்கும் என ஊகிக்கலாம். அமெரிக்கா, ஏனைய மேற்குலக அரசுகள், துருக்கி ஆகியவை, நடத்தப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு தொடர்பாகத் தமது கண்டனத்தைப் பதிவுசெய்திருக்கின்றன. ஆனால் துரதிட்டவசமாக, ஐநா பாதுகாப்பு மன்றம் கொண்டுவந்த ஒரு கண்டனத் தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரம் மூலம்; சீனா தடுத்திருக்கிறது.

உண்மையில் பேஜிங்குக்கும் (Beijing) ) சூகி, என்எல்டி கட்சி என்பவற்றுக்கும் இடையே நல்ல உறவே இதுவரை இருந்து வந்திருக்கிறது. ஆனால் மியான்மாரின் இராணுவத்தின் மீது முன்வைக்கப்படும் உலகளாவிய கண்டனம் நிலைமையை இன்னும் மோசமாக்க வழிசெய்யும் என்று சீனா எண்ணுவது இதற்குக் காரணமாக இருக்கலாம்.

ஆயுதப் போராட்டங்களை முன்னெடுக்கும் சில இனக்குழுமங்களுக்கு சீனா ஆதரவை வழங்கி வருகிறது என்று மியான்மாரின் இராணுவ அரசு அதன் மேல் முன்னர் குற்றம் சுமத்தி வந்திருக்கும் நிலையிலும், நீண்ட கால அடிப்படையில் மியான்மாரின் இராணுவ அரசும் சீனாவும் நல்லுறவைப் பேணுவதற்கான வாய்ப்புகளே அதிகமாகத் தென்படுகின்றன.

இன்னொரு வகையில் பார்த்தால், மியான்மார் நாட்டின் மேல் பன்னாட்டுச் சமூகத்தால் பிரயோகிக்கப்படும் அழுத்தம் குறிப்பிட்ட பிரதேசத்தில் சீனா கொண்டிருக்கும் நலன்களுக்குச் சாதகமாக அமையாது.

இது இப்படியிருக்க, 2021 ஜூலைக்கு முதல் ஹிலேங் ஓய்வுபெற இருக்கிறார் என்பதுடன் சீர்திருத்தத்தை மேற்கொள்ளக்கூடிய ஒருவர் கட்டளை அதிகாரியானால் இராணுவம் வைத்திருக்கும் நிகழ்ச்சி நிரலுக்கு அது சாதகமாக அமையப் போவதில்லை.

ஓய்வு பெற்ற பின்னர் ஹிலேங்கின் பலம் குறையக்கூடிய வாய்ப்பு இருக்கின்ற காரணத்தால் அவ்வகையில் ஹிலேங்குக்கு தனிப்பட்ட விதத்திலும் ஓர் ஆபத்து இருக்கிறது. உரோகிங்கியா மக்களுக்கு எதிராக இழைத்த குற்றங்களுக்காக பல பன்னாட்டு நீதிமன்றுகளில் அவர் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படுவார்.

ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கும் குழுக்களோடு பேச்சுவார்த்தைகளை இராணுவ அதிகாரம் தொடர்ந்து முன்னெடுக்குமா அல்லது முன்னெடுப்பது போன்று காண்பிக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் உரோகிங்கியா முஸ்லிம் மக்களது பிரச்சினையை மட்டும் இந்த இராணுவ அதிகாரம் கையிலெடுக்காது என்பதை உறுதிபடக் கூறமுடியும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here