இரு நாடுகளிடையே சிக்கித் தவிக்கும் காஷ்மீர் சுதந்திரம் பெறுமா?

77
191 Views

1947ஆம் ஆண்டுக்குப் பின் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் மூன்று முறை போர் மூண்டிருக்கிறது. அதில் இரு முறை காஷ்மீருக்காகப் போர் நடந்துள்ளது. இரு நாடுகளுமே காஷ்மீரை முழுமையாக உரிமை கோருகிறார்கள். எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதி (லைன் ஆஃப் கன்ட்ரோல்) என்றழைக்கப்படும் எல்லைப் பகுதிகளால் பிரிக்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே இருநாடுகளும் நிர்வகித்து வருகின்றன.

இந்நிலையில், 1948ஆம் ஆண்டு ஐ.நாவின் பாதுகாப்புச் சபை காஷ்மீர் மக்கள் இந்தியாவுடனோ அல்லது பாகிஸ்தானுடனோ இணைவதை முடிவு செய்ய பொது மக்கள் வாக்கெடுப்பை நடத்துமாறு தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் காஷ்மீர் தனி நாடாக இருக்கலாம் என்கிற வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அதே நேரம் காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா முழுமையாக இரத்து செய்துள்ளது.
இந்த சூழலில், கடந்த 5ஆம் திகதி பாகிஸ்தானின் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் பகுதியில் இருக்கும் கோட்லி எனும் இடத்தில் ‘காஷ்மீர் ஒற்றுமை நாள் கூட்டம்’ நடைபெற்ற போது, அதில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா நிறைவேற்றிய தீர்மானத்தின்படி பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், காஷ்மீர் மக்கள் தங்களது விருப்பப்படி பாகிஸ்தானுடன் இணையலாம் அல்லது சுதந்திர நாடாக இருக்கலாம் என்று தெரிவித்தார்.

அவருடைய இந்த அறிவிப்பு தொடர்பாக, தமிழ் நாட்டைச் சேர்ந்த ஊடகச் செம்மல் பவா சமத்துவன் ‘இலக்கு’ ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலை இங்கு தருகிறோம்.

கேள்வி – காஷ்மீரின் நில உரிமை சட்டம் நீக்கப்பட்டது மற்றும் அரசியல் தலைவர்கள் மீதான நெருக்கடிகள், அங்கு மக்கள் மத்தியில் என்ன மாதிரியான மாற்றத்தை கொண்டு வந்துள்ளது?

பதில் – இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 370 விதி எண் 35(அ) காஷ்மீர் மக்களின் நில உரிமையை பல காலமாக பாதுகாத்து வந்தது. இதன்படி வெளி மாநிலத்தவர் காஷ்மீரில் நிலம் வாங்க இயலாது. அண்மையில் இந்திய அரசு பிரிவு 370 மற்றும் விதி 35(அ) இரண்டையும் நீக்கிய பிறகு காஷ்மீரின் நிலமும் அதன் இயற்கை வளங்களும் இந்திய பெரு முதலாளிகளுக்கும் பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் முற்றாக திறந்து விட்டுள்ளது.

மேலும் காஷ்மீரில் வாழும் இஸ்லாம் மக்கள் தொகையை குறைக்கவும் அதை பிற இந்தியர்களின் குடியேற்ற காலனியாக்கவும் இதன் மூலம் இன அழிப்பு செய்யவும்   திட்டமிடுகிறது இந்திய அரசு. காஷ்மீரில் 15 காஷ்மீரிகளுக்கு ஒரு இராணுவ வீரர் என்றிருந்த இந்திய அரசின் முற்றுகை நடவடிக்கையினால் காஷ்மீரில் 4.5 லட்சம் இராணுவ படையினரும் முகாமிட்டிருந்தனர்.

காஷ்மீர் பிரிவினைக்குப் பின் மேலும் 45 ஆயிரம் படையினரை இந்திய அரசு அனுப்பி வைத்து, அரசியல் தலைவர்கள் பல கட்சித் தொண்டர்கள், இஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என  நான்காயிரத்துக்கும் மேற்பட்டோரை பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது இந்திய அரசு.

இந்த நடவடிக்கைகளின் மூலம் அவர்களை அரசியல் நடவடிக்கையில் இருந்து முற்றிலும் விலக்கி இதனது திட்டங்களை தடையின்றி செய்து முடிக்க துடிக்கிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு.

கேள்வி – காஷ்மீருக்கு சுதந்திரம் வழங்க தயார் என பாகிஸ்தான் அதிபர் கூறியிருப்பதன் அரசியல் நோக்கம் என்ன?

