நாட்டுப்பற்றாளர் ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி..! – மது நோமன்

இன்று சத்தியமூர்த்தியின் நினைவு நாளையொட்டி அவர் தொடர்பான கட்டுரை பிரசுரமாகின்றது.

பெயருக்கேற்பவே சத்தியம் காத்த உத்தமனாக இந்த நாட்டுப்பற்றாளன் உறங்கிப்போக,   பெற்றவர்களும் அவனைப் பெற்ற புண்ணியவான்களாக கால ஏட்டில் பதிந்துபோனார்கள் என்றால் அது மிகையாகாது

தனது ஆற்றல்களால் மட்டுமன்றி தனது உயர் பண்புகளாலும் பலராலும் அறியப்பட்டு நேசிக்கப்பட்ட ஊடகவியலாளர் பு. சத்தியமூர்த்தி அவர்கள், ஒரு பல்துறை நாயகன்.  தாயக மண்ணில் காத்திரமான தடங்களைப் பதித்த அவரது சுவடுகள் அழகானவை மட்டுமல்ல ஆழமானவையுங்கூட.

ஐப்பசித் திங்கள் 30ஆம் நாள் 1972 அன்று இணுவில் வைத்தியசாலையில் மலர்ந்த இம்மலர் ஈழப்போரின் இறுதிக் காலப்பகுதியில், மாசி 12, 2009 அன்று தேவிபுரத்தில் தனது விழிகளை மூடி உதிர்ந்துபோனதை இன்னமும் தான் பலரது இதயங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன.

தாயைப் போலவே தாய்மண்ணும் பெருமைகொள்ள வாழ்ந்து சென்றவர்களில் ஒருவனாக தன்னையும் அடையாளப்படுத்தி நிற்கும் சத்தியமூர்த்தி அவர்கள் ஒரு பல்துறை நாயகன்.  பத்திரிகை, சஞ்சிகை, வானொலி, தொலைக்காட்சி என பல்வேறு ஊடகங்களிலும் அவர் தனது சிறகுகளை விரித்திருந்தார்.

ஆரம்பத்தில் பொருண்மிய மேம்பாட்டு கழகத்தில் இணைந்த சத்தியமூர்த்தி அவர்கள் ‘ஆதாரம்’ சஞ்சிகையின் வெளியீட்டுப் பிரிவில் செயலாற்றத் தொடங்கினார். பின்னர் ஈழநாடு, ஈழநாதம், ஈழமுரசு ஆகிய பத்திரிகைகளில் அரசியல் களநிலவரம், விமர்சனம் மற்றும் பல கட்டுரைகளை ஆழமாக எழுதிவந்தார்.

அதேவேளை வெளிச்சம் சஞ்சிகையில் கவிதை, சிறுகதை என பல்வேறு ஆக்கங்களை தனது பெயரிலும் பல்வேறு புனைபெயர்களிலுமாக (பு. சிந்துஜன், விவேகானந்தன், கதிர்காமத்தம்பி, ஹம்சத்வனி) வெளியிட்டுக்கொண்டிருந்தார். இதில் சிந்துஜன் என்பது அவரது உடன்பிறந்த சகோதரனுடையதாகும் (மாவீரன் கப்டன் சிந்துஜன்). அந்நினைவாக தனது ஆருயிர் மகளுக்கும் சிந்து என்றே பெயரிட்டார்.

 எழுகலை இலக்கியப் பேரவை என்பதன் மூலமாக வன்னியில் உள்ள எழுத்தாளர்கள், போராளி எழுத்தாளர்களின் ஆக்கங்களை சேகரித்து நூல்களாக வெளியீடு செய்திருந்தார். திருமணத்திற்கு முன்பும் பின்புமாக, அவரது அருமைத் துணைவியார் நந்தினி அவர்கள், இப்பணிகளில் சத்தியமூர்த்திக்குத் துணையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும் சமர்கள் நடக்கும்போது பல நேரடி வர்ணனைகளை ஈழநாதம் பத்திரிகைக்காக செய்திருந்தார். புலிகளின் குரல், ஐ.பி.சி. மற்றும் கனேடியத் தமிழ் வானொலி என்பனவற்றில் அவரது கருத்துப் பதிவுகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன.

அனைத்துலகத் தொடர்பகத்தின் ரீ.ரீ.என். தொலைக்காட்சியில் நாள்நோக்கு, அரசியல் களம் போன்ற நிகழ்ச்சிகளை வழங்கியிருந்தார். நிதர்சனம் தொலைக்காட்சியில் நிலவரம் நிகழ்ச்சியை திறம்பட செய்துகொண்டிருந்தார்.

இவ்வாறு பதிவு செய்யப்பட்ட பணிகள் ஒருபுறமும் பதிவுக்கு அப்பாற்பட்டு, தேசப்பற்றோடும் கருணை உள்ளத்தோடும் அவர் ஆற்றிய அரும் சேவைகள் மறுபுறமுமாக அவரது வாழ்வியல் நீண்டு விரிந்து செல்கிறது.

எந்தவித வேறுபாடுகளும் இன்றி மனிதர்களை மதித்து நடக்கும் மகத்தான பண்புக்கு இலக்கணமாகவே இறுதிவரை அவர் வாழ்ந்தார் என்பது எவராலும் மறுக்கப்பட முடியாதது.

ஆற்றலும் அறிவும் அவரை கனம் செய்தபோதும் அவை தலைக்கு ஏறாமல் தன்னைக் தற்காத்துக்கொண்ட இனிய பண்பாளர்.  இளகிய நெஞ்சாளர். சொல் வேறு செயல் வேறு என்றில்லாது எப்போதும் சொல்லுக்கு முன் செயலாய் நடந்து காட்டியவர்.

ஆஸ்த்துமா நோயால் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டபோதும், அவ்வலிகளை புறந்தள்ளி தான் எடுத்துக்கொண்ட பணிகளை இரவுபகல் பாராது கண்விழித்து சரியான நேரத்தில் மிகநேர்த்தியாக முடித்துக்கொடுப்பதில் கர்மவீரனாகத் திகழ்ந்தார். நெஞ்சத்தில் தூய்மையும், நேர்விழியில் வாய்மையுமாய் வலம் வந்த அந்த நல்லோனிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள ஏராளம் உள்ளது.

இறுதிப்போரை சாட்சிகளற்ற யுத்தமாக முடித்துவிட சிங்களம் பாடுபட்டுக்கொண்டிருந்தது. அவ்வேளையில் உள்ளே நடப்பவற்றை வெளியுலகிற்கு தெரியப்படுத்தும் பணி மிகவும் முக்கியமானதாகவும் அதேவேளை மிகவும் ஆபத்தானதாகவும் இருந்தது. கற்பனைக்கும் அப்பாற்பட்ட அந்த கொடிய யுத்தத்திலும் அந்த தனது குடும்பம் குழந்தை என்று கட்டுண்டு கிடக்காது, தேசத்தையும் இனத்தையும் முன்னிறுத்தி தனது ஊடகப் பணிகளை வீச்சோடு முன்னெடுத்துச் சென்றார் சத்தியமூர்த்தி என்பதை இன்றுமட்டுமல்ல என்றுமே தமிழ் மக்கள் நன்றியோடு நினைவில் கொள்வார்கள்.