மியான்மர் இராணுவ அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடை – ஐ.நா எச்சரிக்கை

மியான்மர் மீது விதிக்கப்படும் எந்த ஒரு பொருளாதாரத் தடையும், பொதுமக்களைப் பாதிக்காதவாறு இருக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க  மறுத்த இராணுவம், ஆட்சி கைப்பற்றியுள்ளது.

மேலும் ஆங் சான் சூச்சி, மியான்மரின் அதிபர் யு வின் மியிண்ட் மற்றும் முக்கியத் தலைவர்களையும் வீட்டுக் காவலில் இராணுவம் வைத்துள்ளது.

ஆங் சான் சூச்சி விடுதலை செய்யப்பட வேண்டும் என ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளதைத் தொடர்ந்து மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

அதே நேரம் மியான்மர் இராணுவ அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளதைத் தொடர்ந்து  பிற நாடுகளும் மியான்மர் மீது பொருளாதாரத் தடை விதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில்   ஐக்கிய நாடுகள் சபை,  மியான்மர் மீது விதிக்கப்படும் எந்த ஒரு பொருளாதாரத் தடையும், பொதுமக்களைப் பாதிக்காதவாறு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.