 பதில் – காஷ்மீருக்கு சுதந்திரம் வழங்க தயார் என்று பாகிஸ்தான் அதிபர் கூறியதன் உண்மையான நோக்கம் தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீருக்கு சுதந்திரம் வழங்குவது அன்று. காஷ்மீரில் போராடும் முஸ்லிம்களை இந்தியாவுக்கு எதிராக தூண்டி விடுவதும், அதனால் இந்திய அரசுக்கு மேலும் சிக்கல்களை உருவாக்குவதையுமே நோக்கமாகக் கொண்டது.

மேலும் தங்கள் அரசுக்கு எதிராக பாகிஸ்தான் முழுக்க எழுந்துள்ள மக்கள் போராட்டங்களையும், மக்கள் வெறுப்பையும் திசைதிருப்பும்  நோக்கமாகவே இதைப் பார்க்க வேண்டும். இந்தியாவைப் போலவே பாகிஸ்தானும் ஆக்கிரமிப்பு நாடுதான். பலுசிஸ்தான் பழங்குடி மக்கள் இன்னும் தங்கள் நாட்டை பாகிஸ்தான் ஆக்கிரமித்துக் கொண்டதாக கூறி அதற்கு எதிராகப் போராடி வருகிறார்கள்.

கேள்வி – அது காஷ்மீர் மக்களிடம் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது?

 பதில் – எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த வாய்ப்பில்லை. காரணம் பாகிஸ்தானில் இன்று வரை  ஜனநாயகம் முழுமையாக செயற்படவில்லை என்ற மனக்குறை காஷ்மீர் மக்களிடையே இருக்கிறது.

மேலும் ஒட்டுமொத்த பாகிஸ்தானும் வறுமை- வேலையின்மை- பொருளாதார தேக்கநிலையால்  திண்டாடிக் கொண்டிருக்கிறது. என்பதை அவர்கள் உணர்ந்தே உள்ளனர். சொந்த நாட்டு மக்களையே துன்பத்திலும் துயரத்திலும் வைத்திருப்பவர்களுக்கு இன்னொரு நாட்டின் விடுதலையை பற்றி பேச என்ன இருக்கிறது என்பது இன்றைய காஷ்மீரிகளின் எண்ணமாக இருக்கிறது.

இதனால் இந்திய ஆளுகைக்குள் இருந்தாலும் எந்த ஒரு காஷ்மீரியும்  பாகிஸ்தானுக்கு செல்ல விரும்புவதில்லை.

கேள்வி – காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக கொழும்பில் சிங்கள முஸ்லிம் மக்கள் மேற்கொண்ட போராட்டத்தின் அரசியல் பின்னணி என்ன?

பதில் – காஷ்மீர் மக்களுக்கு விடுதலை கிடைத்தால் இலங்கையில் தங்களுக்கும் ஒரு தனிநாடு கிடைத்துவிடும் என சிங்கள முஸ்லிம்கள் எண்ணக்கூடும். ஆனால் 100 சதவீதம் முஸ்லிம்களே உள்ள காஷ்மீரில் இன்றுவரை விடுதலை என்பது சாத்தியமாகாத போது, இலங்கை மக்கள் தொகையில் 20%உள்ள சிங்கள முஸ்லிம்களுக்கு இது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.

மேலும் தமிழீழ விடுதலைக்கு இலங்கை முஸ்லிம்கள் முழுமையாக பங்களிக்கவில்லை  என்ற உண்மையை நாம் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

கேள்வி – காஷ்மீரில் இந்திய படையினர் மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஏன் இந்திய மக்கள் கவலை கொள்வதில்லை?

பதில் – 1947 முதல் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காஷ்மீர் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் சிறைப்படுத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர் .

காணாமல்போன பலரின் உடல்கள் துப்பாக்கி தோட்டாக்கள் துளைத்த அடையாளங்களுடன் காஷ்மீர் முழுவதுமுள்ள புதைகுழிகளில் உள்ளதை காஷ்மீர் மாநில மனித உரிமை ஆணையம் தனது விசாரணை மூலம் கண்டறிந்தது.

