இந்திய புலனாய்வுப் பிரிவு இலங்கைக்கு வருகை

இலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் குறித்த விசாரணைகளில் இணைந்துகொள்வதற்கு இந்தியாவின் தேசிய புலனாய்வு முகவர் அமைப்பிற்கு இந்தியாவின் உள்துறை அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று ஒரு மாதத்திற்கு மேலாகியுள்ள நிலையிலேயே இந்திய உள்துறை அமைச்சு இந்த அனுமதியை வழங்கியுள்ளது

குண்டுவெடிப்புகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் தங்களிடம் உள்ள தகவல்களை பகிர்ந்துகொள்வதற்கு இலங்கை அதிகாரிகள் இணங்கியுள்ளதை தொடர்ந்தே இந்திய உள்துறை அமைச்சு இந்த அனுமதியை வழங்கியுள்ளது என இந்த விவகாரத்துடன் தொடர்புள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வைசி மோடி என்ற அதிகாரியின் தலைமையில் இந்திய தேசிய புலனாய்வு முகவர் அமைப்பை சேர்ந்த குழுவினர் இலங்கைக்கு வரவுள்ளார்.

இவர்கள் கேரளாவை சேர்ந்தவர்களிற்கு இலங்கை குண்டுவெடிப்புகளுடன் உள்ள தொடர்பு குறித்து விசாரணைகளை மேற்கொள்வார்கள்.

இலங்கையில் குண்டு தாக்குதல்களை வழிநடத்தியவர்களிற்கும் இந்தியர்களிற்கும் இடையில் சில பொதுவான தொடர்புகள் உள்ளமை தெரியவந்துள்ளது என இந்திய உள்துறை அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிகாரிகள் இதனை உறுதி செய்வதற்காக காத்திருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய அதிகாரிகளால் கடந்த மாதம் கேரளாவில் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவர் தான் இலங்கை தற்கொலைகுண்டுதாரிகளின் தலைவன் என கருதப்படும் ஜர்கான் ஹாசிமை தான் பின்பற்றிவந்ததாகவும் அவர் போன்ற தாக்குதலொன்றை முன்னெடுக்க திட்டமிட்டிருந்ததாகவும் குறிப்பி;ட்டிருந்தார்.

ஜஹ்ரான் தென்னிந்தியாவில் சில இளைஞர்களை தீவிரவாதமயப்படுத்தியிருந்தார் எனவும் அவர் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

இதேவேளைஇந்தியா தன்னிடமுள்ள அனைத்து விபரங்களையும் இலங்கையுடன் பகிர்ந்துகொள்ளும் என குறிப்பிட்டுள்ள இந்தியாவின் தேசிய புலனாய்வு முகவர்அமைப்பின் அதிகாரிகள் மடிக்கணிணிகளை ஆராய்ந்தவேளை கண்டுபிடிக்கப்பட்ட இலத்திரனியல் ஆதாரங்கள் உட்பட அனைத்தையும் இந்தியா பகிர்ந்துகொள்ளும் எனவும் தெரிவித்துள்ளனர்