மியான்மர் இராணுவ ஆட்சியில்   சிக்கித் தவிக்கும் 10 இலட்சம் தமிழர்கள்

பர்மா என்று அழைக்கப்படும் மியான்மர், தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ளது. தாய்லாந்து, லாவோஸ், வங்கதேசம், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் இது எல்லையை பகிர்ந்து கொள்கிறது.

இங்கு வாழும் சுமார் 5.4 கோடி மக்களில் பெரும்பாலானோர் பர்மிய மொழி பேசுபவர்களாக உள்ளனர்.

1948ஆம் ஆண்டு மியான்மர் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றது. எனினும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு வெகுகாலம் நீடிக்கவில்லை. 1962 முதல் 2011 வரை இராணுவத்தின் ஆட்சியில் மியான்மர் இருந்து வந்த நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் ஜனநாயக தேசிய லீக் கட்சி வெற்றிபெற்று ஆங் சாங் சூச்சி ஆட்சியமைத்தார்.

இதைத் தொடர்ந்து மீண்டும் அந்நாடு இராணுவ ஆட்சிக்குள் சிக்கிக்கொண்டது. ஆனாலும்  49 ஆண்டுகளுக்கு மியான்மரை இராணுவம்தான் ஆட்சி செய்தது என்பதால், அது அந்த நாட்டு மக்களுக்கு புதிதல்ல. ஆனாலும்  மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இராணுவ ஆட்சியை எதிர்த்து போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் அங்கு வாழும் தமிழ் மக்கள் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் மியான்மரில் வாழ்ந்து வரும் தமிழர்களிடம் சர்வதேச செய்தி நிறுவனமான பிபிசி கண்ட நேர்காணலில், “இராணுவ ஆட்சியின்போது, ‘உங்களுடன் பேச வேண்டும்’ என்று கூறி அழைத்து செல்லப்பட்ட பெரும்பாலானோரை பத்து அல்லது இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு மீண்டும் பார்க்க முடியாத சூழல் 2011ஆம் ஆண்டுக்கு முன்புவரை நிலவி வந்ததாகவும், அது மீண்டும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் இயல்பு வாழ்க்கையை முடக்குகின்றது.

மேலும், நீதித்துறை, கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் ராணுவத்தின் ஆட்சியில் பாரபட்சம் காட்டப்பட்டதாகவும், அந்த நிலைமை படிப்படியாக மாறி வந்த வேளையில் அவை மீண்டும் கனவுபோல் மாறிவிட்டது.

எங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் கடந்த ஒரு வாரமாக தினமும் இரவு எட்டு மணிக்கு வீட்டிலுள்ள பாத்திரங்களை கொண்டு ஒலியெழுப்பி வந்தோம். மக்களாட்சிக்கு ஆதரவான இந்த ஒற்றுமை ஒலி, உணர்ச்சிவசப்பட்டு எங்களது கண்களில் கண்ணீரை வரவைக்கிறது. ஆனால் இராணுவமோ, இதுபோன்று ஒலியை எழுப்புவதாக யாராவது ஒருவர் புகாரளித்தாலும், ஊரிலுள்ள அனைவரையும் சிறையில் தள்ளிவிடுவோம் என்று எச்சரிக்கை விடுக்கிறது. நாங்கள் எங்களது விருப்பு, வெறுப்பை அமைதியான வழியில் வெளிப்படுத்துவதற்கு உரிமை கிடையாதா?   எனினும்   இராணுவத்துக்கு அஞ்சாமல் தொடர்ந்து பாத்திரங்களை கொண்டு ஒலியெழுப்புவதை தொடர்கின்றோம்.

கொரோனா காலத்தில் இணையத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதன் வழியே வர்த்தகம் மேற்கொள்ளவும், சந்தைப்படுத்தவும், கல்வி கற்கவும் என எண்ணற்ற புதுமைகளை வாழ்க்கையில் புகுத்திக்கொள்ள மக்கள் முயற்சித்து வந்த காலகட்டத்தில் எங்களது ஜனநாயக உரிமைகள் மீண்டும் பறிக்கப்பட்டுள்ளன.

மற்ற இனத்தை சேர்ந்தவர்களை போலவே, தமிழர்களும் மியான்மரில் எண்ணற்ற துன்பங்களுக்கு உள்ளாகி உள்ளனர். குறிப்பாக, தமிழர்கள் வசித்து வந்த நிலங்கள் காரணம் ஏதுமின்றி பறிக்கப்பட்டு உள்ளது. இராணுவ ஆட்சியில், வேலைவாய்ப்பு, கல்வி என எங்கு சென்றாலும் தமிழர்களுக்கு சமஉரிமை என்ற பேச்சுக்கே இடமில்லை.

மியான்மரின் குடிமகனுக்கு உரிய சலுகைகளை பெற தேவையான தேசிய அடையாள அட்டை, 90 சதவீதத்துக்கும் அதிகமான தமிழர்களுக்கு இன்னமும் கூட கொடுக்கப்படவே இல்லை.

மியான்மர் தமிழர்கள் சிறந்த கல்வியை பெற்று, நல்ல பணியில் இருப்பது என்பது அரிதான ஒன்றாக உள்ளது.  மியான்மரில் தமிழர்களை மருத்துவராக, பொறியாளராக, அரசு ஊழியராக பார்ப்பதென்பது மிகவும் அரிது. தமிழர்கள் பெரும்பாலும் தூய்மை பணியாளர்கள், உதவியாளர்கள் என கடைநிலை ஊழியர்களாகவே இன்னமும் நீடிக்கின்றனர்” என்று தெரிவித்துள்ளனர்.

மியான்மரில் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்வதாக கருதப்படுகிறது. குறிப்பாக, யாங்கோன் என்ற நகரத்தில் மட்டும் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களும், பக்கோ, மூன், கரீன், ஏராவடி உள்ளிட்ட மாநிலங்களிலும்  பெருமளவில் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அங்கு இன்றளவும் தமிழ் மொழி பேசப்பட்டு, கலாசாரமும், பாரம்பரியமும் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.