காஷ்மீர் பொது பாதுகாப்பு சட்டத்தின்படி ஒருவரை எந்த குற்றச்சாட்டும் விசாரணையும் இல்லாமல் இரண்டு ஆண்டுகள் வரை சிறையில் அடைக்க முடியும் 2012 இல் கொண்டுவரப்பட்ட இச்சட்டத்தின்படி 18 வயதுக்குட்பட்டோரை கைதுசெய்ய தடை இருந்தும், இன்றுவரை இது முற்றிலும் மீறப்பட்டு 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள்- சிறார்கள் மசூதிக்கு செல்லும் வழியிலும் ஏன் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது கூட கடத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் பலர் காணாமல் ஆக்கப்பட்டனர். உறவினர்களின் உயிரிழப்புகள் மற்றும் சித்திரவதைகளினால் காஷ்மீரில் 49% குழந்தைகள் மன சிதைவு நோய்க்கு ஆளாகியுள்ளனர். 2012இல் ஐ.நா அமைப்புகள் எடுத்த ஆய்வின்படி காஷ்மீரில் 2 லட்சத்து 15 ஆயிரம் குழந்தைகள்  அனாதைகள் ஆக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அவ்வாண்டிலேயே எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி 20 ஆண்டுகால வரைக்குள் 17,000 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் அவர்களில் பெரும்பான்மையினர் பெண்கள்.

காஷ்மீரில் நடக்கும் மனித உரிமை மீறல்களை ஐ.நா அவையின் உயர் ஆணையம் மட்டுமின்றி சர்வதேச மற்றும் இந்திய மனித உரிமை அமைப்புகள்(PUDR/APCLC) கண்காணித்து கண்டித்து வந்தாலும், இவை இந்திய மக்களின் கவனத்திற்கும் வராமல் போவதற்கு காஷ்மீர் பற்றிய உண்மை செய்திகள் இந்திய மக்களிடம் சரிவர சென்று சேராததே காரணம்.

பெரும்பான்மையான ஊடகங்கள் இந்திய அரசின் நலன் காப்பவையாக இருப்பதே இதற்கு முக்கியமான காரணம்.

கேள்வி – பாகிஸ்தான் தனது பகுதியில் உள்ள காஷ்மீருக்கு சுதந்திரம் வழங்கினால், இந்தியாவும் தனது பகுதியில் உள்ள காஷ்மீருக்கு சுதந்திரம் வழங்குமா?

பதில் – ஒருபோதும் வழங்காது. காரணம் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம். இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் என்பதே ஆதிக்க விரிவாக்க நோக்கம் கொண்டது என்பது அதை அறிந்தவர்களுக்கு தெரியும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள முதல் அட்டவணையும்(Schedule) முதல் பிரிவும் இந்திய ஆட்சிப் பரப்பு பற்றியது.

அந்த அட்டவணை ஒன்றில்(Article 1) உள்ள மூன்றாவது உட்பிரிவு.

1) இந்தியாவின் ஆட்சிப் பகுதி என்பது பின்வருவனவற்றை உள்ளடக்கியதாய்  இருக்கும்.

  அ) மாநிலங்களின் ஆட்சி பகுதிகள் (Union – States)

2) முதல் அட்டவணையில் குறிக்கப்படும் உள்ள ஒன்றிய ஆட்சிப் பிரதேசங்கள். (Union Terriory எ.கா. பாண்டிச்சேரி)

3)ஈட்டி சேர்க்கக் கூடிய வேறு ஆட்சிப்   பிரதேசங்கள்.

இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய ஒன்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி இந்தியா வேறு ஒரு நிலப்பரப்பை  தனதாக்க முடியுமே ஒழிய இந்திய ஆட்சி பரப்புக்குள் உள்ள மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்கள் தன்னுரிமை அடிப்படையிலோ அல்லது வேறுவகையிலோ  பிரிந்து போக வழியில்லை .

மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட தீபகற்ப நாடான இந்தியாவை சுற்றி ஆட்கள் அற்ற நிலப்பரப்பு ஏதும் இல்லாத நிலையில் இலங்கை- நேபாளம்- பூடான்- வங்கதேசம்- மியான்மர்- போன்ற நாடுகள் விரும்பியோ விரும்பாமலோ எதிர்காலத்தில் இந்தியாவுடன் இணைய வழிவகை செய்யும் நோக்கம் இதில் இருக்கிறது. 1975இல் சிக்கிம் இப்படித்தான் இந்தியா தனது நிலப்பரப்பிற்குள் இழுத்துக் கொண்டது.

மேலும்இ இந்தியா என்பது தேசிய இனங்களின் சிறைக் கூடம்.இச் சிறைக்கூடத்திற்கு ஒருவர் உள்ளே  முடியுமே தவிர வெளியில் செல்வதற்கு வழியே இல்லை.

காஷ்மீரும் இந்தியாவிற்குள் அடைபட்ட சிறைக்கூடம் தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here