ஜெனீவா கூட்டத் தொடர் இம்முறை இணைய வழியாகவே நடைபெறும் – பல நாடுகள் எதிர்ப்பு

ஜெனீவாவில் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் பெரும்பாலான நிகழ்ச்சிகள் இணைய வழியாகவே நடைபெறும் எனத் தெரியவருகின்றது. வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவும் கொழும்பிலிருந்து இணைய வழியாக உரையாற்றுவதற்கே திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போதைய கொரோனா நிலைமைகளைக் கருத்திற்கொண்டு இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சுவிட்சர்லாந்தில் தற்போது பெருமளவுக்கு பொது முடக்கம் நடைமுறையில் உள்ளது. வெளிநாட்டவர்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால், பெரும்பாலான நிகழ்வுகளை இணைய வழியாக நடத்துவதற்கு மனித உரிமைகள் பேரவையின் ஏற்பாட்டுக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இணைய வழியில் இதனை நடத்துவதற்கான முடிவை இலங்கை உட்பட பல நாடுகள் எதிர்த்ததாக அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்திருக்கின்றார். கோவிட் 19 பரவலுக்கு மத்தியில் பாதுகாப்பான முறையில் இதனை நடத்துவதற்கான வாய்ப்பிருப்பதாக இந்த நாடுகள் சுட்டிக்காட்டியிருந்த போதிலும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இவ்வாறான முடிவை எடுத்திருப்பதாகவும் அமைர்சர் குறிப்பிட்டிருக்கின்றார்.

இந்தக் கூட்டத் தொடரில் கலந்துகொள்ளும் இலங்கைத் தூதுக்குழு கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்திலிருந்து இணைக்கப்படும் எனத் தெரிவித்த அமைச்சர், தானும் அங்கிருந்தே உரையாற்றுவதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஐரோப்பாவிலிருந்து செயற்படும் தமிழ் செயற்பாட்டாளர் ஒருவரைக் கேட்டபோது, இது குறித்து தமக்கு இதுவரையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறினார்.