ஊடகவியலாளர்கள் படுகொலை விவகாரம் – சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு CJA,CPJ ஆகிய அமைப்புக்கள் வலியுறுத்தல்

சிறீலங்காவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் படுகொலைகள், கடத்தல், காணாமலாக்கப்பட்டமை உள்ளிட்ட குற்றங்களுக்கு பொறுப்புக் கூற சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு மனித உரிமைகள் பேரவையை வலியுறுத்தி நீதி மற்றும் பொறுப்புக் கூறலுக்காக சர்வதேச ஊடக அமைப்பு (CJA) மற்றும் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்காக சர்வதேச அமைப்பு (CPJ) ஆகிய அமைப்புக்கள் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

சிறீலங்காவில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான துன்புறுத்தல், மிரட்டல், கண்காணிப்பு மற்றும் தாக்குதல்கள் என்பன குறித்து 194 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ராஜபக்சக்களின் முன்னைய ஆட்சிக் காலத்தில் ஊடகவியலாளர்கள் இலக்குவைத்துப் படுகொலை செய்யப்பட்டதாகவும், வெள்ளை வான் கொமாண்டோக்கள் ஊடகவியலாளர்களை இலக்கு வைத்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோட்டபய ராஜபக்ச மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவில் உள்ள “திரிப்போலி படைப்பிரிவு” ஊடகவியலாளர்களுக்கு எதிரான நடவடிக்கையில் கொண்டிருந்த ஈடுபாட்டை இந்த அறிக்கை விபரித்துள்ளது.

எனினும் சிறீலங்காவில் ஆயிரக்கணக்கானவர்கள் கடத்தப்பட்டமை தொடர்பில் படைத் தரப்பினர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை 2019 டிசம்பரில், ராஜபக்சக்கள் மறுத்தனர். இவை போலிக் குற்றச்சாட்டுக்கள் என அவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் இராணுவ புலனாய்வு பிரிவில் உள்ள திரிப்போலி படைப்பிரிவுடன் தொடர்புடையவர்களே ஊடகவியலாளர்கள் லசந்த விக்ரமதுங்க படுகொலை, கீத் நொயாஹர் கடத்தல், உபாலி தென்னக்கோன் மீதான தாக்குதல் மற்றும் பிரகீத் எக்னெலிகொட கடத்திக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கம் உள்ளிட்டவற்றுடன் தொடர்பட்டிருந்ததாக குற்றச்சாட்டுக்கள் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிறீலங்காவில் ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்ச பதவிக்கு வந்ததில் இருந்து ஊடகவியலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை மேலும் விவரிக்கிறது.

சிறீலங்காவில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்புக் கூறுவது தொடர்பில் முன்னைய அரசாங்கங்கள் பல வாக்குறுதிகளை வழங்கின. எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஆட்சியில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு பொறுப்புக்கூறும் செயன்முறை தோல்வியுற்றுள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறீலங்காவில் பொறுப்புக்கூறல் செயல்முறைகளை உறுதி செய்தல், ஆதாரங்களை சேகரித்து பாதுகாப்பதற்கான ஒரு பொறிமுறையை நிறுவுதல், சிறீலங்காவில் மனித உரிமைகள் நிலைமையை மேம்படுத்துதல் மற்றும் சிவில் சமூக முயற்சிகளுக்கு ஆதரவளித்தல் போன்ற ஒரு புதிய தீர்மானங்களை ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளார்.

இந்நிலையில் ஊடகவியலாளர்களுக்கு எதிரான துன்புறுத்தல்களை உடனடியாக நிறுத்துதல், ஊடகவியலாளர்களுக்கு எதிராக இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்தல் உள்ளிட்ட விடயங்களையும் இந்தப் பரிந்துரைகளில் உள்ளடக்க வேண்டும் எனவும் சர்வதேச ஊடக அமைப்பு (CJA) மற்றும் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்காக சர்வதேச அமைப்பு (CPJ) ஆகிய அமைப்புக்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.