கட்சிக்குள் எற்பட்டுள்ள சரிவை சரிப்படுத்த வேண்டிய பொறுப்பு எம்மிடமே உள்ளது-பொன்.செல்வராசா

41
123 Views

எமது கட்சிக்குள் எற்பட்டுள்ள சரிவைச் சரிப்படுத்த வேண்டிய பொறுப்பு எம்மிடத்திலே தான் இருக்கின்றது என தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட உபதலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்.செல்வராசா தெரிவித்தார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகள் மற்றும் நிகழ்கால அரசியல் நிலைமைகள் தொடர்பிலான எழுச்சிப் பட்டறை நிகழ்வு இன்றைய தினம் தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட உபதலைவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தலைமையில் மட்டக்களப்பு வாசிகசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், கனகசபை, முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, மாநகர முதல்வர் தி.சரவணபவன், உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவர் கி.சேயோன் மற்றும் கட்சியின் பிரதேசக் கிளைகளின் பிரதிநிதிகள், வாலிபர் முன்னணியினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட பிரதித் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்.செல்வராசா அவர்கள் தலைமையுரையாற்றுகையில்,

கடந்த காலங்களில் எமது கட்சி சரிவுநிலையை எய்தியதென்பது அனைவருக்கும் தெரியும். அந்த அளவில் இந்தக் கட்சிகளின் செயற்பாடுகளை எவ்விதத்தில் நாங்கள் திருத்திக் கொள்ளலாம், மீளாய்வு செய்து கொள்ளலாம் என்பது தொடர்பில் ஆயராய்ந்ததன் அடிப்படையில் எமது குழுவின் பரிந்துரைக்கு அமைவாகவும், எமது செயற்பாடுகளை எமது தலைவர்களுக்குத் தெரியப்படுத்துவதற்காகவுமே இன்றைய இந்த எழுச்சிப் பட்டறை செயற்பாடு மேற்கொள்ளப்படுகின்றது.

அதற்கப்பால் எமது உறுப்பினர்கள் கட்சியின்மேல் பற்றுக் கொண்டிருந்தாலும், சிலர் கட்சியின் விதிகள், கொள்கைகள், வரலாறு போன்றவை தெரியாதவர்களாகவும், இதுவரை கட்சி சாதித்தது என்ன என்பதை அறியாதவர்களாகவும் இருக்கின்றார்கள். எனவே எமது கட்சியின் செயற்பாடுகள் அனைத்தும் எமது கட்சியிலுள்ளவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே விசேடமாக இந்தச் செயலமர்வை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.

எமது கட்சிக்கு எற்பட்டுள்ள சரிவைச் சரிப்படுத்த வேண்டிய பொறுப்பு எம்மிடத்திலே தான் இருக்கின்றது. நாங்கள் நினைத்தால் செய்ய முடியாதது ஒன்றுமில்லை. நாம் உறுப்பினர்களாக இருந்தாலும், ஒவ்வொருவரும் எமது கட்சியின் தலைவர்களாகவே இருக்கின்றோம். எமது விசேட தலைவர்கள் கட்டளைகளைப் பிறப்பித்தாலும், உள்ளுர்த் தலைவர்களாகிய நாங்கள் செயற்பாடற்றவர்களாக இருந்தால் எமது கட்சி செயலற்றதாகிவிடும் என்ற அடிப்படையில் எம்மனைவர்களின் ஒத்துழைப்பும் எமது கட்சியின் வளர்ச்சிக்குத் தேவையாக இருக்கின்றது என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here